என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஆப்பக்கூடல் அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே மல்லியூர் பவானி ஆற்று படுகையில் மணல் அள்ளுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் விரைந்தனர்.

    அந்த பகுதியில் இருந்து வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரி மீது படுதாவால் மூடப்பட்டு உள்ளே ஆற்று மணலை கடத்தியது தெரிய வந்தது.

    லாரியை ஓட்டி வந்த டிரைவர் கீழே குதித்து ஓட்டம் பிடித்தார். பிறகு போலீசார் மணலுடன் வந்த லாரியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மணல் கடத்திய புள்ளி யார்? என்பது குறித்து அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர்.
    பெருந்துறையை அடுத்துள்ள சேனடோரியம் அருகே பின்னால் வந்த பைக் மோதி பைக்கில் சென்ற பெயிண்ட் வேலை பார்க்கும் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள மேக்கூர் முதலியார் வீதி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 59). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது சொந்த வேலையாக சீனாபுரம் செல்வதற்காக தனது பைக்கில் சென்றுள்ளார். இவர் சேனடோரியத்தை அடுத்துள்ள மேம்பாலம் பகுதியில் சென்றார்.

    அப்போது இவருக்கு பின்னால் சுள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபுதேவன் மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் வந்த பைக் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த செல்வராஜின் பைக் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பெருந்துறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து செல்வராஜ் மட்டும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஈரோட்டில் 8-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி பூசாரி சென்னிமலை வீதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி லதா. இவர்களுக்கு கவுசல்யா என்ற மகளும், ரஞ்சித் என்ற மகனும் உள்ளனர். சேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    ரஞ்சித் 8-ம் வகுப்பு படித்து வந்தான். ரஞ்சித் சில நாட்களாகவே பள்ளிக்கு சரியாக போகாமல் இருந்து வந்துள்ளான். இதனால் லதா மகனை பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கினார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித் பள்ளிக்கு செல்ல தயாரானான். ஆனால் திடீரென்று பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளான். இதனால் ரஞ்சித்தின் பாட்டி பள்ளிக்கு செல்லுமாறு கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    பின்னர் லதா வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சமையலறையில் இருந்து ரஞ்சித்தின் அலறல் சத்தம் கேட்டு லதா திடுக்கிட்டு ஓடிவந்து பார்த்தார் . அப்போது ரஞ்சித் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து அலறிக்கொண்டு இருந்தான்.

    அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரஞ்சித் மீது எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    சிகிச்சைக்காக ரஞ்சித் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பு.புளியம்பட்டி அருகே கஞ்சா விற்ற மாமியார்- மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள நொச்சிகுட்டையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அங்கு கஞ்சாவுடன் இருந்த 2 பெண்களை போலீசார் மடக்கினர். விசாரணையில் அவர்கள் பெயர் கண்ணம்மாள் (வயது 55), ராஜாமணி (வயது 42) என தெரிந்தது. இருவரும் மாமியார் - மருமகள் ஆவர்.

    இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 160 கிராம் கஞ்சாவும் 1 லட்சத்து 770 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து நீர்மட்டம் 65 அடியை எட்டியது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி அங்குள்ள பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8113 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று அணையில் நீர்மட்டம் 65 அடியை எட்டியது.

    தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணையிலிருந்து குடிநீருக்காக 205 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. எதிர்பாராத பருவமழை பெய்யாததால் ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. அந்த வாய்ப்பு மிக குறைவாகவே இருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் பருவமழை பெய்து அணைக்கு தண்ணீர் வருவதால் ஆகஸ்ட்டு மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் நலிந்தோரான 1 கோடி பேருக்கு வீடு வீடாகச் சென்று ரூ.2 ஆயிரம் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கினார்.

    தமிழகத்திலேயே முதல் முறையாக கோபி நகராட்சியில் தந்தி வடம் மூலமாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சித்தோடு - சத்தியமங்கலம் சாலை விரிவாக்கப்பணி விரைவில் நடக்கும். இதை போல் கோபி புறவழி சாலை ரூ.19 கோடிமதிப்பில் அமைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த பணியும் தொடங்கும். கோபி இந்திரா நகரில் உள்ள ஏரி சீரமைக்கப்பட்டு சுற்றுலா தலம் கொண்டு வரப்படும். 6 மாதத்தில் இந்த பணி முடியும்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் நீர் வீழ்ச்சியில் கூட திடீர் திடீரென அவ்வப்போது மேலே இருந்து கற்கள் விழும் ஆனால் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் பன்னீராக விழுகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் உடைகள் மாற்ற தனித்தனி அறைகள் கடடப்படும். விடுமுறை நாட்களில் கொடிவேரி அணைக்கு 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள சுற்றுலா பூங்கா விரிவாக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் தங்கி அமர்ந்து செல்ல கலை அரங்கம் கட்டப்படும்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே தலைமையாக செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக நிறைவேற்றி வருகிறார்கள். தமிழகத்தில் நலிந்தோருக்கான ரூ.2 ஆயிரம் விரைவில் வழங்கப்படும். 1 கோடி பேருக்கு வீடு வீடாகச் சென்று இந்த 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கியது. தமிழக அரசு தான்.

    கல்வி துறைக்கு இந்த அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.கல்விக்காக விரைவில் தனி தொலைகாட்சி தொடங்கப்பட உள்ளது. ‘கியூ ஆர்’ கோடு மூலம் செல்போன் மூலம் பாடத்தை டவுன் லோடு செய்து படித்து கொள்ளலாம். இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டு உள்ளது. இதை மற்ற மாநிலத்தவர்களும் பாராட்டும் அளவு உள்ளது.

    பிளஸ்-2 படித்த உடனேயே ஆங்கிலத்தில் மாணவர்கள் பேசுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய புரோக்கர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரோந்தில் ஈடுபட்டு கொண்டிருந்த வீரப்பன்சத்திரம் போலீசாரிடம் சத்தி ரோடு அருகே உள்ள ஒரே வீட்டில் இரண்டு பெண்களை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர் அப்போது அந்த வீட்டில் இரண்டு பெண்கள் இருந்தனர்.

    அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண்கள் தாங்கள் வேலை தேடி வந்ததாகவும். தங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக இரண்டு பேர் இங்கே கூட்டி வந்து எங்களைக் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் பரபரப்பாக புகார் கூறினர்.

    இதன் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் விஜயகுமார் (வயது 48), பிரவீன் (வயது 23) என இருவரை கைது செய்தனர். இரு பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ஈரோட்டில் குடும்ப தகராறில் மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் புகைப்பட கலைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சூளை நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் வயது 33. திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக குடும்ப நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் குமாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அந்தப் பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது இதனால் கோபித்துக் கொண்டு அந்தப் பெண் அன்னை சத்யா நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சதீஷ் குமார் மனவேதனையில் இருந்துள்ளார். தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனக்குத்தானே உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் சதீஷ்குமார் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதிஷ்குமார் இன்று மதியம் பரிதாபமாக இறந்தார். இது வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆசனூர் அருகே காட்டு யானைகள் ரோட்டை மறைத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர் மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன.

    ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், ஜீர்கள்ளி, வனப் பகுதியில் போதிய மழை இல்லாததால் யானைகள் உணவு தேடி வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் சுற்றி திரிகின்றன. அப்போது சில சமயங்களில் யானைகள் ரோட்டுக்கு வந்து ரோட்டை மறித்து நிற்கிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானைகள் சென்ற பிறகு செல்கிறார்கள். இதன் காரணமாக போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அடர்ந்த வனப் பகுதியில் திண்டுகல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த ரோடு வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆசனூர் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆசனூர் அருகே குட்டியுடன் நேற்று காட்டு யானைகள் திடீரென சாலையை வழி மறைத்து அங்கு உள்ள மரக்கிளைகளை உடைத்து தின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட் டன.

    அந்த யானைகள் நீண்ட நேரம் ரோட்டில் உலா வந்தது. ரோட்டை மறித்து நின்ற யானைகள் தானகவே வனப்பகுதிகுள் சென்றது இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    டி.என்.பாளையத்தில் பஸ் படிகட்டில் இருந்து தவறி விழுந்து மாணவி காயமடைந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டிஎன்.பாளையம்:

    டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (49) தொழிலாளி இவரது மகள் சண்முகப்பிரியா (16), பங்களா புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 1 படித்து வருகிறார்.

    கடந்த 30-ந் தேதி டி.என்.பாளையத்தில் இருந்து பங்களாபுதூர் பள்ளிக்கு செல்ல, பஸ் நிறுத்தத்தில் இருந்து அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறினார்.

    அப்போது ஓட்டுநர் வெங்கிடுசாமி (45) அனைவரும் ஏறி விட்டார்கள் என்று நினைத்து பஸ்சை எடுத்தார்.

    அப்போது சண்முகப் பிரியா தடுமாறி படியில் இருந்து தவறி கிழே விழுந்தார். இதை கண்ட அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சை நிறுத்துங்கள் என சத்தம் போட்டனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

    இதில் தவறி விழுந்த மாணவி சண்முகப்பிரியாவிற்கு பின் பக்க தலை, மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்கு கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாணவியின் தந்தை பங்களாபுதூர் போலீசில் புகார் தெரிவித்தார். பள்ளி மாணவிக்கு விபத்து ஏற்படுத்தியதாக அரசு பஸ் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு- பெருந்துறை சந்தையில் 5-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க் கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி வரும் 5-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க் கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    சித்தோடு, ராயபாளையம், சண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல் பாளையம், ஆர்.என். புதூர், கோண வாய்க்கால், லட்சுமி நகர், காளிங்கராயன் பாளையம், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம் பரப்பு, செல்லப்பம் பாளையம், மாமரத்துப் பாளையம், மேட்டுப் பாளையம், நொச்சி பாளையம், தயிர் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், கே.ஆர். பாளையம், ராசாம்பாளையம், பி.பெ. அக்ரகாரம், மறவபாளையம், சி.எஸ். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.எஸ்.நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறை சந்தை.

    இந்த தகவலை ஈரோடு நகரியம் செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    பெருந்துறை அருகே போலி மதுபான ஆலை நடத்தி வந்த 8 பேரை கலெக்டர் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திருவாச்சி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போலி மதுபான ஆலை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சோதனை செய்யப்பட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னம்பட்டி அர்த் தனாரி, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம், குமார், ஈரோடு செங்கோடம் பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார், பவானி ராஜேஷ், சரவணகுமார், கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன சந்திரம் மாதேஸ்வரன், ஜெகதீசன் ஆகிய 8 பேரும் மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் மீதும் ரேசன் அரிசி கடத்தியது, போலி மதுபானங்கள் தயாரித்தது உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தது.

    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கதிரவனுக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    ×