என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தருமபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் செடியில் உள்ள தக்காளி வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் அதிகளவிலான தக்காளி அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

    ஈரோடு நேதாஜி மார்க்கெட்டிற்கு நாள்தோறும் 4 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். ஆனால் கடந்த இரு தினங்களாக சுமார் 10 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

    இதனால் நேற்று 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி இன்று 100 ரூபாய்க்கு விற்பனையானது. விலை குறைவாக இருந்த போதிலும் விற்பனை மந்தமாக இருந்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

    இரண்டு நாட்களுக்கு மேல் தக்காளி விற்பனை ஆகாமல் இருப்பதால் தக்காளி அழுக தொடங்கி விட்டது. இதன் காரணமாக வியாபாரிகள் சிலர் தக்காளிகளை குப்பையில் கொட்டி சென்றனர். இரண்டு நாட்களுக்கு மேல் இருப்பு வைக்க முடியாது என்பதால் குப்பையில் கொட்டியதாக வியாபாரிகள் சோகத்துடன் தெரிவித்தனர். இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.9.50 -க்கு விற்பனை ஆனது.
    ஈரோடு அடுத்த திண்டல் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 6½ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த திண்டல் ராம் நகரைச் சேர்ந்தவர் திலகம் (வயது 52). நேற்று மாலை திலகம் அருகில் உள்ள மாவு மில்லுக்கு சென்று மாவை அரைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அந்த சமயம் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

    அப்போது திலகம் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வர பின்னால் உட்கார்ந்து வந்த வாலிபர் திடீரென திலகம் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் செயினை பறித்தார்.

    பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திலகம் திருடன்.. திருடன்.. என அலறினார். ஆனால் மழை பெய்து கொண்டிருந்ததால் அவருக்கு உதவ யாரும் வரவில்லை. நடந்த சம்பவத்தை வீட்டில் வந்து அவர் கூறினார்.

    இதையடுத்து வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது கொள்ளை நடந்த இடத்தின் அருகில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த துணிகர நகை பறிப்பு கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே இன்று அதிகாலை கார் மீது லாரி மோதிய விபத்தில் மில் தொழிலாளர்கள் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பு.புளியம்பட்டி:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து விருதுநகர் நோக்கி ஒருலாரி சென்று கொண்டிருந்தது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைபார்க்கும் 6 பேர் ஒரு காரில் இன்று அதிகாலை 1 மணிக்கு புளியம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அந்த காரில் மில்லின் துணை மேலாளர் ஜெய் கணேஷ் மற்றும் சூப்பர் வைசர்கள் தங்கபாண்டியன், சங்கர், வீரராகவன், கோவிந்தராஜ், பாரதி ஆகிய 6 பேர் சென்று கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை 1.30 மணியளவில் பு.புளியம்பட்டி அருகே பொன்மேடு என்ற இடத்தில் சென்ற போது லாரியும் காரும் நேருக்கு நேர் ‘டமார்’ என்ற சத்தத்துடன் பயங்கரமாக மோதியது.

    இந்த திடீர் விபத்தால் சத்தியமங்கலம்- கோவை மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த கோர விபத்தில் கார் அப்பளம்போல்நொறுங்கியது. காரில் இருந்த மில்லின்துணை மேலாளர் ஜெய்கணேஷ் மற்றும் சூப்பர்வைசர்கள் சங்கர், தங்கபாண்டியன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற 3 பேரையும் ஆபத்தானநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரராகவன் இறந்து விட்டார். மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு பு.புளியம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போக்குவரத்தை சரி செய்தனர். அப்போது மழை தூறிக்கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

    எனினும் போலீசார் பொதுமக்கள் துணையுடன் இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்தால் புளியம்பட்டியில் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்த ஆண் பிணம் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த பெரிய வலசு, கொத்துக்காரர் வீதியில் உள்ள ஒரு சாக்கடையில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்கடையில் இறந்து கிடந்த அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    இறந்த கிடந்த நபர் வெள்ளை வேட்டியும், வெள்ளை பச்சை கலர் கோடு போட்ட டீ சர்ட்டும் அணிந்திருந்தார்.

    அவர்போதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் நேற்று இரவே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிய வருகிறது.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கொத்துக்காரர் வீதிப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    ஈரோடு அருகே ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்ததில் பெண் படுகாயமடைந்தார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு முத்தம்பாளையம், ஹவுங் யுனிட், அண்ணாநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது48) . கணவன் மனைவி இருவரும் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று இரவு விஜயலட்சுமி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து விஜயலட்சுமி தீயில் கருகினார்.

    பின்னர் விஜயலட்சுமியை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயலட்சுமிக்கு 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஈரோட்டில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
    ஈரோடு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து உள்ளது.

    இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்த நிலையில் ஈரோட்டில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா மாவட்ட பொது செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கலை செல்வன், கிருஷ்ண குமார், மாநில பிரச்சார அணி செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதை போல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தனர்.


    ஈரோடு மாநகராட்சி பகுதியில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என்று ஆணையர் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாநகராட்சி மண்டலம்-2,3 மற்றும் 4-க்குட்பட்ட சென்னிமலை ரோடு குடிநீர் மேல்நிலைத் தொட்டி, காந்திஜீ ரோடு குடிநீர் மேல்நிலைத் தொட்டி, காதர்பாட்ஷா குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆகிய மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஊராட்சி கோட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் தனிக் குடிநீர் திட்டப்பணிகளுக்கான பிரதான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை (8-ந் தேதி) மற்றும் 9-ந் தேதி என 2 நாட்கள் வார்டு எண்கள் 28,29,41,44,53,54,56,57 ஆகிய பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது. எனவே பொதுமக்கள் இதை ஏற்றுக் கொண்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கோபி:

    தடப்பள்ளி அரக்கன் கோட்டை -பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் விடுத்து உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கொடிவேரி பாசனத்திற்கு உட்பட்ட தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பழைய ஆய்க்கட்டு பாசனங்களுக்கு வருடந்தோறும் ஏப்ரல் 15 முதல் பிப்ரவரி 15 வரை பத்து மாதங்களுக்கு இரு போகம் நஞ்சை பாசனத்திற்கு நீர் திறந்து விடுவது வழக்கம்.

    2019 ஏப்ரல் 15 அன்று அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்த காரணத்தால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர் திறக்கப்படவில்லை. ஜூலை முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க கோரிக்கை விடுத்தோம். ஈரோடு மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் பொதுப்பணித்துறையும் கலந்து ஆலோசித்து வருகிற வாரங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பவானிசாகர் அணைக்கு வரத்து அதிகரிக்கின்ற பொழுதும் அணையின் நீர்மட்டம் 10 டீ.எம்.சி.க்கு மேலாக நீர் உயர்கின்ற பொழுது உங்களுடைய கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு நீர் திறக்க ஆவனம் செய்யப்படும் என உறுதியளித்தீர்கள்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாகவே பருவமழை தீவிரமடைந்த அணைக்கு நீர் வரத்து கூடியுள்ளது. எனவே உடனடியாக தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு வரும் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஈரோட்டில் புத்தக கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் இருந்த 50 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு காரைவாய்க்கால் மொய்தீன் வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது58). இவரது மனைவி கலாவதி. இவர்களுக்கு மீனா, ரம்யா, ரேகா, ஜனனி என 4 மகள்கள் உள்ளனர்.

    முருகேசன் ஈரோடு நேதாஜி ரோட்டில் சொந்தமாக புத்தக கடை வைத்து நடத்தி வருகிறார். முருகேசனின் வீடு இரண்டு மாடிகள் கொண்டதாகும். தினமும் இரவில் முருகேசன் தனது குடும்பத்தாருடன் முதல் மாடியில் தூங்குவது வழக்கம்.

    அதைப் போன்று நேற்று இரவும் முருகேசன் வீட்டின் கதவை உள் பக்கமாக தாழ்போட்டு சாவியை அருகில் சுவற்றில் பொருத்தப்பட்டு இருந்த பாக்ஸில் போட்டு விட்டு முதல் மாடியில் தூங்க சென்று விட்டார்.

    இந்நிலையில் நள்ளிரவில் இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் முருகேசன் வீட்டின் ஜன்னல் வழியாக ஒரு குச்சியை நீட்டி சுவற்றில் மாட்டியிருந்த சாவியை லாவகமாக வெளியே எடுத்தனர்.

    பின்னர் கதவை திறந்து வீட்டிற்குள் வந்த மர்ம ஆசாமிகள் பீரோ சாவியை திறந்து பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ 40 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் அள்ளிச் சென்றனர்.

    இன்று காலை தூங்கி எழுந்ததும் கீழே வந்த முருகேசன் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டும் பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது நகை மற்றும் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொள்ளையில் ஈடுபட்டது முருகேசனுக்கு தெரிந்த நபராக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    கடந்த 10 தினங்களுக்கு முன் 52 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 66.75 அடியாக உள்ளது. இன்று மதியம் 67 அடியை எட்டிவிடும்.
    சத்தியமங்கலம்:

    120அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 15 அடி சேறும், சகதியும் கொண்டது. 105 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    கடந்த ஆண்டு இதே நாளில் தென்மேற்கு பருவமழை பலமாக கொட்டி அணை நிரம்பியது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லை. எனினும் கடந்த 3 நாட்களாக தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இந்த மழையாலும் மேலும் நீலகிரியில் உள்ள பில்லூர் அணை நிரம்பி உள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் பவானி சாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று இரவு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது இன்று காலை 9 மணியளவில் சிறிது குறைந்தது.

    எனினும் அணைக்கு வினாடிக்கு 8660 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10 தினங்களுக்கு முன் 52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 66.75 அடியாக உள்ளது. இன்று மதியம் 67 அடியை எட்டிவிடும்.

    அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நால்ரோடு கிராமம் அருகே சாலையோர வனப்பகுதியில் வாலிபரை யானை மிதித்து கொன்ற சம்பவத்தால் பொதுமக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனச்சரகத்தில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

    இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைபொருட்களை சேதப்படுத்துவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று மாலை பவானிசாகர்- புஞ்சைபுளியம்பட்டி சாலையில் நால்ரோடு கிராமம் அருகே சாலையோர வனப்பகுதியில் ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாலையில் நடந்து சென்றபோது ஒற்றை யானை அப்பெண்ணை தாக்கி தும்பிக்கையால் தூக்கி வீசியது.

    இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அப்பெண்ணை காப்பாற்ற முயன்றனர். யானை பெண்ணின் அருகே நின்றுகொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அச்ச மடைந்தனர். அப்போது ஒற்றை யானை திடீரென பொதுமக்களை துரத்தியதில் அப்பகுதியில் நின்றிருந்த நால்ரோடு கிராமத்தை சேர்ந்த வாலிபர் குமார் (வயது 29) என்பவரை தும்பிக்கையால் கீழே தள்ளி காலால் மிதித்ததில் முகத்தில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த விளாமுண்டி வனச்சரகர் அமுல்ராஜ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் நின்றிருந்த ஒற்றையானையை விரட்டியடித்துவிட்டு யானை தாக்கி படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் இறந்த குமாரின் உறவினர்கள் மற்றும் நால்ரோடு பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று இரவு 10 மணியளவில் யானை வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க கோரி நால்ரோடு பகுதியில் சத்தியங்கலம்- மேட்டுப்பாளையம்- பவானிசாகர்- புஞ்சை புளியம்பட்டி இணைப்புச் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக், வனத்துறையினர் மற்றும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சாலை மறியல் நள்ளிரவு 11 மணி முதல் 12.30 மணி வரை நடந்தது.
    ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய நடத்திய சோதனையில் ஒரே நாளில் 110 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அடிதடி, வழிப்பறி ,திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பழைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக டிஜிபி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 5 போலீஸ் சப் டிவி சன்கனில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று செல்வ குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்பேரில் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் இரவு விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், காளை மாட்டு சிலை, கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி, திண்டல், சென்னிமலை ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதியில் சோனை நடந்தது.

    இந்த சோதனையில் மக்களை அச்சுறுத்தி வந்த 110 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் 40 பேர் மீது குற்ற வழக்குகளும், 52 பேர் நன்னடத்தை விதிகளை மீறிய பழைய குற்றவாளிகள் ஆவர். மேலும் போலி மதுபான ஆலை கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 18 பேர் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். இன்றும் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    ×