என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலத்தில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆட்சியில் நன்றாக மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இயற்கையே இந்த ஆட்சியை வாழ்த்தி வருகிறது. முதல்வர் தொடங்கி வைத்த குடிமராமத்து பணிகள் மழை நீர் விணாகாமல் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி மாணவர்கள் கைகளில் சாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறு கட்டி கொண்டும் மேலும் நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்து வர சொல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே? என ஒரு நிருபர் கேட்டதற்கு அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
“ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பழைய முறையே நடைமுறையில் உள்ளது. நாங்கள் யாரையும் எதற்காகவும் நிர்பந்திக்கவில்லை. இது சம்பந்தமாக பள்ளி கல்விதுறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் மேற்கொண்டு பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்த வேண்டாம்” என்று கூறினார்.
ஆப்பக்கூடல்:
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியில் நேற்று காலை கிராம சபா கூட்டம் நடந்தது.
பொதுமக்கள் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் கலந்து கொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பெயரளவிற்கே வந்திருந்தனர். மக்களின் காரசார கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
இதனால் சரியாக கூட்டம் நடத்த முடியாமல் மக்களிடம் பெற்ற மனுக்களை அங்கேயே போட்டு விட்டு அதிகாரிகள் பாதியிலேயே சென்றனர்.
பொதுமக்கள் பார்வைக்கு எந்த ஒரு தீர்மான புத்தகங்களும் வைக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் கோரிக்கைகளை தீர்மானமாக எழுதாத அதிகாரிகளை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, கொங்கர்பாளையம் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கே வராதவர்கள் கணக்கில் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தப்பட்ட ஆதாரம் உள்ளது.
12 ஆண்டுகளாக பணித்தள பொறுப்பாளர்களாக குறிப்பிட்ட 3-பேர் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.
இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்ப்பு முகாமில் மனு ஏற்கனவே கொடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.
மேலும் கூட்டத்தில் பொது மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை அங்கேயே போட்டுவிட்டு சென்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கிராம சபா கூட்டத்தில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் சென்ற அதிகாரிகள் மீண்டும் பங்களாபுதூர் போலீசார் முன்னிலையில் சமாதான பேச்சில் ஈடுபட்ட போது அப்பகுதி மக்களின் கேள்வி கணைகளை சமாளிக்க முடியவில்லை.
எனவே மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் குறைகள் களையப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்.
ஈரோடு ஆணைக்கல் பாளையத்தை சேர்ந்தவர் கோமதி என்ற குப்பாயாள் (வயது 50).
இவர் தனது மாட்டு தொழுவத்தில் வாத்துக்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் அந்தியூர் குருநாதசாமி கோவிலுக்கு சென்று விட்டு திரும்ப வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவர் வளர்த்து வந்த வாத்துகளில் 2 வாத்துகளை காணவில்லை. இதை யாரோ திருடி கொண்டு போய் இருக்கக்கூடும் என்று கருதிய குப்பாயாள் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதில் ‘‘நான் மாட்டு தொழுவத்தில் ஆடு, மாடு, கோழிகளுடன் வாத்துகளையும் வளர்த்தேன். இதில் 2 வாத்தை திருடி சென்று விட்டனர். அதை கண்டுபிடித்து வாத்துகளை மீட்டு தாருங்கள்’’ என்று கூறி இருந்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அடுத்த ஆர்.என். புதூர் அமராவதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 41). ஆர்.என். புதூர் மரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (37). இருவரும் நண்பர்கள்.
நேற்று இரவு விஜயகுமார், சுரேஷ் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலை விசயமாக ஈரோடு வந்து கொண்டிருந்தனர்.
ஈரோடு எல்லை மாரியம்மன் கோவிலை தாண்டி சத்தி ரோட்டில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் விஜயகுமார், சுரேஷ் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு உயிருக்காக போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் சுரேஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதையொட்டி வரும் 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க் கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
சென்னிமலை நகர் முழுவதும், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமர புரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மாபாளையம், அசோக புரம், புதுப்பாளையம், கொடுமணல், ராமலிங்க புரம், ஒரத்துப்பாளையம், அய்யம் பாளையம், சென்னி மலை பாளையம், வெப்பிலி, கே.ஜி. வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி. என். நகர்.
இந்த தகவல் மின்வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி மாமல்லர் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 42). பிட்டர் வேலை செய்கிறார்.
இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பொன்னுசாமி குருணை மருந்து (விஷம்) குடித்து விட்டார்.
அவரை மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த சித்தோடு அம்மன் கலை அறிவியல் கல்லூரியில் 24-வது பட்ட மளிப்பு விழா நடந்தது. இதில் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி தாளாளர் டி.ஜெயலட்சுமி, அமைச்சர் கே.சி.கருப்பணன், ஜோதி மணி, ஜஸ்டிஸ் மெம்பெர், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசும்போது, பட்டம் பெரும் மாணவ- மாணவிகளாகிய நீங்கள் இந்த இடத்துக்கு வருவதற்கு உறுதுணையாகவும், ஊக்குவித்து ஒவ்வொரு நொடியும் உங்களுக்காக உழைக்கும் தாய், தந்தையை ஒரு போதும் மறக்க கூடாது. நீங்கள் படித்த கல்வியை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.
பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் தங்க பதக்கம் பெற்ற மாணவன் ரேவன் குமார், மாணவி காயத்ரி, 8-வது இடம் பிடித்த மாணவன் கிருஷ்ண கிருபா ஆகியோர் பதக்கங்கள் பெற்றனர்.
மேலும் 733 மாணவ- மாணவிகள் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு அமைச்சர் கருப்பணன் பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.
கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 150 பள்ளிகளில் உள்ள 21 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 500 ஆசிரியர்கள் கணித பாடத்தை புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி மூலமாக எளிய முறையில் கற்றுத் தருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கணித மேதை ராமானுஜம் பிறந்த ஊராகும். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக தமிழ்நாட்டில் கோபியில் இச்செயலி துவங்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 பாடத்தில் கணித பாடப்பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட என்ஜினியரிங் படிக்கும் போது கணித பாடத்தில் 21 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறாத நிலை உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தவிர்க்கும் பொருட்டு கணிதப் பாடத்தை ஆரம்ப கல்வி முதல் எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனத்தின் சார்பில் இச்செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 45 லட்சத்து 72 ஆயிரம் இலவச மடிகணிணிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 11, 12-ம் வகுப்பு படிக்கும் போதே தற்போது மடிகணிணிகள் வழங்கப்படுகின்றன. 2017- 2018 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிகணிணி விரைவில் வழங்கப்படும்.
6 முதல் 8 ம் வரையிலான 20 லட்சம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டேப் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு வசதியாக 2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் தேர்ந்தெடுத்து சாப்ட்வேர் மூலமாக டவுன்லோடு செய்து தரப்படும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மாணவ, மாணவிகள் க்யூஆர் கோடு மூலமாக படிக்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வு நேரத்திலும் பாடத்தைப் படிக்க முடியும்.
இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். தற்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கூடுதலாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
முதலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும். அடல் டிங்கர் லேப் திட்டம் ஒருபள்ளிக்கு ரூ.20 லட்சம் செலவில் விரைவில் துவங்கப்பட உள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களிடையே சீனா தொழில்நுட்பம் முறையில் விமானத்தைக் கூட உருவாக்கும் ஆற்றலும், திறமையும் கற்றுத் தரப்படும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு அருகே கதிரம்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி சுதா (வயது34). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
காளிமுத்து தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். சுதா மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்திலையில் கடந்த ஒரு வாரமாக சுதா செல்போன் கடைக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று குழந்தைகள் பள்ளி கூடத்துக்கு சென்று விட்டனர். காளிமுத்து வேலைக்கு சென்று விட்டார்.
மாலையில் வீட்டுக்கு வந்த காளிமுத்து மனைவி சுதா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தார். ஆனால் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கதிரம்பட்டியில் உள்ள ஒரு காலி இடத்தில் இரவு 10.15 மணியளவில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுதா உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய சுதாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சுதா கழுத்தறுக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.
சுதா வேலைப்பார்த்த செல்போன் கடை உரிமையாளர் கோகுல் (29). இவரது கடையில் சுதா கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வேலை பார்த்து வந்தார். அப்போது சுதாவுக்கும் கோகுலுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சுதா செல்போனில் அடிக்கடி யாரிடமோ பேசி வந்தார். இது கோகுலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுதாவை வேலையிலிருந்து கோகுல் நீக்கினார்.
இருந்தாலும் கோகுலால் சுதாவை மறக்க முடியவில்லை. சம்பவத்தன்று சுதாவை போனில் தொடர்பு கொண்ட கோகுல் உன்னை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பி சுதாவும் கரம்பட்டியில் உள்ள காலி இடத்திற்கு சென்றார்.
அப்போது கோகுலுக்கும் சுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கோகுல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாவின் கழுத்தை அறுத்து உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் கோகுலை தாலுகா போலீசார் இன்று பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் தான் அவர் எதற்காக சுதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்தார் என்று முழுமையான காரணம் தெரியவரும்.
ஈரோடு:
கேரளா மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணைப் பகுதியான குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2 -வது நாளாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து உள்ளது. சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. பவானிசாகர் பகுதியில் அதிக பட்சமாக 32.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதேபோன்று நம்பியூர், கோபி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொடிவேரி பகுதியிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதே போன்று நேற்று இரவு மொடக்குறிச்சி கொடுமுடி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
ஈரோடு மாநகரை பொறுத்தவரை பெரிய அளவு மழை பெய்யாவிட்டாலும் நேற்று முழுவதும் சாரல மழை தூறிக்கொண்டே இருந்தது.
நேற்றிரவு ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில். வருமாறு:-
பவானிசாகர்- 32.4, எலந்தகுட்டைமேடு - 10.4, வரட்டுபள்ளம் - 9.6, கொடுமுடி - 8.8, குண்டேரிபள்ளம் - 7. 2, அம்மாபேட்டை- 4.4, பவானி- 4.2, ஈரோடு- 3.
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், தினமும் ரூ.100 வீதம் மாதம் ரூ.2600 என்ற சொற்ப ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்களாம்.
எனவே இதனை கண்டித்தும் தொழிலாளர்களை பணி வரன் முறைப்படுத்தி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் 200க்கும் மேற்பட்ட ஏ ஐ டி யு சி தொழிற்சங்கத்தினர் மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திரண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல். சுந்தரம் தலைமை தாங்கினார். ஏ ஐ டி யு சி மாநிலச் செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணி வரன்முறை படுத்தி ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் தலைமையில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.






