search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் கார் அப்பளம்போல் நொருங்கி உள்ள காட்சி
    X
    விபத்தில் கார் அப்பளம்போல் நொருங்கி உள்ள காட்சி

    புளியம்பட்டி அருகே விபத்து- மில்தொழிலாளர்கள் 4 பேர் பலி

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே இன்று அதிகாலை கார் மீது லாரி மோதிய விபத்தில் மில் தொழிலாளர்கள் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பு.புளியம்பட்டி:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து விருதுநகர் நோக்கி ஒருலாரி சென்று கொண்டிருந்தது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைபார்க்கும் 6 பேர் ஒரு காரில் இன்று அதிகாலை 1 மணிக்கு புளியம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அந்த காரில் மில்லின் துணை மேலாளர் ஜெய் கணேஷ் மற்றும் சூப்பர் வைசர்கள் தங்கபாண்டியன், சங்கர், வீரராகவன், கோவிந்தராஜ், பாரதி ஆகிய 6 பேர் சென்று கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை 1.30 மணியளவில் பு.புளியம்பட்டி அருகே பொன்மேடு என்ற இடத்தில் சென்ற போது லாரியும் காரும் நேருக்கு நேர் ‘டமார்’ என்ற சத்தத்துடன் பயங்கரமாக மோதியது.

    இந்த திடீர் விபத்தால் சத்தியமங்கலம்- கோவை மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த கோர விபத்தில் கார் அப்பளம்போல்நொறுங்கியது. காரில் இருந்த மில்லின்துணை மேலாளர் ஜெய்கணேஷ் மற்றும் சூப்பர்வைசர்கள் சங்கர், தங்கபாண்டியன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற 3 பேரையும் ஆபத்தானநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரராகவன் இறந்து விட்டார். மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு பு.புளியம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போக்குவரத்தை சரி செய்தனர். அப்போது மழை தூறிக்கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

    எனினும் போலீசார் பொதுமக்கள் துணையுடன் இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்தால் புளியம்பட்டியில் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×