search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் ஆஸ்பத்திரிகள் வேலைநிறுத்தம்"

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250 தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 800 டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
    • வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து மருத்துவக்குழுவினர் சுதா ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைத்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்தும், சிகிச்சையில் உள்ள நோயாளிகளை 15 நாட்களுக்குள் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

    இதை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதனை அடுத்து மருத்துவமனை வழக்கம் போல் செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த ஐகோர்ட் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்தில் சீல் அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் சீல் வைக்க உத்தரவிட்டது.

    சுதா மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உத்தரவால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திடீரென அவர்கள் மருத்துவமனை முன்பு நேற்று இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இரவு சுதா மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250 தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 800 டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு அந்தந்த ஆஸ்பத்திரியின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்பட்டன. மேலும் அவசரகால சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெற்றன.

    இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் சி.என். ராஜா கூறியதாவது:-

    சுதா மருத்துவமனை 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்துறை மருத்துவமனையாக உள்ள நிலையில் ஒரு பிரிவில் தவறு நடந்ததாக கூறப்படும் நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைப்பது என்பது ஏற்புடையதல்ல.

    இந்த நடவடிக்கையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் இன்று ஒரு நாள் மூடப்படும். புறநோயாளிகள் பிரிவு செயல்படாது. இது தொடர்பாக மாநில அளவில் போராட்டம் நடத்துவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×