search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    வேலூர் எம்.பி. தொகுதியில் போட்டியிடாதது ஏன்?- தினகரன் பேட்டி

    கட்சியை பதிவு செய்யும் வேலையில் ஈடுபட்டு இருப்பதால், வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி, ஓடாநிலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில், தீரன் சின்னமலை சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீரன் சின்னலை நினைவுநாளில் 10 அமைச்சர்கள் பங்கேற்பதாக அறிவித்து இருந்த நிலையில், ஒருவர் மட்டும் ஏன் பங்கேற்றார்? என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும்.

    கட்சியை பதிவு செய்யும் வேலையில் ஈடுபட்டு இருப்பதால், வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. ஒரு தேர்தலில் தோல்வி அடைந்தால் அதனை பின்னடைவு என்று சொல்ல முடியாது. சிலர் சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்திற்காக கட்சியை விட்டு சென்றுள்ளனர். கட்சியை விட்டு சுயநலத்திற்காக சிலர் வெளியேறினர். அ.தி.மு.க. ரத்தம், பரம்பரை என்று சொல்லிவிட்டு தி.மு.க.விற்கு போயுள்ளனர்.

    முத்தலாக்

    பெண்களின் பாதுகாப்பிற்காக முத்தலாக் சட்டம் கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. எந்த ஒரு சட்டமும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது. அரசு கொண்டு வரும் எந்த ஒரு சட்டமும் அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்ச உணர்வை இந்தியாவில் இன்று பல்வேறு தரப்பு மக்களும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    அதனால்தான், எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டிய நோக்கம் என்பது, சட்டப்படியான நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, விருப்பு வெறுப்பு அடிப்படையிலான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.

    முத்தலாக் விவகாரத்தில் மக்களவையில் ஒரு நிலைப்பாடும், மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாடும் அ.தி.மு.க. எடுத்துள்ளது. உலகிலேயே இது போன்ற நிலைப்பாடு எடுக்கும் கட்சி குறித்து நான் கேள்விப்பட்டதில்லை. இரட்டைத்தலைமை என்ற பெயரில் மக்கள் விரும்பாத ஆட்சி நடத்தும், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி ஆட்சி நடத்திக் கொண்டு இது போன்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்து எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    உள்ளாட்சித்தேர்தல் வருமா? என்று தெரியவில்லை. வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம். தமிழகத்தை குறிப்பாக விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என்பது தமிழக மக்களின் எண்ணம். ஆனால், மத்திய அரசு அதனைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது வருத்தமளிக்கிறது.

    இவ்வாறு தினகரன் கூறினார்.
    Next Story
    ×