என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையாக சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

    ஈரோடு:

    குடியரசு தின விழா நாளை இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவத்தை தடுக்கும் வகையில் ஈரோடு டவுன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையம் நுழைவு வாயில் ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகள் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகே அவர்களை உள்ளே அனுமதித்தனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையாக சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ஒவ்வொரு ரெயில்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். இதுபோல் ஈரோடு காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் நாளை வரை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    • அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.
    • 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, கல்வாரை பகுதியை சேர்ந்தவர் தனபால். கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி. கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தேவர் மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றுக்கொண்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.

    நிலைமையை புரிந்து கொண்ட அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது அன்னக்கொடிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    • ஜவுளி சந்தை ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் நடைபெறுகிறது.
    • பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடை, வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.

    இந்த ஜவுளி சந்தை ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் நடைபெறுகிறது. ஜவுளி சந்தையில் துணிகளை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    இதேப்போல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் சிறுகுறு வியாபாரிகளும் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் சூடு பிடித்தது. பொங்கல் பண்டிகை முடிந்து பிறகு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்த நிலையில் நடந்து வந்தது.

    இந்நிலையில் இன்று ஜவுளி வாரச்சந்தை கூடியது. ஆனால் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவே இல்லை. கேரளாவில் இருந்து மற்றும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இதேபோல் சில்லரை வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது.

    பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது. இன்று கூடிய ஜவுளி வார சந்தையிலும் வெளி மாநில வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இனி வரக்கூடிய நாட்களில் தைப்பூசத்தையொட்டி வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    • சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
    • இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் பிரிவில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதையடுத்து அந்த பள்ளியிலேயே காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த காய்கறி தோட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி, வெண்டை, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதை தொடர்ந்து மாணவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து விதைப்பு முதல் அறுவடை வரை மாணவர்களே முழுவதும் ஈடுபட்டு வேலை செய்கின்றனர்.

    மேலும் எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு வேளாண் ஆசிரியர் கந்தன், கைலாஷ் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் சாகுபடி செய்திருந்த சிறுகீரை, அரைக் கீரை வகைகளை அறுவடை செய்யப்பட்டது. இந்த கீரை வகைகளை தலைமை ஆசிரியர் ரவி, மதிய உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் வழங்கினர். இவ்வாறு காய்கறிகளை சாகுபடி செய்வது மாணவர்கள் செய்முறை வகுப்பிற்கும், அவர்கள் பிற்கால வாழ்வியலுக்கும், மேலும் விவசாயத்தில் மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.

    • ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் புலி, சிறுத்தை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் டீக்கடையின் முன்பு ஒருவர் நின்று கொண்டிருந்தார். தற்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்த ஒரு சிறுத்தை அந்த நபர் கண்முன்னே பாய்ந்து ஓடியதை நேரில் பார்த்தார்.


    இதை பார்த்து அந்த நபர் அலறி கூச்சலிட்டார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிறுத்தை சென்ற கால் தடம் அங்கு பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். அது சிறுத்தை கால் தடம் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

    ஆனால் நேற்று இரவு ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை. இதனையடுத்து அரியப்பம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.
    • கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    பவானி:

    பவானி நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவேரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு தினசரி உள்ளூர் வெளியூர் வெளிமாநில பக்தர்கள் என பல வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல், செவ்வாய் தோஷம் நீக்குதல், ராகு கேது பரிகார தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்று வருகின்றனர்.

    அதேபோல் பரிகார பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தாங்கள் அணிந்து கொண்ட பழைய துணிகளை காவிரி ஆற்றில் கழற்றி விட்டு செல்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த துணிகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு ஏலதாரர்கள் அதை சுத்தம் செய்வது வழக்கமாக உள்ளது.


    தற்போது காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் தினசரி 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் காவிரி ஆறு பார்க்கும் இடமெல்லாம் பாறைகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் விடும் துணிகள் ஆங்காங்கே காவிரி ஆற்றின் பாறைகள் உட்பட படித்துறைகள் என பல்வேறு இடங்களில் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது.

    துணிகளை அப்புறபடுத்த ஏலம் எடுத்தவர்கள் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த துணிகளை மட்டும் எடுத்துக் கொள்வதாகவும், மீதமுள்ள துணிகளை ஆங்காங்கே விட்டு விடுவதாகவும் பக்தர்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    இதனால் பார்க்கும் இடமெல்லாம் பழைய துணிகளாகவும், குவிந்து கிடக்கும் குப்பைகளும், பார்க்கவே முகம் சுளிக்கும் வகையில் கூடுதுறை கோவில் பின்பகுதி அமைந்துள்ளது என பக்தர்கள் பலரும் வேதனையுடன் தெரிவித்து கொண்டனர்.

    இதனால் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் பக்தர்கள் அந்த துணிகளை ஆற்றில் விடுவதை தடுத்தோ அல்லது துணிகள் தண்ணீர் ஓடும் இடங்களில் போட வலியுறுத்தி பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி காவிரி ஆற்றையும், சங்கமேஸ்வரர் கோவில் படித்துறை பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன.
    • அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரு காட்டு யானைகள் பண்ணாரி சாலை வந்து அங்கிருந்து பவானிசாகர் பகுதிக்கு வந்தது. சிறிது நேரத்தில் பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட், கம்பி வேலியை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த பூங்கா ஊழியர்கள் யானைகள் இருப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் ஊழியர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். மீன் பண்ணை வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.

    வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள், ஆழமாக இல்லாததால் மண் மூடி கிடக்கிறது. வனத்தை ஒட்டி உள்ள காராச்சிக் கொரை பகுதியில் யானை தடுப்பு அகழிகள் வெட்டவில்லை. இதனால் யானைகள் சுலபமாக ஊருக்குள் புகுந்து விடுகிறது. அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் பவானி சாகர் வனப்பகுதியில் இருந்து கடந்த 15-ந் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ராஜன் நகர் அருகே காந்தி நகர் கிராமத்தில் சுப்புராஜ் என்பவர் தோட்டத்தில் புகுந்து 3 ஆடுகளை கடித்துக் கொன்றது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ராஜன் நகரில் வெள்ளியங்கிரி என்பவர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை அடித்துக் கொன்றது. கிட்டத்தட்ட 2 நாட்களில் 7 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் முதற்கட்டமாக தானியங்கி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. கேமிரா பதிவுகளை கண்காணித்த பின் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம். அடர்ந்த வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்ன வலியுறுத்தி உள்ளனர். மேலும் சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    • பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.
    • காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    பவானி:

    பவானி அருகில் உள்ள காளிங்கராயன்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைகட்டு கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை கட்டில் இருந்து பவானி ஆற்றின் இருந்து வெளியேறும் உபரிநீர் காலிங்கராயன் வாய்க்கால் வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    காலிங்கராயன் என்ற சிற்றரசரின் மூலம் கட்டப்பட்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு நீர் மேலாண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் தைத்திருநாள் முடிந்த பிறகு பொதுமக்களால் கொண்டாடப்படும் கரிநாள் மற்றும் காணும் பொங்கல் அன்று பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.

    இந்த அணைக்கட்டு பகுதியில் அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகள் துவக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு நலனுக்காக பொதுமக்கள் யாரும் அணைகட்டு பகுதிக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது அனுமதி கிடைக்கும் என காத்திருந்த பொது மக்களுக்கு 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் பாதுகாப்பு நலன் கருதி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சித்தோடு போலீசார் தெரிவித்துள்ளனர். காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    • தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.
    • சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    சென்னிமலை:

    தை மாதம் பிறந்து விட்டாலே தமிழக கிராமங்களில் திருவிழாவிற்கு பஞ்சம் இருக்காது. பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தைத்திருநாள் விழாவிற்கு பல பெயர்கள் இருந்தாலும் தைப் பொங்கல் என கூறி கிராமத்தில் இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு புது துணி எடுப்பதில் ஆரம்பித்து வீடுகளை வெள்ளையடிப்பது, காப்பு கட்டுவது என விழா களைகட்ட தொடங்கி விடும்.

    நூற்றாண்டுகளாக தமிழர்களின் பண்பாட்டினையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் பாறை சாட்டும் விதமாக இது நடந்து வருகிறது. இந்த தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.

    குறிப்பாக சென்னிமலை பகுதியில் தை பொங்கல் விழா பெண்கள் திருவிழாவாக தான் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு தை 2-ம் நாள் நடக்கும் பூப்பறிக்கும் விழா நூற்றாண்டுகள் கடந்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இளம் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மலைகளில் இருந்து ஆவாரம் பூ பறிக்கின்றனர். சென்னிமலை சுற்று வட்டாரத்தை பொறுத்த வரை தை 2-ம் நாள் தான் பொங்கல் விழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை முன்னிட்டு சென்னிமலை பகுதியில் நேற்று பூப்பறிக்கும் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னிமலை நகரில் உள்ள பொதுமக்கள் சென்னிமலையின் தென்புறம் உள்ள மணிமலை பகுதிக்கு சென்று பூப்பறித்து வருவார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் நேற்று 50-க்கும் குறைவான பெண்கள் தான் கலந்து கொண்டனர். சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    ஆனால், கிராம பகுதிகளில் தொட்டம்பட்டி, தோப்புபாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, சொக்கநாதபாளையம், எல்லைகுமாரபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் முதலமடை பகுதியிலும், ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும், முருங்கத்தொழுவு, குமாரபாளையம், பழையபாளையம், இளம் பெண்கள் அம்மன்கோயில் பகுதியிலும் தாங்கள் கொண்டு சென்ற கரும்பு மற்றும் திண்பண்ட ங்களை உண்டு மகிழ்ந்து அப்பகுதியில் பூத்துக்குழுங்கும் ஆவாரம் பூக்களை பறித்து வரும் போது இளம் பெண்கள் தைப்பொங்கலின் பெருமையை கூறும் வகையில் பாட்டு பாடி, கும்மி அடித்து மகிழ்ந்தனர்.

    பின்பு மாலை வீடு திரும்பி வாசலில் கோலமிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று காலை தாங்கள் பறித்து வந்த பூக்களை ஆறு, கிணறுகளில் போடுவார்கள். பல நூற்றாண்டு பழமையான விழா ஆனாலும் இன்று கிராம பகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் படித்து பல்வேறு துறைகளில் வேறு ஊர்களில் பணியாற்றினாலும் இந்த பெண்கள் இன்றும் இந்த பூப்பறிக்கும் விழாவினை பழமை மாறாமல் சிறப்பாக கொண்டாடினர்.

    ஆனால் சென்னிமலை நகர பகுதியில் பூப்பறிக்கும் விழா இந்த ஆண்டு உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    • கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அண்ணா மடுவு கண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் அந்த பகுதியில் மின் சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அருகே உள்ள ஒரு வீட்டுக்கு மின்சாதன பொருட்களை பழுது பார்ப்பதற்காக துரைசாமி கடையை திறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் கடையில் பழுது பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின் உள்பட பழைய மின் சாதன பொருட்களிலும் தீ பிடித்து மள மளவென எரிய தொடங்கியது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை உற்றி தீயை அணைத்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் கடையில் இருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பழைய மின் சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.

    பின்னர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கேர்மாளம் நோக்கி ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது.
    • யானைக்கூட்டம் நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே வழிமறித்து நின்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, கடம்பூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    விழாவில் கலந்து கொண்டு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கடம்பூர் செல்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம் நோக்கி ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது.

    கேர்மாளம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது அந்த வாகனங்களை வழிமறித்து சாலையின் நடுவே 3 யானைகள் கூட்டம் நின்று கொண்டிருந்தன.

    மேலும் வாகனங்களை பார்த்து யானை சத்தமாகப் பிளிரியது. யானைக்கூட்டம் நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே வழிமறித்து நின்றது. பிறகு வனத்துறையினர் ஜீப் மூலம் அதிக சத்தம் கொண்ட ஒலிகளை எழுப்பினர்.

    அதனைத்தொடர்ந்து அந்த யானைக்கூட்டம் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின் ஆ.ராசா எம்.பி. வாகனம் வனப்பகுதியை கடந்து சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×