என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஓட்டுநர், நடத்துனர் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோடு காசிபாளையத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையைச் சேர்ந்த கோவை-சேலம் வழித்தட பேருந்தில் ஈரோட்டைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் வடிவேல் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் பணியை முடித்து கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாரான நிலையில் இருவரையும் மீண்டும் ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு பேருந்தை இயக்குமாறு கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

    அதற்கு அவர்கள் உடல் நிலை மற்றும் வேலை நேரத்தை குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்ததையடுத்து கிளை மேலாளார் அவர்களை அவதூறாக பேசியதுடன், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, ஓட்டுநர் செந்தில்குமார், நடத்துனர் வடிவேல் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து கிளை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட இருவரிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இருவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறும் போது அதிகாலை முதல் வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம். எங்களின் தூக்கம் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் எங்கள் மீது அதிக பணிச் சுமையை சுமத்துவது விபத்துக்கே வழிவகுக்கும்.

    இது நாங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. எங்களை நம்பி பேருந்தில் ஏறும் நூற்றுக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். எனவே, இத்தகைய போக்கை மாற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது.
    • மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது. யானைகள் சில சமயம் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வனச்சாலையில் உலா வருகிறது. இந்நிலையில் ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் திடீரென பஸ்சை வழிமறித்து சாலையில் நடுவில் நின்றது.

    இதனால் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சுமார் 15 நிமிடம் சாலையில் நின்ற யானைகள் கூட்டம் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து கிளம்பி சென்றது. யானை கூட்டத்தை பஸ்சில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
    • யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம்-கொள்ளேகால் சாலை அமைந்துள்ளது.

    அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இச்சாலை வழியாக பஸ் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மிக முக்கியமாக கரும்புக்கட்டுகள், காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் கேர்மாளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை ஒன்று சாலை நடுவே நடமாடியது. யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

    இதையடுத்து வாகனங்களை வழிமறைத்த காட்டு யானை சரக்கு வாகனங்களில் காய்கறிகள், உணவு ஏதாவது உள்ளதா? என தனது தும்பிக்கையால் ஒவ்வொரு வாகனமாக சோதனையிட்டபடி அலைந்தது.

    இந்த காட்சியை அந்த வழியாக சென்ற அரசு பஸ்சில் இருந்த பயணிகள் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். சிறிது நேரம் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர்.
    • தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குள் உள்ளன.

    அதே போல் வனப்பகுதியையொட்டிய கிராம பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் பலர் விவசாயமும் செய்து வருகிறார்கள்.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள கிராம பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. அதே போல் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி சிறத்தை கள் வெளியேறி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்திட்டு பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை உதய மரத்திட்டு என்ற வனப்பகுதி யை ஒட்டிய பகுதியில் நேற்று மாலை ஒரு சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து ஊருக்குள் சென்று ஓடியது.

    அப்போது அந்த வழியாக ஒரு முதியவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சிறுத்தை செல்வதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அலறி கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வழியாக சிறுத்தை செல்வதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த முதியவரை மக்கள் மீட்டனர். அதற்கள் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

    இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இரவு நேரம் என்பதால் அவர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள உதயமரத்திட்டு பகுதிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் இன்று காலையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.

    • பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
    • மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர்களில் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தினமும் சுமார் 4 டன் முதல் 5 டன் மல்லிகை உள்பட பல பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் பூ மார்க்கெ ட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் பூ மார்க் கெட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் விஷேசம், திருவிழா நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்படும். அதே போல் வெளி மாநில திருவிழா காலங்களிலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகளவில் நடக்கும்.

    இதனால் விஷேசம் மற்றும் முகூர்த்த நாட்களில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகும். இதே போல் சாதாரண நாட்களில் மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.500-க்கும் ஏலம் விற்பனையாகும்.

    இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததால் முகூர்த்த நாட்கள் தொட ர்ந்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் கோவில் விழாக்களும் நடந்து வருகிறது. இதனால் மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மல்லிகை உள்பட பூக்களின் அறுவடை குறைந்து வருகிறது. இதனால் தற்போது குறைந்த அளவே மல்லிப்பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனால் மல்லிகைப்பூ மற்றும் மற்ற பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ 1160-க்கும், முல்லை 600-க்கும் காக்காடா ரூ.550-க்கும் சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பனி பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாகவும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதாலும் மல்லி கைபூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மல்லிகை ரூ.1900 உயர்ந்து ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் மல்லிகை பூக்களின் விலை ரூ.3,460 வரை உயர்ந்து உள்ளது.

    இதே போல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ரூ.2,160-க்கும், முல்லை ரூ.1,445-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது. ஆனால் நேற்றும் பூக்கள் விலை உயர்ந்து மல்லிகை ரூ.4,620-க்கும், கனகாம்பரம், ரூ.850-க்கும், முல்லை ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் முன் கூட்டியே வந்து மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் உடனடியாக மல்லிகை பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் ஈரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலும் வரத்து குறைவு காரணமாக மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் விலை அதிகரித்தது.

    மேலும் வரும் நாட்களில் கோவில் விழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.
    • நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும், திருத்தேரோட்டம் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் ரதம் பிடிக்கும் போது போலீஸ் நிலையம் சென்று அழைத்து வருவது. அதேபோல் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.

    இந்த பழக்கம் பல நீண்ட வருடங்களாக உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வாதக பெரியவர்கள் கூறுகிறார்கள். இன்னும் இந்த மரியாதை மாறாமல் தொடர்ந்தது.

    இதில் சென்னிமலை இன்ஸ்பெக்டராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்பிரபு நான் பல இடங்களில் பணியாற்றி உள்ளேன். இங்கு இந்த நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது. மிகுந்த மன நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கோவில் நிர்வாகத்திற்கும், தேரோட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான முருகபக்தர்களுக்கும் என்றும் நான் தொண்டு செய்ய சென்னிமலை முருகன் அருள்புரிய வேண்டும் என்றார்.

    • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.61 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 798 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் சுற்று நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.52 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.04 அடியாகவும் உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • மழை காலங்கள் இல்லாத சமயங்களில் அந்த பகுதியில் உள்ள ஓடையின் ஓரமாக எளிதாக சென்று இறந்தவர்களின் சடலங்களை எரித்து வந்தனர்.
    • மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மந்தை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மந்தை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லை என கூறப்படுகிறது.

    இந்த மந்தை பகுதியில் ஓடை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓடை வழியாக சுமந்து சென்று அந்த பகுதியில் உள்ள காலி இடங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தும் எரித்தும் வருகிறார்கள்.

    மழை காலங்கள் இல்லாத சமயங்களில் அந்த பகுதியில் உள்ள ஓடையின் ஓரமாக எளிதாக சென்று இறந்தவர்களின் சடலங்களை எரித்து வந்தனர்.

    வரட்டுபள்ளம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மந்தை ஓடை வழியாக செல்கிறது. அதே போல் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் நேரங்கள் மற்றும் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்படும் போது மந்தை ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று வருகிறது.

    அப்படி மந்தை ஓடையில் தண்ணீர் செல்லும் போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் ஓடை தண்ணீரில் இறங்கி இறந்தவரின் பிணத்தை சுமந்து கொண்டு சென்று உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இந்த நிலையில் வரட்டு பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மந்தை ஓடையில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து இறந்தவரின் உடலை அப்பகுதி மக்கள் தண்ணீருக்குள் இறங்கி சிரமப்பட்டு சுமந்து சென்று அக்கறையில் எரியூட்டி விட்டு வந்தனர். இதே நிலை தான் நீண்ட காலமாக உள்ளது.

    எனவே இந்த பகுதியை சேர்ந்தவர் இறந்தால் அடக்கம் செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    எனவே இந்த பகுதிக்கு மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மந்தை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    சாலை விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    தொப்பூர் பகுதியில் நடந்ததை விபத்து என்று கூற முடியாது, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொலை என்று தான் கூற வேண்டும். தொப்பூர் பகுதி நெடுஞ்சாலை நாளுக்கு நாள் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், உயிர்ப்பலி வாங்கும் சாலையாகவும் மாறி வருகிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தொப்பூரில் ஒரே நேரத்தில் 15 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை. தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணம் என்பதையும் பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நகர் மன்றத்தின் துணைத்தலைவர் மணி நகராட்சி நுழைவாயில் முன்பாக நின்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
    • பலமுறை நான் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று காலை குடியரசு தினவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. ஆணையாளர் மோகன்குமார் முன்னிலையில், நகர் மன்ற தலைவர் சிந்தூரி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் நகராட்சி வளாகத்துக்கு வருகை தந்த நகர் மன்றத்தின் துணைத்தலைவர் மணி நகராட்சி நுழைவாயில் முன்பாக நின்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,

    நான் நகர் மன்ற துணைத்தலைவராக பதவி வைத்து வருகிறேன். எனக்கு இதுவரை நகராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முறையாக அழைப்பு விடுத்ததே கிடையாது. பலமுறை நான் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆகையால் இன்று குடியரசு தினத்தில் எனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன்.

    இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், தலைவர் சிந்தூரி மற்றும் கவுன்சிலர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மணியை சமரச பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டார்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • சிறுத்தை உலா வருவதை கண்ட மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் யானை, சிறுத்தை, புலி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன. சில சமயம் யானை தாக்குதல்களால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை உலா வருவதை கண்ட பொது மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்து ஊருக்குள் உலா வருவது சிறுத்தையா? என கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் 2 சிறுத்தைகள் உலா வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை உலா வரும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதனைப்பார்த்து பீதி அடைந்த அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் 2 சிறுத்தைகள் உலா வருவது போன்று வீடியோ வெளியாகி உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இந்த பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
    • தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    கொண்டையம்பாளையம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வீதியில் உலா வந்த தேர் வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    தேர் கவிழ்வதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி பக்தர்கள் உயிர் தப்பினர். இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ×