search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை குடியரசு தின விழா: ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர சோதனை
    X

    நாளை குடியரசு தின விழா: ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர சோதனை

    • ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையாக சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

    ஈரோடு:

    குடியரசு தின விழா நாளை இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவத்தை தடுக்கும் வகையில் ஈரோடு டவுன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையம் நுழைவு வாயில் ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகள் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகே அவர்களை உள்ளே அனுமதித்தனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையாக சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ஒவ்வொரு ரெயில்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். இதுபோல் ஈரோடு காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் நாளை வரை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×