என் மலர்
ஈரோடு
- விவசாயிகள் ஒருங்கிணைந்து யானை கூட்டத்தை விரட்டினர்.
- உடனடியாக நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கூட்டம் கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. குறிப்பாக தென்னை வாழை மரங்களை தின்றும் மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏற்கனவே நஷ்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவும் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள் கூட்டம் அங்குள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து வாழைத் தென்னை மரங்களை மீண்டும் சேதப்படுத்தி உள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி அடுத்த சேஷன்நகர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் தனது விவசாய நிலத்தில் நூற்றுக்கணக்கில் தென்னை-வாழைகளை பயிரிட்டுள்ளார். அவைகள் நன்கு வளர்ந்து இருந்தது. வனப்பகுதியையொட்டி விளைநிலம் இருப்பதால் இரவு நேரத்தில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைக்கூட்டம், விவசாயி விஜயகுமார் நிலத்தில் கம்பி வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் தென்னை மரங்களை தின்றும், மிதித்தும் சேதம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளன. பின்னர் விவசாயிகள் ஒருங்கிணைந்து யானை கூட்டத்தை விரட்டினர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,
கடந்த ஒரு வாரமாக யானை கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி எங்கள் கிராமத்துக்குள் புகுந்து தொடர்ந்து தென்னை வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் மக்காச்சோள பயிர்கள் காய்கறிகளையும் சேதப்படுத்தி உள்ளன.
கிட்டத்தட்ட இந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தென்னை-வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் எங்கள் பகுதி விவசாயிகள் படும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
உடனடியாக நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் நீண்ட நாட்களாகவே அண்டை மாநிலமான கர்நாடகாவை போன்று யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராதவாறு ரயில்வே தண்டவாள இரும்பு கம்பி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
- ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும்.
- உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டம் கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில விளையாட்டு அணி செயலாளருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய அளவில் வளர்ச்சி சதவீதம் 5.6 சதவீதமாக உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் வளர்ச்சி 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குறுக்கு வழியில் மட்டுமே ஆட்சியை பிடிக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. பாஜவிற்கு அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறார்.
அதனால் தான் கடந்த தேர்தலில் துரோகத்திற்கும், குறுக்கு வழிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற ஒற்றை கருத்தோடு தி.மு.க.வை வெற்றி பெற வைத்து மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்தீர்கள்.
இன்று புதியதாக வந்த ஒருவர்(விஜய்) மீது இளைஞர்கள் மோகத்தில் உள்ளனர். அம்மாக்கள் சொன்னால் தான் அவர்கள் கேட்பார்கள். படத்தை பார்க்க சொல்லுங்கள், விசிலை அடிக்க சொல்லுங்கள். ஆனால் வாக்குகளை தி.மு.க.விற்கு போட சொல்லுங்கள்.
மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், ஆயிரம் ரூபாயை தடுக்க பார்த்தவர்களுக்கு சவுக்கடியாக 5,000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக கொடுத்தவர் தான் தமிழக முதலமைச்சர். அதை அடுத்த முறை ஆட்சி பொறுப்பேற்றதும் 2,000 ரூபாயாக தருவதாக உறுதி அளித்துள்ளார்.
கர்ப்பப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி 16,000 ரூபாயாக உள்ள நிலையில் அதை இந்திய அளவில் இலவசமாக கொடுத்து வருபவர் நம் முதலமைச்சர். எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் இல்லை.
தேவைப்பட்டால் நாங்கள் கற்றுக் கொள்கிறோம். ஆனால் திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம். ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும். ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திரம் கிடைத்தபோது அவர்கள் மொழியை 97 சதவீதம் பேர் பேசி வந்தனர். ஆனால் இன்று 3 சதவீதம் பேர் தான் அவர்கள் தாய் மொழியை பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தி திணிப்பால் ஒரு மொழியே அழிந்து வருகிறது.
உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரடி நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
- சாலையோரம் சுற்றிக் கொண்டிருந்த கரடியை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது திடீரென வனப்பகுதி விட்டு வெளியேறிய கரடி ஒன்று தேசிய நெடுஞ்சாலையை கடந்து சாலையோரம் சுற்றி கொண்டிருந்தது.
திடீரென கரடி நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சாலையோரம் சுற்றிக் கொண்டிருந்த கரடியை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
கரடி நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.
- முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.
ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயாளர் இபிஎஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பரப்புரை வாகனத்தில் வருகை தந்த இபிஎஸ்-க்கு வழிநெடுகிலும் திரண்டு நின்ற மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பாஜகவின் களை கழக் அதிமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.
காங்கிரசுக்கு திமுக கட்சி அடிமை. அதிமுக தன்மானம் உள்ள கட்சி.
முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.
அதிமுக ஆட்சி காலத்தின் விவசாயம் செழித்து இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் குறைகள் என சுட்டிக்காட்ட முடியுமா?
ஜெயலலிதாவின் மறைவுக்குபின் பல பிரச்சனைகளை அதிமுக சந்தித்தது. தொண்டர்களின் ஆதரவால கட்சியை காப்பாற்றினோம்.
சட்டமன்றத்தில் நான் பெரும்பான்மையை நிரூபித்தபின் சட்டையை கிழித்துகொண்டு வீதியில் சென்றார் மு.க.ஸ்டாலின்.
சட்டமன்றத்தில்நான் பெரும்பான்மை நிரூபித்ததை முதலமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியேடு சீர்கெட்டு விட்டது. தமிழ்நாட்டில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலர்களுக் பாதுகாப்பு இல்லை.
ஸ்டாலின் நாட்டு மக்களை பற்றி சிந்திக்க மாட்டார். அவரது வீட்டு மக்களை பற்றி மட்டும்தான் சிந்திப்பார்.
நிர்வாக திறமையின்மை காரணமாக அரசு காலி பணியிட்கள் அப்படியே இருக்கிறது.
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, வரி உயர்வு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தனியாரிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- நாளை எடப்பாடி பழனிசாமி பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அதன்படி அ.தி.மு.க வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழக முழுவதும் ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசார கூட்டத்தில் தி.மு.க.வை கடுமையாக சாடி அ.தி.மு.க சாதனைகளை எடுத்துரைத்து வருகிறார்.
இதுவரை தமிழக முழுவதும் 181 தொகுதிகளில் அவர் பிரசாரம் முடித்துள்ளார். இந்நிலையில் 182-வது தொகுதியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக அந்தப் பகுதியில் தனியாரிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பணிகள் அனைத்தும் முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை எடப்பாடி பழனிசாமி பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் அவர் பங்கேற்கும் போது அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என பேசி வருகிறார். இதனால் நாளை நடைபெறும் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதால் இந்த கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண் எதற்காக வந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் நிலையங்களில் யாராவது பெண் மாயமாகி உள்ளாரா என்று புகார் வந்துள்ளதா என்பது குறித்தும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு -சென்னிமலை ரோட்டில் இருந்து திண்டல் செல்லும் ரிங் ரோட்டில் ரெயில்வே பாலம் பகுதி உள்ளது. இந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும்.
இந்நிலையில் இன்று காலை இந்த பகுதி வழியாக பால்காரர் ஒருவர் சென்று உள்ளார். அப்போது ரெயில்வே பாலம் அருகே காலி இடத்தில் பெண் ஒருவர் தலையில் கல்லை போட்ட நிலையில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணிற்கு 30 முதல் 35 வயது இருக்கும். அவரது உடல் அருகே சிகப்பு கலர் சுடிதார் இருந்தது. மேலும் கல் ஒன்றும் இருந்தது. அந்தக் கல்லை மீட்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
பெண் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் அவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரத்தம் உறைந்து காணப்படுவதால் கொலை நடந்து ஒரு நாட்கள் மேலிருக்கும் என போலீசார் தெரிவித்தனர். அந்தப் பெண் உடல் அருகே சிகரெட்டுகள் இருந்தன.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண் எதற்காக வந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர்.
மேலும் மோப்பநாய், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டதால் அவரது முகம் சிதைந்து இருந்தது. இதனால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் அருகே உள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது பெண் மாயமாகி உள்ளாரா என்று புகார் வந்துள்ளதா என்பது குறித்தும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
- 2 தினங்களுக்கு முன்பு தாளவாடி மலைப்பகுதியில் யானைகள் மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
- வனத்துறையினரின் அலட்சியப் போக்கால் மலை கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளோம்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை தின்பதும், மிதிப்பதும் என சேதப்படுத்தி வருகின்றன.
2 தினங்களுக்கு முன்பு தாளவாடி மலைப்பகுதியில் யானைகள் மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் ஆசனூர் வனக்கோட்டம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூத்தாளபுரம் கிராமத்தில் ரத்தினம்மா என்பவர் விளை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் விவசாயி ரத்தினம்மா தோட்டத்திற்குள் புகுந்தன. அறுவடை செய்து வைத்திருந்த மக்காச்சோள கதிர்களை யானை கூட்டங்கள் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தோட்டத்திற்குள் இருந்த யானை கூட்டம் மக்காச்சோள கதிர்களை சேதப்படுத்தின.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து கூச்சலிட்டும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தனது நீண்டகால விவசாய உழைப்பில் அறுவடை செய்து வைத்திருந்த மக்காச்சோள கதிர்களை யானைகள் தின்றுவிட்டு சென்றதால் விவசாயி ரத்தினம்மா மிகவும் வேதனை அடைந்தார்.
கேர்மாளம் வனச்சரக அலுவலகத்திற்கு யானைகள் அட்டகாசம் செய்வது குறித்து புகாரளித்தால் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொள்வதில்லை, மேலும் யானைகளின் அட்டகாசங்கள் குறித்து தொலை பேசியில் தொடர்பு கொண்டு கூறினால் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். வனத்துறையினரின் அலட்சியப் போக்கால் மலை கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளோம்.
எனவே வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமெனவும், கிராமத்தை ஒட்டி அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட விவசாயி ரத்தினம்மாவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றனர்.
- தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரே நாளில் 10,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
- தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் த.வெ.க.விற்கு வருவார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக வெற்றிக்கழகத்தின் ஒரே எதிரி தி.மு.க. தான். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.
* தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான். அ.தி.மு.க. ஒரு கட்சியே அல்ல.
* தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரே நாளில் 10,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
* த.வெ.க. சார்பில் விருப்ப மனு அளிக்க வந்து 15,000 பேர் திரும்ப சென்றதால் ஆன்லைனில் விருப்ப மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* த.வெ.க. கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் த.வெ.க.விற்கு வருவார்கள்.
* குறுகிய காலக்கட்டத்தில் கூட்டணி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பஸ்சை அந்தியூர் புதுப்பாளையம் பகுதி சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார்.
- அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் ராஜாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 9.10 மணியளவில் மேட்டூர் நோக்கி அரசு பஸ் கிளம்பியது. பஸ்சை அந்தியூர் புதுப்பாளையம் பகுதி சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார். சக்திவேல் நடத்துநராக இருந்தார். பஸ் 35 பயணிகளுடன் கிளம்பியது.
இந்நிலையில் அண்ணா மடுவு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் ராஜாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக இதற்கு மேல் பஸ்சை இயக்க முடியாது என உணர்ந்த ராஜா பஸ்சை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே நிறுத்தினார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி அதிகமானதால் அலறினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அந்த தனியார் மருத்துவமனையில் ராஜாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நல்ல வேலையாக நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் ராஜா பஸ்சை சாமர்த்தியமாக ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பஸ்ஸில் இருந்த 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து அந்தியூர் பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து வேறு பஸ் வரவழைக்க பயணிகள் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் த.வெ.க.வுக்கு வாக்கு அளிக்க உள்ளனர்.
- தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலகத்தை நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செங்கோ டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* த.வெ.க.தலைவர் விஜய்யின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது .
* அனைத்து இல்லங்களிலும் த.வெ.க.வின் குரல் ஒலித்துகொண்டு இருக்கிறது.
* 3-ம் ஆண்டு விழாவில் விஜய் சிறப்பாக உரையாற்றினார். அவருடைய இலக்கு தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆண்டு உள்ளன. இந்த முறை மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.
* வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் த.வெ.க.வுக்கு வாக்கு அளிக்க உள்ளனர்.
* தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்.
* ராசிபுரம் கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டத்தில் அவர்களே த.வெ.க கொடியை பிடித்து விட்டு த.வெ.க.வினர் வந்தனர் என தவறாக கூறியுள்ளனர்.
* வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை மறுநாள் விருப்ப மனு அளிக்க உள்ளேன்.
* முருகன் பக்தி பாடலை பாடி வேல்முருகன் ஆட கூறியதால் விஜய் நடனம் ஆடினார். அதை விமர்சனம் செய்கிறார்கள். நயினார் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணி சலங்கை கட்டி ஆடவில்லை.
* எப்போதும் விஜயுடன் தான் இருப்பேன். 2 நாட்களில் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
* ஆட்சிக்கு வந்தபிறகு பட்ஜெட் குறித்து பேசுகிறோம்.
* திண்டுக்கல் சீனிவாசன், விஜய் கருப்பு பணம் வாங்குவது குறித்து ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். வாய் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது.
* அவர்கள் யாரிடம் அடிமையாக இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
* த.வெ.க.தனித்துப் போட்டியிடுவது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மவுனம் வெற்றிக்கு அறிகுறி என்றார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் த.வெ.க.வால் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி சரியாது, தி.மு.க.விற்கு தான் பாதிப்பு என்று சொல்லி உள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு,
2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். தேர்தல் முடிவுக்கு பிறகு யார் எங்களை கண்டு அச்சப்படுகிறார்கள். யாருக்கு நாங்கள் போட்டி. யாருடைய வாக்கு வங்கி சரிகிறது என்பது தெரியவரும், என்றார்.
- ஆயிரம் கோடி வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காக வந்துள்ளார்.
- நான் அதிமுகவில் இருந்த பொழுது எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பிரதமர் படத்தை வைத்துள்ளனர் .
ஈரோடு மாவட்டம் கோபி மேற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக அலுவலகத்தை தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே .ஏ .செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தைப்பூச நாளன்று இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது .இதற்காக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எந்த திசையை காண்பிக்கிறாரோ அதைநோக்கி செல்ல தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் புதிய மாற்றம் ஏற்பட உள்ளது. அவருடைய வெற்றி உறுதி என்ற நிலையில் உள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது ஆளும் கட்சி, ஆண்ட கட்சிக்கு மாற்றாக தமிழக வெற்றி கழகம் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது. அவர் செல்லும் இடமெல்லாம் அவர் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலோடு மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் கோடி வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காக வந்துள்ளார். கூட்டணியில் யார் வரவேண்டும் என்பதை தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். மேலும் அவர் எந்த தேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். விரைவில் மாற்றுக் கட்சியிலிருந்து இக்கட்சியில் ஏராளமானோர் சேர உள்ளனர். நான் அதிமுகவில் இருந்த பொழுது எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பிரதமர் படத்தை வைத்துள்ளனர் .
அந்த கட்சி தற்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை. ஈரோடு புறநகர் மாவட்டத்திற்கு இன்னும் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரே நியமிக்கப்படவில்லை. மேலும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ தான் தற்பொழுது பொறுப்பு வகித்து வருகிறார். இதிலிருந்து அந்த கட்சியினுடைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடுகளிலும் மகன், மகள், மனைவி ஆகியோர் விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்து விட்டனர் என்றார்.
பேட்டியின் போது மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜம்பு கார்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கண்டெய்னருக்குள் சோதனை செய்தபோது ரகசிய அறை இருந்ததை போலீசார் கண்டு பிடித்ததனர்.
- ரவியை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பெருந்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கர்நாடகா மாநிலத்திலிருந்து இரும்பு பீரோ மற்றும் கட்டில் ஏற்றி கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி வந்தது. பெருந்துறை போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது கண்டெய்னருக்குள் சோதனை செய்தபோது ரகசிய அறை இருந்ததை போலீசார் கண்டு பிடித்ததனர். ரகசிய அறையை திறந்து சோதனை செய்தபோது அதில் 745 கிலோ கிராம் எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
பின்னர் லாரி டிரைவரை பிடித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கென்னாலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (30) என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரவியை கைது செய்து கண்டெய்னரில் ரகசிய அறையில் இருந்த புகையிலை மற்றும் குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ரவியை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் விவாகரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






