என் மலர்
திண்டுக்கல்
- வருகிற 12ந் தேதி முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும்.
- திருக்கார்த்திகை தீபம், சொக்கபனை ஏற்றும் நிகழ்வுகள் மறுநாள் 13ந் தேதி நடைபெறுகிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
இன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பிறகு மூலவருக்கும், சண்முகருக்கும் காப்பு கட்டப்படும். தொடர்ந்து துவார பாலகர்கள், நவவீரர்கள், மயில், தீபக்கம்பம் ஆகியவற்றுக்கு காப்பு கட்டப்படும். அதன்பின் மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனையும், சண்முகர்தீபாராதனையும் நடைபெறும்.
இரவு 7 மணிக்கு தங்க ரத புறப்பாடு நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து 6 நாட்களும் பூஜைகள் நடைபெறும். வருகிற 12ந் தேதி முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும்.
திருக்கார்த்திகை தீபம், சொக்கபனை ஏற்றும் நிகழ்வுகள் மறுநாள் 13ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஷ்வரூப தரிசனம் நடைபெறும். மாலை 4.45 மணிக்கு மேல் சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கபனை கொளுத்தப்படும். அதனைத் தொடர்ந்து திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு வருகிற 13ந் தேதி பாதுகாப்பு கருதி பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது. அதாவது கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் யானைப்பாதை வழியாகவும், இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் மதியம் 2 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 6 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் செல்லலாம். கார்த்திகை தீபத்திருநாளன்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
- கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
- வாட்ச்மேன் எழுந்து பார்த்தபோது கடையின் ஷோரூம் கண்ணாடி உடைந்து கிடந்ததையும், கார் திருடப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆயக்குடி பேரூராட்சி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான மாருதி கார் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. இதன் உரிமையாளர் காரைக்குடியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த ஷோரூமில் ஆயக்குடியைச் சேர்ந்த அல்லிமுத்து (75) என்பவர் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணியில் இருந்த அவர் 12 மணியளவில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கவே அருகில் உள்ள ஒரு ஷெட்டில் தூங்கச் சென்று விட்டார்.
அப்போது ஷோரூமில் முன் பக்க கண்ணாடியை உடைத்து ஒரு கும்பல் உள்ளே புகுந்தனர். மேலும் கடையினுள் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் உடைத்தனர். அங்கு வாடிக்கையாளர்களின் டெமோவுக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஸ்விப்ட் காரை அவர்கள் திருடிச் சென்றனர்.
செல்லும் போது சி.சி.டி.வி. கேமராவின் ஹார்டிஸ்க்கையும் எடுத்துச் சென்றனர். இன்று அதிகாலை வாட்ச்மேன் எழுந்து பார்த்தபோது கடையின் ஷோரூம் கண்ணாடி உடைந்து கிடந்ததையும், கார் திருடப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ஆயக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர். இது குறித்து காரைக்குடியில் உள்ள உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சாலை 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் முக்கிய சாலையாகும். அந்த பகுதியிலேயே மர்ம கும்பல் புகுந்து காரை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
- காளை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசு பொருட்களை வென்று புகழ் பெற்றுள்ளது.
- காளை இறந்ததால் நத்தம் பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.ஜி.ஆர் நகரில் அமைந்துள்ளது அரண்மனை சந்தன கருப்பு சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான கோவில் காளை நேற்று உடல்நலக்குறைவால் இறந்துவிட்டது.
கோவில் முன்பு வைக்கப்பட்ட காளைக்கு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த கோவில் காளை அலங்காநல்லூர், பாலமேடு, கொசவபட்டி, அய்யாபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசுகளையும், சில்வர், பித்தளை, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை வென்று புகழ் பெற்றுள்ளது.
தொடர்ந்து அந்த காளை கோவிலின் அருகிலேயே மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஊரின் காவல் தெய்வமான அரண்மனை சந்தன கருப்பு சுவாமி கோவில் காளை இறந்ததால் நத்தம் பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.
- திருமணமான ஒரே வருடத்தில் தீபக் பாண்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- புரோட்டா சாப்பிட்டு நெஞ்சு வலி வந்து கபடி வீரர் உயிரிழந்ததால் அவரது நண்பர்களும் கிராமத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தீபக் பாண்டி (வயது 28). இவர் கபடி விளையாட்டு வீரர். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா வாங்கி வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டார். பின்னர் தீபக் பாண்டி வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் வாடிப்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிதும் பலனின்றி பரிதாபமாக தீபக் பாண்டி இறந்தார். திருமணமான ஒரே வருடத்தில் தீபக் பாண்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புரோட்டா சாப்பிட்டு நெஞ்சு வலி வந்து கபடி வீரர் உயிரிழந்ததால் அவரது நண்பர்களும் கிராமத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.
- கருவறைக்குள் சுமார் 30 நிமிடத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.
- தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்களுக்கு சுமார் 40 நிமிடம் தடை விதிக்கப்பட்டது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர்.
இங்குள்ள கருவறையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறது. இது பழனி மலை முருகனின் தனிச்சிறப்பாகும்.
நவபாஷாண சிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த நிலையில் சிலையின் உறுதிதன்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சார்பில் சிறப்புக்குழுவை அமைக்க உத்தரவிட்டது.
அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி பொன் காளியப்பன் தலைமையில் ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி இன்று பழனி கோவிலுக்கு வந்த முன்னாள் நீதிபதி பொன் காளியப்பன், ஸ்தபதி தட்சிணாமூர்த்தி கொண்ட குழுவினர் இது குறித்து தேவஸ்தான நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து கால பூஜைகளுக்கு பின்பு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அந்தக்குழுவினர் கருவறைக்குள் சென்று சோதனை நடத்தினர். கருவறைக்குள் சுமார் 30 நிமிடத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.
இதனால் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்களுக்கு சுமார் 40 நிமிடம் தடை விதிக்கப்பட்டது. சோதனை முடிந்த பிறகு அதிகாரிகள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருவறைக்குள் நவ பாஷாண சிலையை அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஓட்டிச் செல்கின்றனர்.
- அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களாக அவ்வப்போது திடீரென கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
எதிரே யார் வருகிறார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.
வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஓட்டிச் செல்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்த நிலையில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றமடைந்தனர். பள்ளிக்கு செல்வதா வேண்டாமா என அரசு நிர்வாகம் மாணவ- மாணவிகளை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 8 மணி வரை அரசு பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வராததால் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு மத்தியில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.
உள்ளூர் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னதாகவே எந்த அறிவிப்பையும் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்காததால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பதில் தாமதம் காட்டியது.
அதிகாலை முதலே மின்சாரமும் இல்லை கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழையும் இருந்து வந்ததால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மலைகிராமங்களிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது.
- பள்ளி திறக்கப்பட்டு 1 வருடம் ஆகியும் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
- உடனடியாக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது பரளிபுதூர் ஊராட்சி. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் படிப்பதற்காக 1 கி.மீ. தூரத்தில் பரளிபுதூரில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வந்தனர்.
இதனால் தங்கள் பகுதிக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க தொடக்கப் பள்ளி அமைக்க கோரி கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் 2023-ம் ஆண்டு டிசம்பரில் பரளிபுதூரில் ரூ.39 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கொண்ட பள்ளி கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது.
ஆனால் பள்ளி திறக்கப்பட்டு 1 வருடம் ஆகியும் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் இன்று காலை பள்ளி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்தும், உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் மாணவ-மாணவிகளை வகுப்பறைக்குள் அமரவைத்து கிராமத்து இளைஞர்களே பாடம் நடத்தினர். போராட்டம் நடப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,
1 வருடமாக குழந்தைகள் எந்தவித படிப்பறிவும் இல்லாமல் வெறுமனே பள்ளிக்குச் சென்று வீடு திரும்பி வருகின்றனர். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழனி:
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆன்மீக பயணமாக பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கும் செல்கின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், அடிவாரம், கிரிவீதி, படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர்.
மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் வரிசையில் காத்திருந்து முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.
ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த போதிய அளவு இடம் இல்லாததால் சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்கும் விதமாக கொடைக்கானல் செல்லும் சாலையில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
- 2 தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார், தலைமையில் வனவர்கள் ரமேஷ், முத்துகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, பெரும்பாறை, சித்தரேவு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வத்தலக்குண்டு வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது36), கொடைக்கானல் பள்ளங்கியை சேர்ந்தவர் ஜெயராமன் (74), வீரக்கல் கும்மம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (49) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் விற்பனைக்காக 2 யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.
கொடைக்கானல்:
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காணரமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு செல்ல பழனி, வத்தலக்குண்டுவில் இருந்து மலைச்சாலை உள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து பெரியகுளம், அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மலைச்சாலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டதால் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இலகுரக வாகனங்கள், பைக்குகள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடுக்கம் சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.
இதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். தற்காலிக சீரமைப்பிற்கு பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் தடுப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
திண்டுக்கல் 2, காமாட்சிபுரம் 3.8, நிலக்கோ ட்டை 2.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 2.2, புகையிலை ஆராய்ச்சி மையம் 2.2, பழனி 3, ரோஸ்கார்டன் 2.5, பிரையண்ட் பூங்கா 1.5 என மாவட்டம் முழுவதும் 19.40 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- தொழில் அதிபர் ரத்தினம் தமிழகம் முழுவதும் மணல் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
- ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர் ரத்தினம். இவருக்கு திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இது தவிர தமிழகம் முழுவதும் மணல் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிக அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பலர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆடிட்டர் பிரேம்குமார், திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம், புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் இவ்வழக்கில் இருந்து வெளியே வந்தனர். ஏற்கனவே தொழில் அதிபர் ரத்தினம் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமாக உள்ள இடங்களில் 2 முறை அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள ரத்தினத்தின் அலுவலகத்திற்கு 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த நபர்களிடம் ரத்தினம் எங்கே உள்ளார் என விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து அலுவலகத்தின் கதவை பூட்டிக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சியில் 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை சோதனை குறித்து அறிந்ததும் அவரது ஆதரவா ளர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
- பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் அவரை காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆத்திக்கண்ணன் (வயது32). இவர் உள்பட அதே பகுதியை சேர்ந்த 12 பேர் கடந்த ஆண்டு அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்பு குழு மாவட்ட பொருளாளரான மாதவத்துரை (39) மற்றும் கோவையை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் கலில்ரகுமான் ஆகியோரை அனுகினர். அவர்கள் பழனி கோவிலில் வேலை வாங்கி தருவதாகவும், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாங்கி தருவதாகவும் ரூ.34 லட்சம் பெற்றனர்.
ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டனர். ஆனால் அவர்கள் பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
மாதவத்துரை தலைமறைவான நிலையில் கலில்ரகுமான் இதேபோன்று பல்வேறு நபரிடம் மோசடி செய்து கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






