என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஷோரூம் கண்ணாடியை உடைத்து காரை திருடிச் சென்ற மர்ம கும்பல்
- கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
- வாட்ச்மேன் எழுந்து பார்த்தபோது கடையின் ஷோரூம் கண்ணாடி உடைந்து கிடந்ததையும், கார் திருடப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆயக்குடி பேரூராட்சி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான மாருதி கார் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. இதன் உரிமையாளர் காரைக்குடியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த ஷோரூமில் ஆயக்குடியைச் சேர்ந்த அல்லிமுத்து (75) என்பவர் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணியில் இருந்த அவர் 12 மணியளவில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கவே அருகில் உள்ள ஒரு ஷெட்டில் தூங்கச் சென்று விட்டார்.
அப்போது ஷோரூமில் முன் பக்க கண்ணாடியை உடைத்து ஒரு கும்பல் உள்ளே புகுந்தனர். மேலும் கடையினுள் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் உடைத்தனர். அங்கு வாடிக்கையாளர்களின் டெமோவுக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஸ்விப்ட் காரை அவர்கள் திருடிச் சென்றனர்.
செல்லும் போது சி.சி.டி.வி. கேமராவின் ஹார்டிஸ்க்கையும் எடுத்துச் சென்றனர். இன்று அதிகாலை வாட்ச்மேன் எழுந்து பார்த்தபோது கடையின் ஷோரூம் கண்ணாடி உடைந்து கிடந்ததையும், கார் திருடப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ஆயக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர். இது குறித்து காரைக்குடியில் உள்ள உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சாலை 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் முக்கிய சாலையாகும். அந்த பகுதியிலேயே மர்ம கும்பல் புகுந்து காரை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.






