என் மலர்
கடலூர்
கடலூர் பச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுமதி (வயது 47). இவர் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சுமதி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக சுமதி இறந்தார்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுமதிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததும், மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
சிறுபாக்கம்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சிறுபாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.விவசாயி. இவரது மனைவி சாந்தி (வயது31). இவர் நேற்று மாலை அதே பகுதியில் இருக்கும் தனது விவசாய நிலத்துக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். மலையனூர் பாதையில் வந்த போது ஒரு மோட்டார் சைகிக்கிளில் 2 மர்ம வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாந்தியை வழிமறித்தனர். அவர்கள் சாந்தியை பார்த்து, கழுத்தில் கிடக்கும் நகையை கழற்றி கொடு என்று கேட்டனர். அதற்கு சாந்தி மறுத்தார். உடனே அவர்களில் ஒருவர் சாந்தியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார். மற்றொருவர் சாந்தியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க நகையை பறித்தார். பின்னர் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சிறுபாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இன்று காலை நகர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்துக்குள் அதிவேகமாக ஒரு சொகுசு கார் நுழைந்தது. போலீசார் அந்த காரை வழி மறித்தனர். காரில் ஒரு பெண் உட்பட 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் விசாரணை நடத்தினார். அதில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரகுமார் (வயது 36), வேலூர் மாவட்டம் ஆற்காடு சாத்தூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (29), ராணி பேட்டையை சேர்ந்த ஒரு பெண் என்பதும் தெரிய வந்தது. மேலும் ராஜேந்திரகுமார் மற்றும் சிவகுமார் சேர்ந்து அந்த பெண்ணை விபச்சாரத்துக்காக காரில் அழைத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ராஜேந்திரகுமார், சிவகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்கள் வந்த 5 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி டாடா சுமோ காரில் போலீசார் இன்று காலை சென்றனர். கடலூர் அருகே சிப்காட் பஸ் நிறுத்தத்தில் வந்த போது அந்த கார் திடீரென்று நிலைதடுமாறி ரோட்டில் தாறுமாறாக ஓடியது.
அப்போது பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த 10 பயணிகள் மீது அந்த கார் மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் கடலூரை அடுத்த பெரிய பிள்ளையார்மேடு கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டில் பொதுச் செயலாளர் பதவி செல்லாது என தீர்ப்பு வழங்கினால் சசிகலா பதவி விலகுவாரா?
மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கலந்து கொண்டனர். அதே எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எங்கள் ஆதரவு உங்களுக்குதான் எனக் கூறினர்.
அமைச்சர்கள் திருத்தப்படுவார்கள் என டி.டி.வி.தினகரன் கூறினார். நாங்கள் யாரும் அடிமை கிடையாது. ஜெயலலிதா தான் எங்களை நியமித்தார். டி.டி.வி.தினகரன் அப்படி கூறுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது.
பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றவுடன் எதிர்பாராமல் எனக்கு பொருளாளர் பதவி வழங்கினார். அந்த அடிப்படையில் தான் சசிகலா காலில் விழுந்தேன். அந்த படத்தை தான் டி.டி.வி.தினகரன் வெளியிடுவதாக கூறுகிறார்.
அதேபோல் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பதவியேற்றவுடன் என் காலிலும், அமைச்சர் செங்கோட்டையன் காலிலும் விழுந்தார். அந்த படத்தை அவர் வெளியிடுவாரா? 135 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து காலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்து பார்வையிட்டனர்.
பின்னர் எம்.ஜி.ஆர். உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த கண்காட்சியில் பென்சில், ஸ்டோக், லைன் போன்றவற்றை பயன்படுத்தி எம்.ஜி.ஆர். வாழ்க்கை 15 வயது முதல் அவரது இறுதி நாட்கள் வரை உள்ள படங்களை கடந்த 10 நாட்களில் 100 ஓவியங்களை ஓவியர் ஜெ.ஜெ தலைமையில் வரைந்தனர்.
மேலும் எம்.ஜி.ஆர். சொந்த வாழ்க்கை, திரைப்படத் துறை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கை குறித்து தத்ரூபமாக ஓவியம் வரைந்து இருந்தனர். இந்த கண்காட்சியில் எம்.ஜி.ஆர். குறித்து புகைப்படம் இருந்தது. இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட எம்.பி.க்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
கடலூரில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முதல்-அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் ‘குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. கடுமையான வறட்சி இருந்தாலும் மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம். தொழில்துறை, விவசாயத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். யாரைப்பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்’ என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கமல் தொடர்ச்சியாக விமர்சிப்பது ஏன்? என்பதை கமலிடம் தான் கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
வராலற்று சிறப்பு மிக்க கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதில் பெருமைப்படுகிறேன். கடலூர் மாநாட்டின் மூலம் தான் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. கடலூர் மாவட்ட பெண்கள் வீரமும் விசுவாசமும் மிக்கவர்கள்.
ஒரு நடிகரும் தலைவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள். சமூக விழிப்புணர்வு பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இன்றைய இளைஞர்களுக்கும் நாளைய இளைஞர்களுக்கும் படிப்பினையாக திகழ்ந்தவர். இளைஞர்களை நம்பித்தான் நாடு இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.
கடலூர் மாவட்ட மக்கள் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு வாழ்கிறார்கள். இளைஞர்கள் இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் சிறப்பாக அதை எதிர்கொண்டார்கள்.
ஜெயலிதாவின் வழியில் ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்தும் தகுதி தொண்டர்களுக்கு மட்டும்தான் உள்ளது. ஆணவம் மிக்கவர்கள் இயற்கையின் முன் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்கள்.
கடலூர் துறைமுக மேம்பாட்டு திட்டம் மூலம் மீனவர்களின் படகுகள் எளிதாக வந்து செல்ல முடியும். சரக்குகளையும் எளிதாக கையாள முடியும். விவசாயிகளுக்கு வறட்சி நிவரண நிதி தாராளமாக வழங்கப்படுகிறது. வறட்சியிலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டது தமிழக அரசு. கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது. உயர்கல்வி படிக்கும் மணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர் சிறியவர் என்று பார்க்காமல் இணக்கமாக வாழ வேண்டும். நான் என்கிற மமதையுடன் செயல்படுபவர்கள் இடம்தெரியாமல் போய்விடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரிவாக எடுத்துரைத்தார்.
அ.தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. கடலூரில் இன்று மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது.
இதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
மேடைக்கு முன்பாக பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கு ஏராளமான சேர்கள் போடப்பட்டுள்ளது.
மேலும் விழா நிகழ்ச்சிகளை காண 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.சி.டி டி.விக்கள் வைக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்குகிறது. விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார்
விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். மேலும் 41 ஆயிரத்து 608 பயனாளிகளுக்கு ரூ.212 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.
இதுதவிர ரூ.312 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.50 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி, மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
அ.தி.மு.க. (அம்மா அணி) மாவட்ட செயலாளர்கள், கடலூர் மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். முடிவில் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நன்றி கூறுகிறார்.
முன்னதாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி நகரின் முக்கிய இடங்களில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பிரமாண்டமான விளம்பர பதாகைகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.
பகலை இரவாக்கும் வகையில் மின்விளக்கு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கொடி, தோரணங்களும் கட்டப்பட்டு நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முதல்-அமைச்சர் கடலூர் வருவதையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதரன் தலைமையில், டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருப்பூர், சேலம், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களை சேர்ந்த 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடலூர்:
கடலூரில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க கோரி பிரதமரை 4 முறை சந்தித்து இருக்கிறோம். விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக 54 ஆயிரம் கேள்விகளுக்கான விடைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ளோம்.
மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசின் ஆணைக்கு இணங்க ஆய்வின் அடிப்படையில் 2 பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
புதிய பாடதிட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உயர்மட்டக்குழு பரிந்துரையின் பேரில் புதிய பாட திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கும். 7 ஆயிரத்து 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால் தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி இருக்கிறோம். கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள தனியார் பள்ளிகளில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை. வரும் காலத்தில் கடலூர் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சியை சேர்ந்தவர் சேரன் (வயது 45). இவர் சென்னை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் தனது சொந்த ஊரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி சேரன், அவரது குழந்தைகள் 2 பேர், தாய் பழனியம்மாள் (60) மற்றும் உறவினர் ஒருவருடன் சென்னையில் இருந்து இரும்புலிகுறிச்சிக்கு காரில் புறப்பட்டார்.
அவர்கள் குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் நேற்று இரவு ஊரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். காரை டாக்டர் சேரன் ஓட்டினார்.
அந்த கார் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென்று சேரனின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சேரனின் தாய் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த டாக்டர் சேரன், அவரது குழந்தைகள் மற்றும் அவரது உறவினர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரின் இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கும் விவகாரத்தில் சாத்தியப்படக்கூடிய வகையில் மாநில அரசு மீண்டும் கோரிக்கை வைத்தால் அதை மத்திய அரசு பரிசீலித்து ஒரு சாதகமான முடிவெடுக்கும் வாய்ப்பு உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வு எழுதி மருத்துவ படிப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள், ‘நீட்’ தேர்வு எழுதியவர்கள் தாங்கள் எந்த நிலையில் கருதப்படுவார்கள் என்பதை ஒரு கேள்விக்குறியாகவே பார்த்துக்கொண்டிருப்பார்கள். தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் மாநில பாட திட்டத்தில் படித்தவர்கள். இவர்களில் அதிகம்பேர் கிராமப்புற மாணவர்கள். அதிலும் மருத்துவ படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும் இடம் கிடைப்பது கடினம் என கூறி வருகிறார்கள்.

இது குறித்து நானும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து இருக்கிறோம். மத்திய மந்திரிகளை சந்தித்து இருக்கிறோம். பிரதமரை பொறுத்தவரை கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மாநில அரசு சாத்தியப்படக்கூடிய வகையில் மீண்டும் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு அதை பரிசீலனை செய்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வாகனங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தாவிட்டால் அவற்றை அடித்து நொறுக்குவேன் என்று வைகோ கூறியிருப்பது அவருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள எந்த கட்சிக்கும் நல்லதல்ல. அதிகாரத்தை கையில் எடுப்பதாக இருந்தால் அது எந்த நிலையில் கொண்டு விடும் என தெரியாது. எனவே இதுபோன்ற நிலைப்பாட்டை வைகோ தவிர்க்க வேண்டும்.
ஒரு திட்டம் கொண்டு வரப்படும்போது அந்த திட்டத்தால் தமிழக மக்களுக்கு நஷ்டம் இருக்கிறதா, லாபம் இருக்கிறதா, அடுத்த தலைமுறைக்கு வளர்ச்சி கிடைக்குமா, கிடைக்காதா என பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






