என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் அய்யாயிரம், வெங்கடேசன், மாநில நிர்வாகிகள் குரு, நீதிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.

    இதில் மாநில நிர்வாகிகள் செம்மல், முத்தையன், தொகுதி துணை செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் சுப்புஜோதி, தாமோதரன், வேல்முருகன், சந்தோஷ்குமார், ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் நகர பொருளாளர் முருகன் நன்றி கூறினார். இதில் வருகிற 17-ந் தேதி அன்று பிறந்தநாள் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் அனைத்து கிளைகள் தோறும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவதுடன், கடலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் பனை கன்றுகளை நடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கடலூர் முதுநகர் மரப்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த சப்- இன்ஸ்பெக்டருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக இளங்கோவன் உள்ளார். இன்று காலை இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து வழக்கம்போல் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    கடலூர் முதுநகர் மரப்பாலம் அருகே வந்தபோது திடீரென்று நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இளங்கோவன் கீழே விழுந்து காயமடைந்தார். அவரை பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இத்தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.
    15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நெய்வேலியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே மாற்று குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பி-1 பிளாக்கில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ச்கேட் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ரவி. தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர் கீழ்கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆறுமுகத்தின் வீட்டில் இருந்த நாய் திடீரென வள்ளியை விரட்டி சென்று கடிப்பதுபோல் சென்றது.

    இதில் அதிர்ச்சியடைந்த வள்ளி அங்கிருந்து வேகமாக ஓடினார். பின்னர் வீட்டுக்கு சென்ற வள்ளி தனது கணவர் ரவியிடம் நடந்ததை கூறினார்.

    பின்னர் ரவி தனது மனைவி வள்ளி மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தட்டிக்கேட்டார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியும், ரவி மற்றும் அவரது மனைவி வள்ளியும் படுகாயம் அடைந்தனர்.

    பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் இருதரப்பினரும் புகார் செய்தனர். ரவி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், அசோக், குப்பன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் அசோக்கை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் ரவி, திவான், ராதா, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் திவானை கைது செய்தனர்.

    இருதரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉஷேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    காதல் திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவி, வாலிபர் பாதுகாப்பு வழங்க கோரி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சினி. இவர் கடலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ரஞ்சனிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இரு வரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் ரஞ்சினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஞ்சினியும், சதீஷ்குமாரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த விபரம் ரஞ்சனியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ரஞ்சினியும், சதீஷ்குமாரும் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது ரஞ்சனி புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும், சதீஷ்குமாரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 920 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இன்று காலை ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.40 அடியாக உள்ளது. இதனால் ஏரி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. அந்த ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் வீராணம் ஏரி விளங்குகிறது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கன அடி தண்ணீர் குடிநீருக்காக அனுப்பப்படும். நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு பாலைவனம் போல் காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    வீராணம் ஏரிக்கு நேற்று 920 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.05 அடியாக இருந்தது. இன்று காலை ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.40 அடியாக உள்ளது. இதனால் ஏரி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதே அளவு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் இன்னும் 2 நாட்களில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியில் தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரி முழுமையாக நிரம்பியவுடன் முதலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிகிறது. #VeeranamLake
    பண்ருட்டி அருகே நாய் கடிக்க வந்ததால், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு காலனியை பகுதியை சேர்ந்தவர் ரவி. தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர் கீழ்கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆறுமுகத்தின் வீட்டில் இருந்த நாய் திடீரென வள்ளியை விரட்டி சென்று கடிப்பதுபோல் சென்றது. இதில் அதிர்ச்சியடைந்த வள்ளி அங்கிருந்து வேகமாக ஓடினார். பின்னர் வீட்டுக்கு சென்ற வள்ளி தனது கணவர் ரவியிடம் நடந்ததை கூறினார்.

    பின்னர் ரவி தனது மனைவி வள்ளி மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தட்டிக் கேட்டார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியும், ரவி மற்றும் அவரது மனைவி வள்ளியும் படுகாயம் அடைந்தனர்.

    பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் இருதரப்பினரும் புகார் செய்தனர். ரவி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், அசோக், குப்பன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் அசோக்கை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் ரவி, திவான், ராதா, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் திவானை கைது செய்தனர்.

    இருதரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉஷேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    சிதம்பரம் அருகே தோழிகளுடன் விளையாடி விட்டு வீடு திரும்பிய 8-ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிபடைபூதக்கேணி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜலாவுதீன். இவரது மகள் ஜாஹீத் பர்வின் (வயது 13).

    இவள் அங்குள்ள அரசு ஆரம்ப நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலையில் ஜாஹீத் பர்வின் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தின் கீழ் தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    பின்னர் அவள் தனது வீட்டுக்கு சென்றாள். சிறிது நேரத்தில் ஜாஹீத் பர்வின் திடீரென்று மயங்கி விழுந்தாள். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவளை சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இது குறித்து கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜாஹீத் பர்வின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மறைவையொட்டி உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 4 ராஜகோபுரங்களிலும் நேற்று இரவு 7 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
    சிதம்பரம்:

    உடல்நல குறைவால் மரணமடைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

    இதையொட்டி உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 4 ராஜகோபுரங்களிலும் நேற்று இரவு 7 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

    வானூர் அருகே நடந்து சென்ற கூலித் தொழிலாளி மீது வாகனம் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நல்லாவூரை சேர்ந்தவர் முருகைய்யன்(வயது 70). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு 11 மணியளவில் திண்டிவனம்-புதுவை சாலையில் ஓமந்தூர் தனியார் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.

    இதில் முருகைய்யன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்ற வாகனங்கள் அவரது உடல் மீது ஏறிச்சென்றது. இதில் முருகைய்யன் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிளியனூர் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ், தனிப்பிரிவு ராஜாராம் ஆகியோர் விரைந்து சென்று வாகன விபத்தில் இறந்த முருகைய்யன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    காட்டுமன்னார்கோவில் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரத்தில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் டிராக்டர்களில் அனுமதி பெறாமல் மணல் கடத்தி செல்வதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    அனுமதி பெறாமல் மணல் ஏற்றப்பட்ட டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடி வாலிபரை தேடி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் விபத்தில் காயம் அடைந்த மாணவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் மரியசூசைநகரை சேர்ந்தவர் ஜான்பீட்டர். இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 23). என்ஜினீயரிங் மாணவர். இவர் கடந்த 25.9.2014 அன்று அரசு பஸ்சில் சென்னை-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அந்த பஸ் ஆம்பூர் அய்யனார்மேம்பாலம் அருகே சென்ற போது, ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரியில் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இந்த விபத்தில் பிரேம்குமார் பலத்த காயமடைந்தார். இதில் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.

    இது பற்றி ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பிரேம்குமார் நஷ்டஈடு கேட்டு கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட பிரேம்குமாருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.43 லட்சத்து 22 ஆயிரத்து 949 வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை.

    மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன்படி வட்டியுடன் சேர்த்து ரூ.65 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் பிரேம்குமார் நிறைவேற்ற மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, அரசு போக்குவரத்து கழகம் பிரேம்குமாருக்கு நஷ்டஈடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று கடலூரில் இருந்து வேலூர் நோக்கி செல்ல இருந்த அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
    ×