search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veeranam lake waterlevel hike"

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 920 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இன்று காலை ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.40 அடியாக உள்ளது. இதனால் ஏரி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. அந்த ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் வீராணம் ஏரி விளங்குகிறது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கன அடி தண்ணீர் குடிநீருக்காக அனுப்பப்படும். நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு பாலைவனம் போல் காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    வீராணம் ஏரிக்கு நேற்று 920 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.05 அடியாக இருந்தது. இன்று காலை ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.40 அடியாக உள்ளது. இதனால் ஏரி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதே அளவு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் இன்னும் 2 நாட்களில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியில் தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரி முழுமையாக நிரம்பியவுடன் முதலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிகிறது. #VeeranamLake
    ×