என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே விதவை பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் புதுதெற்குவெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் மாயாவதி (வயது 31). விதவை பெண்ணான இவர்  வேப்பங்குறிச்சியை சேர்ந்த சுரேந்தர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் அருகே சென்றபோது  நெய்வேலி அருகே உள்ள கொள்ளிருப்பு காலனியை சேர்ந்த கார்த்திக், சதீஷ்குமார், ராஜதுரை, பிரகாஷ், சிவபாலன் ஆகியோர் வழி மறித்தனர்.

    பின்னர் மாயாவதிடன் வந்த நபரை 5 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து துரத்திவிட்டனர். அதனை தொடர்ந்து மாயாவதியை அங்குள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றனர்.

    அங்கு 5 பேரும் சேர்ந்து மாயாவதியை  மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர்.  இதில் மாயாவதி மயங்கினார். சிறிது நேரம்  கழித்து மாயாவதியை சாம்பல் ஏரி பகுதிக்கு தூக்கி சென்றனர். அங்கு 5 பேரும் சேர்ந்து மீண்டும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பின்னர் மாயாவதியை தோட்டத்திலிருந்து ரோட்டு பகுதிக்கு யார் அழைத்துகொண்டு விடுவது என்பது தொடர்பாக பிரகாசுடன் தகராறு ஏற்பட்டது.   

    இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து  அவருடன் வந்த பிரகாசை கல்லால் தாக்கி அடித்து கொன்றனர். பின்னர் போலீசில் சிக்கிய 4 பேரும் மது போதையில் நண்பர் பிரகாசை கொன்றதாக கூறினர்.  பெண்ணை கற்பழித்ததை மறைத்து விட்டனர்.

    இதற்கிடையில் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாயாவதி  நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் நெய்வேலி அருகே உள்ள கொள்ளிருப்பு காலனியை சேர்ந்த கார்த்திக், சதீஷ்குமார், ராஜதுரை, பிரகாஷ், சிவபாலன் ஆகியோர் சேர்ந்து தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.  

    போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக், சதீஷ்குமார், ராஜதுரை, சிவபாலன்  ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கற்பழிப்பு,   கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    கடலூரில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் மணிமண்டபத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
    கடலூர்:

    சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தின் உள்ளே அவரது 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, மணிமண்டபத்தை திறந்துவைத்தார். இதனை தொடர்ந்து அவரும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் முழுஉருவ சிலைக்கும், உருவபடத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இருவரும் மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.

    இந்த விழாவில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், வீரமணி, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    வாழும் போதே வரலாறாக வாழ்ந்த ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் அமைத்து, அதன் திறப்பு விழாவில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். விடுதலை போராட்ட தியாக சீலர்களில் ஒருவர் ராமசாமி படையாச்சியார்.

    இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நாடு விடுதலை பெற அரும்பாடுபட்டவர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனினும் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டவர் ராமசாமி படையாச்சியார். 1954-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பணியாற்றியவர்.

    நகைச்சுவையாகவும், தன்னுடைய கருத்தை ஆணித்தரமாகவும் பேசக்கூடியவர். தன்மானத்தை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காமல் அஞ்சாமல் பேசுபவர். சொன்னதை செய்தார். செய்ய முடியும் என்பதை மட்டுமே சொன்னார்.

    கடலூரில் ரெயில் பாதை, பஸ் நிலையம், மருத்துவமனை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க தனது நிலத்தை தானமாக கொடுத்தவர். அவரது சந்ததியினரும் நிறைய செய்கிறார்கள். தற்போது உள்ள பஸ் நிலையத்துக்கு தகுந்த வழியில்லாத காரணத்தினால் ரூ.20 கோடி நிலத்தை தானமாக வழங்கி உள்ளனர். இது பெருமையாக இருக்கிறது.

    வன்னியர் குல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஓராசிரியர் வேலை என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவர் ஆற்றிய பணிகளை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறோம். ராமசாமி படையாச்சியாரை மேலும் சிறப்பிக்கும் வகையில் சட்டமன்றத்தில் அவரது முழுஉருவ படம் என்னால் திறந்து வைக்கப்பட்டது.

    அமைச்சர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கேட்டு கொண்டதற்கு இணங்க, அவர் பிறந்த கடலூரில் மணி மண்டபமும், அதில் அவரது முழுஉருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து செய்திட சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா. 1993-ம் ஆண்டு சட்டமேற்றிய அரசியலமைப்பு சட்டத்தில் 9-வது அட்டவணையில் சேர்த்து அரசிதழில் பாதுகாப்பு பெற்று தந்தவர்.

    சமூக நீதிக்கு ஆபத்து வரும் போதெல்லாம் அதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து, அதனை களைய உரிய நடவடிக்கை எடுத்து வரும் அரசு ஜெயலலிதாவின் அரசு. வாக்குறுதி கொடுத்ததோடு மட்டும் நிற்காமல் அதை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்ற நாங்களும் சொல்வதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கை அரசு பரிசீலனையில் உள்ளது. இந்த அரசு நிச்சயம் இந்த சமுதாய மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள களமருதூர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 21). என்ஜினீயர். இவர் அந்த பகுதியில் உள்ள பிளஸ்-1 மாணவி ஒருவரை அவரது வீட்டில் இருந்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    வீட்டில் இருந்த மாணவி காணாமல் போனதை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் மாணவியை தேடிபார்த்தனர் ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அபிசேக்கிடம் இருந்து தப்பி வந்த பிளஸ்-1 மாணவி தனக்கு நடந்த துயர சம்பவத்தை அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக் கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அபிஷேக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    நெய்வேலியில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் சரகம் கொள்ளிருப்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் பிரகாஷ். (வயது 24). திருமணமாகாத இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு நீண்ட நேரமாகியும் பிரகாஷ் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பிரகாசை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரை காணவில்லை. இன்று காலை பிரகாஷ் நெய்வேலி அனல் மின் நிலையம் புதுசாம்பல் ஏரி திரவுபதி அம்மன் கோவில் அருகே பிணமாக கிடந்தார். இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து முனியனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த முனியன், அவரது மனைவி நீலா ஆகியோர் சம்பவ இடத்துக்கு அங்கு விரைந்தனர். பிரகாஷ் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.

    தகவல் அறிந்த தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் விரைந்தனர். அப்போது அங்கு பிரகாஷ் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அவரை யாரோ அடித்து கொன்று கோவில் பகுதியில் வீசி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பிரகாசை அடித்து கொன்றவர்கள் யார்? எதற்காக அடித்து கொன்றனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்த பிரகாசின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் தெர்மல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். கொலையாளிகளை கைதுசெய்ய கோரி கோஷமிட்டனர். போராட்டம் செய்த உறவினர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த கொலை தொடர்பாக 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதைக்குழியில் சிக்கிய 2 மகன்களை காப்பாற்றிய பஸ் கண்டக்டர் தண்ணீரில் முழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது நாலாந்தெத்து. இந்த ஊரை சேர்ந்தவர் ஜீவா (வயது 48). இவரது மனைவி ஜெயகாந்தி (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ஜீவா சிதம்பரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இன்று காலை ஜீவா தனது மகன்கள் 2 பேரையும் அழைத்துகொண்டு அங்குள்ள வெள்ளாற்றுக்கு குளிக்க சென்றார்.

    வெள்ளாற்றில் ஓடிய தண்ணீரில் ஜீவாவின் 2 மகன்களும் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு இருந்த புதைகுழியில் 2 பேரும் சிக்கி கொண்டு கூச்சலிட்டனர். மகன்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு குளித்துகொண்டிருந்த ஜீவா ஓடி சென்றார். 2 மகன்களையும் புதைகுழியிலிருந்து மீட்டுவிட்டார்.

    ஆனால் அவரால் புதைக்குழியிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்தார்.

    சிறிதுநேரத்தில் அவர் புதைகுழியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். கரையில் நின்ற 2 மகன்களும் தன் தந்தை தண்ணீரில் மூழ்கியதை அறிந்ததும் அவர்கள் ஊருக்குள் ஓடி சென்று அங்கு இருந்தவர்களிடம் நடந்த விபரத்தை கூறினர்.

    இதை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெள்ளாற்று பகுதிக்கு ஓடி வந்தனர்.

    அங்கு புதைக்குழியில் சிக்கி இறந்த ஜீவாவின் உடலை மீட்டனர்.

    இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 47 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்து பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    மேலும் கடலூர் பகுதியில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. மேலும் ஒருசில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடக்கு பாளையங்கோட்டை, புதுப்பாளையம், நாச்சியார் பேட்டை, ஸ்ரீஆதிவராகநல்லூர், மதகளிர் மாணிக்கம், அம்புஜவள்ளிபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சாலையில் சென்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள குன்னத்துஏரி உள்பட 8 ஏரி குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    பெண்ணாடம், திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இன்று காலையும் மழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பெண்ணாடம் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்களில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    மேலும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 47 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையினால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    கடலூர்:

    வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு அதிகாலை வரை நீடித்தது. அதன் பின்பு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்துகொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

    கடலூர் மஞ்சக்குப்பம் திருப்பாதிரிப்புலியூர், திருவந்திபுரம், ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, பாலூர், மேல்பட்டாம்பாக்கம் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது.

    கடலூர் நகரில் இன்று காலை 6.30 மணியளவில் காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழையின் தாக்கம் அதிகரித்தது. சுமார் 1 மணிநேரம் மழைகொட்டியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    கடலூர் ரெயில்வே சுரங்கபாதையில் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மாற்று பாதைவழியாக சென்றனர். கடலூர் உழவர் சந்தையிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    கடலூர் பஸ்நிலையம், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், பத்திரபதிவு அலுவலகம், சன்னதி தெரு, தேரடி வீதி, போன்ற இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    கடலூர் நகரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், கடும் அவதி அடைந்தனர், வேலைக்கு செல்வோர் கடும் பாதிப்படைந்தனர். அரசு அலுவலகம் செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

    பண்ருட்டி பகுதியிலும் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடம்புலியூர், அண்ணாகிராமம், முத்தாண்டிக்குப்பம், போன்ற பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

    சிதம்பரம், கிள்ளை, நெய்வேலி, விருத்தாசலம், வேப்பூர், பெண்ணாடம், முருகன் குடி, இறையூர், கோனூர், பூவனூர் பகுதியில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. பெண்ணாடம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோளம், கம்பு, பருத்தி போன்றவை பயிரிட்டிருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திட்டக்குடி பகுதியிலும் காற்றுடன் இன்று காலை 1 மணிநேரம் மழை கொட்டியது. திட்டக்குடி, ஆவினங்குடி, வாகையூர், ராமநத்தம், தொழுதூர் ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

    பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடல் சீற்றம் அதிகம் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடியுடன் மழை கொட்டியது. ஸ்ரீமுஷ்ணம் நகரம், எசனூர், மதகளிமாணிக்கம், குணமங்கலம், இணமங்கலம், புதுக்குப்பம், அந்தோணியார்புரம் போன்ற இடங்களில் நேற்று இரவு 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது.

    கடலூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
    கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்காத மத்திய- மாநில அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றில் தடுப் பணை கட்டுவதை தடுக்காத மத்திய-மாநில அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதற்கு முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ. க்கள்சரவணன், சபா. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய மாநில அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். 
    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரி மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த மாதம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொள்ளிடம் வழியாக தண்ணீர் வரத்து கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து முன்தினம் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழைபெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. எனவே ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று ஏரியின் நீர்மட்டம் 46.15 அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியில் நீர்மட்டம் 46.35 அடியாக உயர்ந்தது. வடவாறு வழியாக 500 கனஅடி தண்ணீர் வருகிறது. பாசனத்துக்கு 30 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    சென்னை மக்களின் குடிநீருக்காக 74 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து 25-வது நாளாக 74 கனஅடி நீர் அனுப்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது 2-வது முறையாக ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது.
    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதால் மாணவ- மாணவிகள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது மா.புதூர். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மா.புதூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் ஆசிரியை சாந்தி உள்பட 2 பேர் பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியர் சாந்தி அனைத்து மாணவர்களிடம் அன்பு செலுத்தி வந்தார். இந்தநிலையில் ஆசிரியை சாந்தி திடீரென்று ராமநத்தம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் பள்ளியில் ஆசிரியை சாந்திக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

    இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியை பாராட்டி பெற்றோர்கள் பேசினர்.

    அப்போது மாணவ, மாணவிகள் ஆசிரியை சாந்தியை இடமாற்றம் செய்யக்கூடாது. இதே பள்ளியில் தொடர்ந்து அவர் பணியாற்ற வேண்டும் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பெற்றோர்களும் கண்ணீர் வடித்தனர். ஆசிரியை சாந்தி தொடர்ந்து இங்கு பணியாற்றி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுக்க வேண்டும் என்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கதறி அழுத மாணவ, மாணவிகளை ஆசிரியை சாந்தி சமாதானம் செய்தார். பின்னர் அவர் பள்ளியை விட்டு சென்றார்.
    விருத்தாசலத்தில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளது என்று கூறி உறவினர்கள் மறியல் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 45). இவரது மனைவி லதா. இவர்களுக்கு சதீஷ் (16) என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர்.

    சந்திரசேகரன் அந்த பகுதியில் வாடகை பாத்திரக் கடை நடத்தி வருகிறார். சதீஷ் விருத்தாசலம் அருகே உள்ள பெரியவடவாடியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இன்று காலை மாணவர் சதீஷ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பகல் 11 மணிக்கு பள்ளி வளாகத்தில் சதீஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையறிந்த மற்ற மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆசிரியர்களும், மாணவர்களும் மயங்கி விழுந்த சதீசை மீட்டு விருத்தாசலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே பள்ளி வளாகத்தில் சதீஷ் மயங்கி விழுந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெற்றோரும், உறவினர்களும் தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு மாணவர் சதீசின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதை அறிந்ததும் உடனடியாக அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினர். அதனை தொடர்ந்து சதீசை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சதீசின் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டார் என்று அவர்கள் கூறினர். இதையறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சதீஷ் இன்று காலை பள்ளிக்கு சென்றபோது நன்றாகதான் இருந்தார். அவரது உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. அவரது சாவில் மர்மம் உள்ளது என்று பெற்றோரும், உறவினர்களும் கூறினர். அதனை தொடர்ந்து விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம்- சேலம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர்.

    அப்போது அங்கு வந்த தாசில்தார் கவியரசு மற்றும் விருத்தாசலம், மங்கலம்பேட்டை போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். நடவடிக்கை எடுக்கா விட்டால் மாணவர் சதீசின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.      
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவதூறாக காயத்ரி ரகுராம் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியினர் விருத்தாசலம் ஜங்‌ஷன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யை அவதூறாக காயத்ரி ரகுராம் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விருத்தாசலம் ஜங்‌ஷன் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் காயத்ரி ரகுராமை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தொகுதி செயலாளர் அய்யாயிரம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பு ஜோதி, திருஞானம், சந்தோஷ்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ரவி, மாநில நிர்வாகிகள் ராஜ்குமார், நீதி வள்ளல், மற்றும் மருதையன், அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பின்னர் காயத்ரி ரகுராமுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி அவரது உருவப்படத்தை எரித்து மறியல் செய்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
    ×