search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயங்கி விழுந்து இறந்த மாணவர் சதீஷ்
    X
    மயங்கி விழுந்து இறந்த மாணவர் சதீஷ்

    விருத்தாசலத்தில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவர் மரணம்

    விருத்தாசலத்தில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளது என்று கூறி உறவினர்கள் மறியல் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 45). இவரது மனைவி லதா. இவர்களுக்கு சதீஷ் (16) என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர்.

    சந்திரசேகரன் அந்த பகுதியில் வாடகை பாத்திரக் கடை நடத்தி வருகிறார். சதீஷ் விருத்தாசலம் அருகே உள்ள பெரியவடவாடியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இன்று காலை மாணவர் சதீஷ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பகல் 11 மணிக்கு பள்ளி வளாகத்தில் சதீஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையறிந்த மற்ற மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆசிரியர்களும், மாணவர்களும் மயங்கி விழுந்த சதீசை மீட்டு விருத்தாசலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே பள்ளி வளாகத்தில் சதீஷ் மயங்கி விழுந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெற்றோரும், உறவினர்களும் தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு மாணவர் சதீசின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதை அறிந்ததும் உடனடியாக அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினர். அதனை தொடர்ந்து சதீசை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சதீசின் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டார் என்று அவர்கள் கூறினர். இதையறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சதீஷ் இன்று காலை பள்ளிக்கு சென்றபோது நன்றாகதான் இருந்தார். அவரது உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. அவரது சாவில் மர்மம் உள்ளது என்று பெற்றோரும், உறவினர்களும் கூறினர். அதனை தொடர்ந்து விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம்- சேலம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர்.

    அப்போது அங்கு வந்த தாசில்தார் கவியரசு மற்றும் விருத்தாசலம், மங்கலம்பேட்டை போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். நடவடிக்கை எடுக்கா விட்டால் மாணவர் சதீசின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.      
    Next Story
    ×