search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல்போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.
    X
    வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல்போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

    வீராணம் ஏரி 2-வது முறையாக நிரம்புகிறது

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரி மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த மாதம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொள்ளிடம் வழியாக தண்ணீர் வரத்து கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து முன்தினம் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழைபெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. எனவே ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று ஏரியின் நீர்மட்டம் 46.15 அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியில் நீர்மட்டம் 46.35 அடியாக உயர்ந்தது. வடவாறு வழியாக 500 கனஅடி தண்ணீர் வருகிறது. பாசனத்துக்கு 30 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    சென்னை மக்களின் குடிநீருக்காக 74 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து 25-வது நாளாக 74 கனஅடி நீர் அனுப்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது 2-வது முறையாக ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது.
    Next Story
    ×