என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் அருகே 3 அடி உயரம் கொண்ட மணமக்களுக்கு பு.முட்லூர் கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மஞ்சக்குழி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் ஜெயபிரகாஷ் (வயது 28). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். 3½ அடி உயரமே கொண்ட இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இவரைப்போல் உயரம் குறைந்த பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

    இந்த நிலையில் ஜெயபிரகாசுக்கு திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டி கிராமத்தை சேர்ந்த வீராசாமி மகள் கலைச்செல்வியை மணம் முடிக்க முடிவு செய்தனர். அவர் 3 அடி உயரம் மட்டுமே இருந்தார். இதையடுத்து இவர்களது திருமணம் பு.முட்லூர் கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. மணமக்களை இருவீட்டார் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்தினர்.
    விருத்தாசலம் அருகே ஏரியில் குளிக்க சென்றவர்களை பயமுறுத்திய முதலையை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் உள்ள வண்ணாத்து ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் ஏரியில் குளிக்கச் சென்றவர்கள் முதலையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் விருத்தாச்சலம் வனத் துறை ஊழியர்கள் விரைந்து சென்று ஏரியில் முதலை உள்ளதா? என கண்காணித்தனர். ஆனால் முதலை எதுவும் தென் படவில்லை. வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு ஏரியில் முதலை இருப்பதாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் நேற்றிரவு அப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள் ஏரிக் கரையிலிருந்து நெல்வயல் பகுதிக்கு ஊர்ந்து சென்ற முதலையை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதலையை லாவகமாக பிடித்து கயிறால் கட்டி விருத்தாசலம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீட்டு முன்பு தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடலூர்:

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக கடலூர் நகர் பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், நவநீத நகர், வண்டிபாளையம் ரோடு, கம்மியம்பேட்டை மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள சுமார் 10,000 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலூர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து உள்ளது. எனவே அவர்கள் பாத்திரங்களை பயன்படுத்தி வெள்ள நீரை வெளியேற்றி வருகிறார்கள். நகராட்சி நிர்வாகமும் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

    நேற்று மாலையும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மஞ்சக்குப்பம், நேதாஜி சாலை, பாரதி ரோடு, புதுப்பாளையம் பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் கரை புரண்டு ஒடியது.

    பலத்த மழைக்கு கடலூர் திருப்பாதிரியூர் நவநீத நகரை சேர்ந்த ராஜ் (வயது 60) பலியானார். இவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் வெளியே வந்தபோது கால் தடுக்கி விழுந்தார். அப்போது அவர் வீட்டு முன்பு தேங்கிய மழை நீரில் மூழ்கி இறந்தார்.

    இன்று காலை அவரது தாய் தையல் நாயகி, மருமகள் தனலட்சுமி ஆகியோர் ராஜ் தங்கிருந்த வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    கம்மாபுரம் அருகே வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கம்மாபுரம்:

    கம்மாபுரம் அருகே கோபாலபுரம் அன்னை இந்திரா காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போய் காணப்படுகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் இந்த வடிகால் வாய்க்காலில் தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி, குடியிருப்பு பகுதி களுக்குள் புகுந்து வரு கிறது.மேலும் மழைநீர் குடிநீரில் கலந்து வருவதால் கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இதனால் வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலைக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோ‌‌ஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வடிகால் வாய்க்காலை உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு போலீசார் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று காலை மற்றும் இரவும் இந்த மழை நீடித்தது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. கடலூரை பொறுத்த வரை நேற்று ஒரே நாளில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இந்த மழையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    கடலூர் வில்வநகர், கூத்தப்பாக்கம், வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம், பாதிரிக்குப்பம், சுனாமி நகர், சங்கர் நகர், கூட்டுறவு நகர், விஜயலட்சுமி நகர், தங்கராஜ் நகர், கம்மியம்பேட்டை, சக்தி நகர், வண்டிப்பாளையம், புதுப்பாளையம், வில்வராயநத்தம் உள்பட 80-க்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. ஒருசில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

    இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். வீடுகளில் தேங்கி நின்ற தண்ணீரை மோட்டார் மற்றும் வாளியை கொண்டு வெளியேற்றினர்.

    கடலூரில் தெருவில் தண்ணீர் பெருகி ஓடுவதை காணலாம்

    இருப்பினும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்து செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி தீவுபோல் காட்சி அளிக்கிறது.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யை அடுத்த ரோமாபுரி பகுதியில் உள்ள முட்டன்ஏரி மற்றும் என்.எல்.சி. ஏரி ஓடை பகுதிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

    அந்த தண்ணீர் கடலூர்-விருத்தாசலம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் புதுஇளவரசன்பட்டு, பாப்பனம்பட்டு, குறிஞ்சி நகர், கம்மாபுரம் பகுதியில் உள்ள 300 வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். மேலும் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் கே.என்.பேட்டை, உச்சிமேடு, கோண்டூர், காட்டுமன்னார்கோவில், கல்லறைகுட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, மணிமுக்தாறு, வெள்ளாறு, காவிரியின் கிளையான கொள்ளிடம் ஆறு, பரவனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் இருகரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் செல்கிறது.

    மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி மற்றும் 300-க்கும் மேற்பட்ட சிறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனைத்து ஏரிகளையும் தங்களது கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு இன்றும் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று காலையும் சுமார் ½ மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே உள்ளது.
    சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் 57,408 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் 83-வது பட்டமளிப்பு விழா இன்று காலை பல்கலைகழக சாஸ்திரி அரங்கில் நடந்தது.

    பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னரும், பல்கலைகழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து செந்தூர் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று இரவு சிதம்பரம் வந்தார்.

    அவரை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், பல்கலைகழக துணை வேந்தர் முருகேசன், பதிவாளர் கிருஷ்ணமோகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கார் மூலம் சென்று அண்ணாமலை பல்கலைகழக கெஸ்ட் ஹவுசில் இரவு தங்கினார்.

    இன்று காலை பல்கலை கழக பட்டமளிப்பு விழா அரங்குக்கு கவர்னர் வந்தார். 57,407 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதோடு 37 பேருக்கு தங்கப்பதக்கம், 96 பேருக்கு பல்வேறு அறக்கட்டளை பரிசுகளையும் வழங்கி பேசினார். பல்கலைகழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.

    ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் சத்ய நாராயணமூர்த்தி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். பல்கலைகழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் கிருஷ்ணமோகன், தொலைதூரக்கல்வி மைய இயக்குனர் அருள் மற்றும் பலர் பங்கேற்றனர். விழா முடிந்ததும் கவர்னர் கார் மூலம் நாகப்பட்டினம் புறப்பட்டு சென்றார்.

    கவர்னர் வருகையையொட்டி சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 500 வீடுகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 3 தினங்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், நடுவீரப்பட்டு , பாலூர், ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், குண்டுஉப்பலவாடி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

    நள்ளிரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதை தொடர்ந்து இன்று காலையும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. காலை நேரத்தில் மழை பெய்ததால் அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தப்படியும் சாலையில் சென்றனர்.

    கடலூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள 500 வீடுகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.

    ஒருசில பகுதிகளில் மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் கடந்த சில நாட்களாக தேங்கி நிற்கின்றன. அதில் கழிவு நீரும் கலப்பதால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது.

    கடலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் நள்ளிரவில் இருந்து விட்டு விட்டு மழைபெய்து வந்தது. காலையிலும் தொடர்ந்து பலத்த மழைபெய்ததனால் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதாக பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு செல்போனில் குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் அந்த தகவல் சற்று காலதாமதமாக வந்ததால் ஒரு சில மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து பின்னர் விடுமுறை என்று தெரிந்தவுடன் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் வீட்டிற்கு திரும்பி சென்றனர். கடலூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல் திருவந்திபுரம் அணைகட்டு பகுதிகளிலும் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, பெண்ணாடம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது.

    விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணியிலிருந்து லேசான மழை பெய்தது.
    கடலூரில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இதைத்தொடர்ந்து கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாகவே அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிபுலியூர், வண்டிப்பாளையம், வண்ணார பாளையம், மஞ்சக்குப்பம், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. அந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவும் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடலூர் கம்மியம் பேட்டை ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். மர வேலைகள் செய்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவியும், மகேஸ்வரி, ரஞ்சிதா, என்ற 2 மகள்களும் உள்ளனர். மகேஸ்வரிக்கு திருமணமாகி விட்டது. அவருக்கு தனஸ்ரீ, யுவஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு நாராயணன் அவரது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக நாராயணனின் வீட்டை சுற்றிலும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மழை பெய்தது இதனால் நாராயணனின் வீட்டை சுற்றிலும் தேங்கி நின்ற தண்ணீரின் அளவு அதிகமானது. இதனால் வீட்டின் சுவர் முற்றிலும் நனைந்து இருந்தது. இதையடுத்து திடீரென வீடு இடிந்து விழுந்தது. வீட்டின் இடிபாடுகளுக்குள் நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கினர். அவர்கள் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தனர்.

    இந்த சத்தம்கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிசென்று இடிந்த வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டிடத்தின் இடிபாடு அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து கடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இடிந்த சுற்றுசுவர் உள்ளிட்டவைகளை அகற்றி கட்டிடத்தின் இடிபாட்டுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டிட இடிபாடுகளுக்குள் நாராயணனின் மனைவி மாலா மற்றும் மகள் மகேஸ்வரி, மகேஸ்வரியின் ஒரு வயது மகள் தனஸ்ரீ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தனர்.

    மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாராயணன், ரஞ்சிதா, மகேஸ்வரியின் மற்றொரு குழந்தை யுவஸ்ரீ, உறவினர் குமரன் ஆகிய 4 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வீராணம் ஏரி தற்போது 2-வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரி மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த மாதம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொள்ளிடம் வழியாக தண்ணீர் வரத்து கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழைபெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. எனவே ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியில் நீர்மட்டம் 46.99 அடியாக உயர்ந்தது. வடவாறு வழியாக நேற்று 180 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 205 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்கு நேற்று 8 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இன்று 11 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    சென்னை மக்களின் குடிநீருக்காக நேற்று 74 கன அடி நீர் அனுப்பப்பட்டது. இன்று 68 கன அடி அனுப்பப்படுகிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது 2-வது முறையாக ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி வீராணம் ஏரி கரையை பலப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வீராணம் ஏரி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பண்ருட்டி பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. அப்போது குடை பிடித்து சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார்.

    பண்ருட்டி:

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. வானமே பிளந்து ஊற்றுவது போல் மழை பொழிந்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    மழையுடன் காற்றும் வேகமாக வீசியதால் ஒரு சில இடங்களில் மின்கம் பிகள் அறுந்து விழுந்தது.

    பண்ருட்டி பகுதியை சேர்ந்த சித்தரசூரை சேர்ந்த விவசாயி அமலநாதன் இன்று காலை தனது வயலுக்கு சென்றார். அப்போது லேசான மழை பெய்தபடி இருந்தது. குடை பிடித்தபடி சென்ற அவர் அந்த பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் அமலநாதன் சம்பவ இடத்தில் பலியானார்.

    தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். 

    உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட அ.தி.மு.க. முயற்சி செய்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    கடலூர்:

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பாலியல் இல்லாத தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் கடலூர் மாவட்டத்திலிருந்து தொடங்கப்பட்டது. நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா ? நடக்காதா என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டின் முதல்வர் தான் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்து நடத்த வேண்டும். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டுகிறார். மேலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் நடத்த முடியுமா?. அதிமுக அரசுக்கு  தோல்வி பயம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். மேலும் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. உள்ளாட்சித் தேர்தலிலும் இதுபோன்று நடந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    இதனுடைய பாதிப்பு சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்து விடுமோ என்ற பயத்தில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் போன்ற பதவிக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.  

    ஆனால் தற்போது இதற்கு மாறாக மறைமுக தேர்தல் தான் நடைபெறும் என இந்த அரசு அறிவித்துள்ளது. இதனைப் பார்க்கும்போது தில்லு முல்லு ஏற்படுத்தி தேர்தல் தடுப்பதுதான் இந்த அரசின் நோக்கமாக தெரிகிறது. இதன் மூலம் தற்போது மறைமுகத் தேர்தல் அறிவித்ததால் அரசின் உதவியோடு யாரேனும் கோர்ட்டுக்கு சென்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கும் என்ற நோக்கத்தில் மாறி மாறி சட்டத்தை இயற்றி வருகின்றனர்.

    மேலும் உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுசீரமைப்பில் குளறுபடி ஏற்படுத்தி உள்ளனர். இட ஒதுக்கீடு சம்பந்தமாக தலைவர்களுக்கு எந்த அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை. ஆகையால் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போடுவதில் அ.தி.மு.க அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

    இவ்வாறு  கூறினார்.
    குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த கோவிலில் தற்போது நடந்துள்ள கொள்ளை சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த அரிய ராவி பகுதியில் திரவுபதி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடலூர் மற்றும் சேலம், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் ஆகியவற்றை செலுத்துவார்கள். நேற்று இரவு வழக்கம்போல் திரவுபதி அம்மன்கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும்  அடி உயர முள்ள காளியம்மன் சிலை, வாள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கோவிலின் உள்ளே இருந்த 4 அடி உயரமுள்ள உண்டியலை பெயர்த்தெடுத்து தூக்கி சென்றனர்.

    அங்குள்ள வயல் வெளிக்கு கொண்டு சென்று உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டனர். பின்னர் உடைத்த உண்டியலையும், காளியம்மன்சிலை, வாள் ஆகியவற்றை வயல் வெளியில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் கோவில் நிர்வாகத்தினர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர். அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவில் நிர்வாகத்தினர் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து 3 வருடங்கள் ஆகிறது. நிர்வாக பிரச்சினை காரணத்தால் கோவில் உண்டியல் திறக்கப்படாமல் இருந்தது. இதைத்தெரிந்து கொண்டவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். எப்படியும் உண்டியலில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணமும், 5 பவுனுக்கு மேற்பட்ட நகைகளும் இருந்திருக்கும் என்று தெரிவித்தனர்.

    கொள்ளையர்கள் வயல் வெளியில் உண்டியலையும், காளியம்மன் சிலை உள்ளிட்ட பொருட்களையும் போட்டுவிட்டு சென்றனர். அதை போலீசார் பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பணம்-நகையை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×