search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் நவீதம் நகரில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி
    X
    கடலூர் நவீதம் நகரில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி

    கடலூரில் பலத்த மழைக்கு முதியவர் பலி

    கடலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீட்டு முன்பு தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடலூர்:

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக கடலூர் நகர் பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், நவநீத நகர், வண்டிபாளையம் ரோடு, கம்மியம்பேட்டை மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள சுமார் 10,000 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலூர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து உள்ளது. எனவே அவர்கள் பாத்திரங்களை பயன்படுத்தி வெள்ள நீரை வெளியேற்றி வருகிறார்கள். நகராட்சி நிர்வாகமும் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

    நேற்று மாலையும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மஞ்சக்குப்பம், நேதாஜி சாலை, பாரதி ரோடு, புதுப்பாளையம் பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் கரை புரண்டு ஒடியது.

    பலத்த மழைக்கு கடலூர் திருப்பாதிரியூர் நவநீத நகரை சேர்ந்த ராஜ் (வயது 60) பலியானார். இவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் வெளியே வந்தபோது கால் தடுக்கி விழுந்தார். அப்போது அவர் வீட்டு முன்பு தேங்கிய மழை நீரில் மூழ்கி இறந்தார்.

    இன்று காலை அவரது தாய் தையல் நாயகி, மருமகள் தனலட்சுமி ஆகியோர் ராஜ் தங்கிருந்த வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×