என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு இடிந்து கிடக்கும் காட்சி
    X
    வீடு இடிந்து கிடக்கும் காட்சி

    கடலூரில் கனமழை - வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

    கடலூரில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இதைத்தொடர்ந்து கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாகவே அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிபுலியூர், வண்டிப்பாளையம், வண்ணார பாளையம், மஞ்சக்குப்பம், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. அந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவும் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடலூர் கம்மியம் பேட்டை ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். மர வேலைகள் செய்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவியும், மகேஸ்வரி, ரஞ்சிதா, என்ற 2 மகள்களும் உள்ளனர். மகேஸ்வரிக்கு திருமணமாகி விட்டது. அவருக்கு தனஸ்ரீ, யுவஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு நாராயணன் அவரது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக நாராயணனின் வீட்டை சுற்றிலும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மழை பெய்தது இதனால் நாராயணனின் வீட்டை சுற்றிலும் தேங்கி நின்ற தண்ணீரின் அளவு அதிகமானது. இதனால் வீட்டின் சுவர் முற்றிலும் நனைந்து இருந்தது. இதையடுத்து திடீரென வீடு இடிந்து விழுந்தது. வீட்டின் இடிபாடுகளுக்குள் நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கினர். அவர்கள் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தனர்.

    இந்த சத்தம்கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிசென்று இடிந்த வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டிடத்தின் இடிபாடு அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து கடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இடிந்த சுற்றுசுவர் உள்ளிட்டவைகளை அகற்றி கட்டிடத்தின் இடிபாட்டுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டிட இடிபாடுகளுக்குள் நாராயணனின் மனைவி மாலா மற்றும் மகள் மகேஸ்வரி, மகேஸ்வரியின் ஒரு வயது மகள் தனஸ்ரீ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தனர்.

    மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாராயணன், ரஞ்சிதா, மகேஸ்வரியின் மற்றொரு குழந்தை யுவஸ்ரீ, உறவினர் குமரன் ஆகிய 4 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×