என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பெண்ணாடம் அருகே கோவிலில் நகை- பணம் கொள்ளை

    குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த கோவிலில் தற்போது நடந்துள்ள கொள்ளை சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த அரிய ராவி பகுதியில் திரவுபதி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடலூர் மற்றும் சேலம், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் ஆகியவற்றை செலுத்துவார்கள். நேற்று இரவு வழக்கம்போல் திரவுபதி அம்மன்கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும்  அடி உயர முள்ள காளியம்மன் சிலை, வாள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கோவிலின் உள்ளே இருந்த 4 அடி உயரமுள்ள உண்டியலை பெயர்த்தெடுத்து தூக்கி சென்றனர்.

    அங்குள்ள வயல் வெளிக்கு கொண்டு சென்று உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டனர். பின்னர் உடைத்த உண்டியலையும், காளியம்மன்சிலை, வாள் ஆகியவற்றை வயல் வெளியில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் கோவில் நிர்வாகத்தினர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர். அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவில் நிர்வாகத்தினர் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து 3 வருடங்கள் ஆகிறது. நிர்வாக பிரச்சினை காரணத்தால் கோவில் உண்டியல் திறக்கப்படாமல் இருந்தது. இதைத்தெரிந்து கொண்டவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். எப்படியும் உண்டியலில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணமும், 5 பவுனுக்கு மேற்பட்ட நகைகளும் இருந்திருக்கும் என்று தெரிவித்தனர்.

    கொள்ளையர்கள் வயல் வெளியில் உண்டியலையும், காளியம்மன் சிலை உள்ளிட்ட பொருட்களையும் போட்டுவிட்டு சென்றனர். அதை போலீசார் பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பணம்-நகையை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×