என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல்போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.
    X
    வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல்போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

    தொடர்ந்து பலத்த மழை- வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியது

    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வீராணம் ஏரி தற்போது 2-வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரி மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த மாதம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொள்ளிடம் வழியாக தண்ணீர் வரத்து கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழைபெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. எனவே ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியில் நீர்மட்டம் 46.99 அடியாக உயர்ந்தது. வடவாறு வழியாக நேற்று 180 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 205 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்கு நேற்று 8 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இன்று 11 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    சென்னை மக்களின் குடிநீருக்காக நேற்று 74 கன அடி நீர் அனுப்பப்பட்டது. இன்று 68 கன அடி அனுப்பப்படுகிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது 2-வது முறையாக ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி வீராணம் ஏரி கரையை பலப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வீராணம் ஏரி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×