என் மலர்
கோயம்புத்தூர்
- திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்கி வைக்கிறார்.
- கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா நடக்கிறது.
கோவை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 18-ந் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது, திறமையான பணியாளர்களை உருவாக்குவது தான்.
தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் 31 அரசு பொறியியல் கல்லூரிகளில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.30.62 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மையங்களின் தொடக்க விழா வருகிற 18-ந் தேதி கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்கி வைக்கிறார்.
அத்துடன் அன்றைய தினம் மாணவர்கள் சிலருக்கு பணி நியமன உத்தரவு ஆணைகளையும் வழங்க உள்ளார். மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து நிரல் திருவிழா 2.0 என்ற திட்டமும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் துணை முதல்-அமைச்சர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு கோவை-சத்தி ரோட்டில் உள்ள பெத்தேல் மாநகர பேராலயத்தில் பெந்தேகொஸ்தே சபைகளின் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா நடக்கிறது.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவைக்கு வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து, மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் வருகையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.
- ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர்.
அமெரிக்காவில் இருந்து ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று (14/12/2024) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று பிரம்மாண்டமான வரவேற்பினை வழங்கினர்.
அமெரிக்காவில் இருக்கும் ஈஷா யோக மையத்திற்கு கடந்த மே மாதம் சென்ற சத்குரு ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.
சத்குரு மாலை 6 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மட்டுமே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேலும், சத்குருவுக்கு மக்கள் ஆரத்தி காட்டி வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில இருந்து ஈஷா யோக மையம் வரை பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக அணிவகுத்து நின்று மலர்களை தூவியும், விளக்குகளை ஏந்தியும், மேள தாளத்துடன் சத்குருவை வரவேற்றனர்.
குறிப்பாக அவிநாசி சாலையில் உள்ள நாகர்கோவில் ஆர்ய பவன் உணவகத்தில் திரண்டு இருந்த மக்கள் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
ரேஸ் கோர்ஸ் சாலையில் வள்ளி கும்மி நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காளம்பாளையம், மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பினை வழங்கினர்.

ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலான மலைவாசலில், ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடி மக்கள் திரண்டு அவர்களின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டமாக சத்குருவை வரவேற்றனர்.
மேலும் ஆதியோகியில் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் சத்குருவை வரவேற்கும் பொருட்டு ஆதியோகி மற்றும் ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர்.
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர். மேலும் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் சத்குருவை வரவேற்றனர். ஆதியோகி முன்பு திரண்டு இருந்த மக்கள் முன்பு சத்குரு உரையாற்றினார்.
- நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
- சூர்யா 45 படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார்.
கங்கா படத்திற்கு அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா மற்றும் திரிஷா ஜோடியாக மௌனம் பேசியதே மற்றும் ஆறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தனது முதல் படத்தில் நாயகனாக நடித்த சூர்யாவுடனே மீண்டும் அவர் ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை த்ரிஷா தற்போது கோவையில் உள்ள மருத மலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
கோவை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்திலும் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் மிதமான அளவில் மழை பெய்தது. இன்று காலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருள்போல காட்சியளித்தது.
தொடர்ந்து மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால், பாப்ப நாயக்கன்பாளையம், அண்ணாசிலை, லட்சுமில் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
காலை நேரத்தில் பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர். ஆங்காங்கே உள்ள நிழற்குடைகள், பாதுகாப்பான இடங்களில் மக்கள் நின்றனர். பலர் குடைபிடித்தபடியும், பிளாஸ்டிக் கவர், ஜர்க்கின் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான அளவில் மழை பெய்தது. மாலையிலும் மழை நீடித்தது.
இரவில் 7 மணிக்கு பிறகு கனமழை பெய்ய தொடங்கியது. இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை வெளுத்து வாங்கி வருகிறது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அக்காமலை, பச்சைமலை, சோலையார் அணை, சின்னக்கல்லார், பெரியகல்லார், கவர்க்கல் எஸ்டேட், ரொட்டிக்கடை, உருளிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
மழையால் வால்பாறை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.
இரவு முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலை ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக, வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் பொள்ளாச்சி, ஆனைமலை, சூலூர், சுல்தான்பேட்டை, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், தொண்டாமுத்தூர், வடவள்ளி, கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் கோவையில் குளிரும் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பிக்க சுவர்ட்டர் உள்ளிட்டவற்றை அணிந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
வால்பாறை தாலுகா-57 நீரரார்-40, சோலையார் அணை-26
- சென்னையில் நடைபெற்ற நபார்டு வங்கியின் 43-வது ஆண்டு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இந்த விருது வழங்கினார்.
- ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் FPO-க்கள்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் டெல்லியில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில், கர்நாடகாவின் குடகு பகுதியில் இயங்கி வரும் 'பொன்னாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு' சந்தைகள் இணைப்பு பிரிவில் 'FPO எக்ஸலன்ஸ் விருது' வழங்கப்பட்டது.
அதே போல கோவை மாவட்டம் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டு வங்கியின் 2023 - 24ம் நிதியாண்டிற்கான சிறந்த FPO விருது வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நபார்டு வங்கியின் ஆதரவில் சிறப்பாக செயல்படும் FPO-க்களில் ஒன்றாக இந்நிறுவனம் அங்கிகரிக்கப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற நபார்டு வங்கியின் 43-வது ஆண்டு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இந்த விருதினை வழங்கினார்.
இந்நிறுவனம் தென்னையை முதன்மை பயிராக கொண்டு, 750 விவசாயிகளோடு கோவை சுல்தான்பேட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.

மேலும் கர்நாடகா தும்கூரில் இயங்கி வரும் 'திப்தூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு' சிறந்த தரத்திலான உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல முறையில் பொருள்களை பேக் செய்து வழங்கி வருதற்கான விருதினை கர்நாடக மாநிலத்தின் 'வேளாண் உற்பத்தி பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கழகம்( KAPPEC)' கடந்த நவம்பர் 8-ஆம் தேதி வழங்கி கவுரவித்தது.
வேளாண் செய்திகளை பிரத்யேகமாக வெளியிடும் 'க்ரிஷி ஜாக்ரன்' பத்திரிக்கையும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICAR) இணைந்து நீலகிரி கூடலூர் பகுதியில் இயங்கி வரும் 'மலநாடு உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு' Millionaire Farmer of India (MFOI) என்கிற விருதினை வழங்கியுள்ளது.
மேலும் இதே MFOI விருது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் 'வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும்' வழங்கப்பட்டது.
ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துதல், இடுபொருள் விலையை குறைத்தல், மதிப்பு கூட்டுதல், விலை நிர்ணயிக்கும் ஆற்றலை மேம்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கி நீடித்த உயர் வருமானம் மற்றும் நிகர லாபத்தை விவசாயிகள் பெற உதவுகிறது.
மேலும் ஈஷாவின் FPO-க்களில் உறுப்பினர்களாக இருக்கும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக இலவச அதிநவீன மண் பரிசோதனை ஆய்வகம் கோவையில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் மத்தியில் அதிக அளவிலான உர பயன்பாட்டை குறைத்து, மண்ணிற்கு தேவையான உரத்தினை மட்டும் சரியாக தேர்வு செய்து பயன்படுத்தும் நோக்கிலும், படிப்படியாக மண் வளத்தை கூட்டி இயற்கை விவசாயத்தை நோக்கி அவர்களை நகர்த்த உதவும் வகையில் இந்த ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.
- கோவிலில் அமாவாசை நாளில் நடைபெறும் பூஜை விசேஷமானது.
- கும்பாபிஷேகத்தை காண இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயனகோலத்தில் காட்சி அளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த கோவிலில் அமாவாசை நாளில் நடைபெறும் பூஜை விசேஷமானது. இதனால் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபடுவார்கள். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இத்தகைய சிறப்புமிக்க மாசாணியம்மன் கோவிலில் கடைசியாக கடந்த 2010 டிசம்பர் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து 14 ஆண்டுகள் ஆனதைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 6-ந் தேதி விக்னேஷ்வர பூஜையும் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில் யாக பூஜைகளும் தொடங்கி நடந்து வந்தது. கோபுரம் மற்றும் விமானங்களில் பொருத்துவதற்காக 52 புதிய கும்பங்கள் தயார் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. காலை 7.35 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், 8.45 மணிக்கு பூர்ணாகுதி பூஜையும் நடந்தது. தொடர்ந்து 9.15 மணிக்கு மாசாணியம்மன் கோவில் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கோவில் அர்ச்சகர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். கும்பாபிஷேகம் நடந்தபோது அம்மா தாயே மாசாணி என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது மழை தூறிக்கொண்டே இருந்தது. ஆனால் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் கும்பாபிஷேகத்தை கண்டு ரசித்தனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை காண இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர். அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. கோவை, பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 1100 போலீசார், 500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு கண்காணித்தனர். மருத்துவக்குழுவினர், தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனைமலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக 14 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
- ஈஷா யோக மையத்தில் நடக்கும் பல விஷயங்களை 2 நாட்களாக நேரில் கண்டோம்.
- யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது.
ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்த தவத்திரு தருமபுரம் ஆதீனம் அவர்கள், 'யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை' என்று துவங்கும் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ள நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது என பாராட்டினார்.
தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்றும் இன்றும் வருகை தந்தார். தியானலிங்கம் முன்பாக ஈஷா பிரம்மச்சாரிகளும், தன்னார்வலர்களும் ஆதீனத்தை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அப்போது, ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவர்களின் தேவாரப் பாடல்களை அவர் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

பின்னர் அவர் தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனையில் பங்கேற்றார். முன்னதாக, சூர்ய குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தார். மேலும், ஆதியோகி திவ்ய தரிசனத்தையும் நேரில் கண்டு ரசித்தார். ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியையும், கோசாலையும் அவர் பார்வையிட்டார்.
ஈஷாவிற்கு முதல்முறையாக வருகை தந்த ஆதீனம் அவருடைய அனுபவத்தை பகிர்ந்தார்.
அப்போது அவர், "ஈஷா யோக மையத்தில் நடக்கும் பல விஷயங்களை 2 நாட்களாக நேரில் கண்டோம்.
"யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே" என்று திருமூலர் கூறிய 4 நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருமூலர், தாயுமானவர், பதஞ்சலி முனிவர் வரிசையில் நம்முடைய தருமை ஆதீனமும் யோக கலையை பயிற்றுவிக்கும் சேவையை செய்து வருகிறது. இக்கலையானது நம் சைவ சித்தாந்த மரபில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என 4 நிலைகளாக சொல்லப்படுகிறது. அத்தகைய மிகவும் அற்புதமான யோக கலையை சத்குரு அவர்கள் உலகம் முழுவதும் பயிற்றுவித்து வருவது பாராட்டுக்குரியது.
அதேபோல், நம்முடைய மரபில் சிவபெருமானும் மரமும் ஒன்று. சிவ பெருமான் விஷத்தை தான் சாப்பிட்டுவிட்டு, அன்பர்களுக்கும் தேவர்களுக்கும் அமிர்தத்தை வழங்கினார். அதேபோல் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் கார்பன் டை ஆக்ஸைடை உண்டுவிட்டு, மற்ற உயிர்களுக்கு உயிர் வாழ ஆக்சிஜைனை வழங்குகின்றன.
அந்த வகையில், மரங்கள் வளர்க்கும் சேவையை சத்குருவும் ஈஷா யோக மையமும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர். நம்முடைய தருமை ஆதீனத்தின் மணிவிழாவை முன்னிட்டு ஈஷா யோக மையம், தருமை ஆதீனம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து 60,000 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுதவிர, நூற்றுக்கணக்கான நாட்டு பசுக்களை பராமரிக்கும் மிகப்பெரிய தொண்டையும் ஈஷா செய்து வருவதை நேரில் பார்த்து மகிழ்ந்தோம். ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகளும் திருமுறைகளையும், தேவாரப் பாடல்களையும் மிக அழகாக பண்ணோடு பாடியது ஆச்சரியமாக இருந்தது.

அகத்திய முனிவர் தோற்றுவித்த அருகி வரும் களரி என்னும் பாரம்பரிய தற்காப்பு கலையையும் இம்மாணவர்கள் சிறப்பாக கற்று தேர்ந்து வருகிறார்கள். களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் முனிவர்களால் அருளப்பட்டவை. அதற்கான முழுமையான பயிற்சிக் களத்தையும் ஈஷா வழங்குகிறது. கராத்தே போன்ற சில நவீன முறைகளை நோக்கியே அனைவரும் செல்லும்போது நம் பாரம்பரியமான தற்காப்பு கலைகளை ஈஷா பேணி வருகிறது.
திருவெண்காட்டில் உள்ள சூர்ய குண்டத்திலும், சோம குண்டத்திலும் கண்ணகி நீராடி விட்டு வழிபாடு நடத்தியதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஈஷாவிலும் சூர்ய குண்டம், சந்திர குண்டம் என 2 குளங்களில் ஆண்களும், பெண்களும் புனித நீராடிவிட்டு தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியை வணங்கி வழிப்படுகின்றனர்.
இப்படி, யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது. வாழ்க சத்குருவின் தொண்டு, வளர்க அவரின் பணிகள்." என மனதார வாழ்த்தி விடைப்பெற்றார்.
மேலும் ஈஷாவின் பணிகளுக்கு திருமுறைகள் சிறுபஞ்ச மூலம் போன்ற பற்பல நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி ஒப்பிட்டு ஆசி நல்கினார்.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரையையும் ஆதீனம் அவர்கள் இன்று ஆரத்தி காட்டி வழிப்பட்டு தொடங்கி வைத்தார்.
- நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை குண்டுக்கட்டாக காவல் துறை கைது செய்தது.
கோவை அவிநாசி சாலையில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பைக் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போலீசுக்கு தெரியவந்ததை அடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை குண்டுக்கட்டாக காவல் துறை கைது செய்தது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
- வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- யானை ஆக்ரோஷம் அடைந்து வாலிபரை ஓட, ஓட விரட்டியது.
வடவள்ளி:
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொருட்கள், விளை நிலங்களை சேதப்படுத்துகிறது.
இதனால் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காட்டு யானைகளை பார்த்தால் அருகில் செல்ல வேண்டாம். அதனை விரட்டவோ, செல்போனில் வீடியோ எடுக்கவோ கூடாது என்று அறுவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் வாலிபர்கள் சிலர் காட்டு யனையுடன் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் சம்பவத்தன்று ஒற்றை காட்டுயானை ஒன்று உலா வந்தது.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் யானையை பார்த்ததும் செல்போனில் வீடியோ எடுத்தார்.இதனை பார்த்த காட்டு யானை ஆக்ரோஷம் அடைந்து வாலிபரை ஓட, ஓட விரட்டியது. தொடர்ந்து அந்த வாலிபர் அருகே இருந்த வீட்டுக்குள் சென்று மயிரிழையில் உயிர்தப்பினர்.
இருப்பினும் வாலிபர் பதுங்கிய வீட்டை சுற்றி சுற்றி வந்த காட்டு யானை ஆக்ரோஷத்துடன் அந்த வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆட்டாவை முட்டி தள்ளியது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.
இதற்கிடையே செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை காட்டு யானை விரட்டும் காட்சிகள் இணையத்தளத்தில் வரைலாக பரவி வருகிறது.
- கோவை ஈஷா மையத்திற்கு ஆன்மீக பயணமாக 120 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் குழு வருகை தந்தது.
- ஈஷாவில் தியானலிங்கம், லிங்கபைரவி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்தனர்.
கோவை ஈஷா மையத்திற்கு ஆன்மீக பயணமாக 120 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் குழு வருகை தந்தது. அங்கு எங்களைப் போன்றவர்களாலும் தியானலிங்கத்தை தரிசிக்க முடியுமா என்ற ஏக்கம் தற்போது நிறைவேறியதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாற்றத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் 120 பேர் ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் சிரமங்கள் ஏதும் இல்லாமல் தரிசனம் செய்ய தேவையான சிறப்பு ஏற்பாடுகளை ஈஷா யோக மையம் செய்திருந்தது.

ஈஷாவில் தியானலிங்கம், லிங்கபைரவி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு இலவச யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டன.
இது குறித்து தவழும் மாற்றுத்திறனாளி பாஸ்கர் கூறுகையில், "ஈஷா போன்ற பிரபலமான இடங்களுக்கு தவழும் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவது மிகவும் சிரமம் என்றே இதுவரை நினைத்திருந்தேன். பல முறை வெளியில் மட்டுமே நின்று வந்துள்ளேன். நம்மை போன்றவர்களால் தியானலிங்கத்தை பார்க்க முடியாதா என்று கூட பல முறை நினைத்து இருக்கிறேன்.

ஆனால் நேற்று ஈஷாவில் எங்களை அழைத்துச் சென்ற விதமும், அங்குள்ள ஆன்மீகப் பணியாளர்களின் தூய்மையான அன்பும், மிகவும் சிறப்பானதாக இருந்தது. எந்தவித சிரமமும் இல்லாமல் கோவிலின் அனைத்து இடங்களையும் எங்களுக்கு சுற்றிக்காட்டினர் என அவர் கூறினார்.
பார்வை மாற்றுத்திறனாளியான மணிகண்டன் கூறுகையில், "ஈஷா சென்று வந்த பயணம் மனத்திற்கு மிகவும் நிறைவானதாக இருந்தது. நாங்கள் கேட்ட வசதிகள் அனைத்தையும் ஈஷாவில் முழுமையாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. ஈஷா தன்னார்வலர்கள் எங்கள் மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை மிகவும் சிறப்பாக வழி நடத்தினார்கள்.
அவர்கள் அனைவருக்கும் கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றத்தினாளிகள் நலச்சங்கத்தின் சார்பிலும் எல்லோரது சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என அவர் கூறினார்.
- 1980-ம் ஆண்டு எம்.பி.யாக பணியாற்றியவர்.
- மிசா கைதியாக ஒரு ஆண்டு ஜெயிலில் இருந்துள்ளார்.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி. மோகன், இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. இவர் 1980-ம் ஆண்டு எம்.பி.யாக பணியாற்றியவர். இதுமட்டுமல்லாமல் 1989-ம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்துள்ளார்.
தி.மு.க.வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர், மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் போன்ற பதவிகளில் இருந்துள்ளார். மிசா கைதியாக ஒரு ஆண்டு ஜெயிலில் இருந்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நெருங்கி பழகியவர். வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். முன்னாள் எம்.பி. மோகனுக்கு சுகுணா என்ற மனைவியும், டிவேதிரா என்ற மகளும், கவிதா என்ற மகனும் உள்ளனர்.
- வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
- திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒய்வுபெற்ற வேளாண்அதிகாரி சுப்பிரமணியம்-விஜயலட்சுமி தம்பதியின் மகன் கே.எஸ்.வைஷ்ணவ்ராஜ். சுற்றுசூழல் பாதுகாப்பு பொறியாளர்.
இவர் தைவான் நாட்டில் எம்.எஸ். படித்து அங்கு வேலை பார்த்து வந்தார். அப்போது அந்நாட்டை சேர்ந்த ஜிம்மிசாங்-மிக்கிவாங் தம்பதியர் மகளும் ஆசிரியையுமான கிளாடியா சாங் என்பவருடன் ஒருங்கிணைந்து சமூகசேவை பணியில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது.
தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினரிடம் காதலை தெரிவிக்க, இருதரப்பு பெற்றோருடன் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். பின்னர் பெண் வீட்டார் கோவைக்கு புறப்பட்டு வந்தனர். தொடர்ந்து வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் சாமிசெட்டிபாளையம் பகுதியில் காதலர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு திருமண நாள் குறிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கலவாத்தியங்கள் முழங்க மணமகன் தாலிக்கயிற்றை மணமகள் கழுத்தில் அணிவித்தார்.
பின்னர் மேட்டுப்பாளையம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தைவான் நாட்டில் இருந்து பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வந்திருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தமிழர் முறைப்படி விருந்து பரிமாறப்பட்டது.
இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், சமூக சேவை பணியில் ஈடுபட்டபோது எங்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு காதலித்து வந்தோம். தொடர்ந்து எங்களுக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.






