என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த பேட்டரியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை காரமடை டி.ஜி.புதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது42).

    இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருவில் தங்கி அங்குள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் ஜெயக்கு மார், தனது தாய் தந்தையை பார்ப்பதற்காக நேற்று தனது சொந்த ஊரான டி.ஜி புதூருக்கு காரில் வந்தார். இரவில் அனை வரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ஜெயக்குமாரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதை பார்த்து ஜெயக்குமார் அதிர்ச்சி அைடந்தார். உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.தகவல் அறிந்த காரமடை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த பேட்டரியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வீட்டின் முன்பு நிறுத்திய கார் தீப்பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தினேஷ்பாபு கடந்த 4 ஆண்டுகளாக எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை நீலாம்பூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தினேஷ்பாபு (வயது 40).

    இவரது மனைவி அனிதா. தினேஷ்பாபு கடந்த 10 ஆண்டுகளாக நீலாம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த கொரோனா பரவல் கால கட்டத்தில் வேலையை விட்டு விலகினார்.

    தற்போது பல பள்ளிகளில் ஆசிரியர் வேலை தேடி அலைந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    வேலை கிடைக்காத விரக்தியில் தினேஷ்பாபு கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரது மனைவி அனிதா தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட தினேஷ் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 வாலிபர்கள் அரிவாளை எடுத்து மிரட்டி சுரேஷிடம் இருந்த ரூ.1,000 பணத்தை பறித்தனர்.
    • போலீசார் 17 வயது கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரம் அருகே உள்ள மீனாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 29). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் லாரியில் மணலை ஏற்றிக் கொண்டு விளாங்குறிச்சியில் இருந்து கோவைக்கு வந்தார்.

    லாரி வெள்ளலூர் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் லாரியை வழிமறித்து நிறுத்தினர்.

    பின்னர் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து மிரட்டி சுரேஷிடம் இருந்த ரூ.1,000 பணத்தை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அங்கு இருந்த லாரி டிரைவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்களை போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வெள்ளலூரை சேர்ந்த மெக்கானிக் தீபக் என்ற விவேக் (27),ரா மநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் முத்தரசு (19), கணேசபுரத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் கல்லூரி மாணவர் மெக்கானிக் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 17 வயது கல்லூரி மாணவரை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • மேல்முடி தண்ணீர்பாறை பகுதியில் வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
    • போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை வனச்சரகம் தடாகம் அருகே உள்ள மேல்முடி தண்ணீர்பாறை பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை பார்த்த வன ஊழியர்கள் இது குறித்து வன அதிகாரிகள் மற்றும் தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக வன அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை ஆய்வு செய்தனர்.

    அப்போது வாலிபரின் கழுத்து, வலது கை ஆகிய இடங்களில் சிறுத்தை தாக்கியதற்கான காயங்கள் இருந்தது. பின்னர் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த சுகசூர்யா என்பது தெரிய வந்தது.

    மேலும் போலீசார் சிறுத்தை தாக்கி அவர் இறந்தாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கோவை வழியாக கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கொல்லம்-கச்சிகுடா இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07045) கொல்லத்தில் இருந்து வருகிற 30-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 1-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.

    கோவை,

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழியாக கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓணத்தை முன்னிட்டு செகந்திராபாத்-கொல்லம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்(எண்:07121), இன்று மாலை 4.35 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    கொல்லம்-செகந்திரா பாத் இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07122) வருகிற 29-ந் தேதி இரவு 7 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு வரும் 31-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச் சேரி, கோட்டயம், எர்ணாகு ளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    எஸ்.எம்.வி.டி பெங்களூரு-மங்களூரு சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரெயில்(எண்(06569), எஸ்.எம்.வி.டி பெங்களூருவில் இருந்து நாளை மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காசர்கோடு, பைய்யனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரா, கோழிக் கோடு, திரூர், சொர்ணூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரபேட் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மங்களூரு சென்ட்ரல்- எஸ்.எம்.வி.டி பெங்களூரு இடையிலான சிறப்பு ரெயில்(எண்:06570) வருகிற 29-ந் தேதி இரவு 8.05 மணிக்கு மங்களூர் சென்ட்ர லில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு எஸ்.எம்.வி.டி பெங்களூரு சென்றடையும்.

    கச்சிகுடா-கொல்லம் இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07044) கச்சிகுடாவில் இருந்து நாளை மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 11.20 மணிக்கு கொல்லம் சென்ற டையும்.

    கொல்லம்-கச்சிகுடா இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07045) கொல்லத்தில் இருந்து வருகிற 30-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 1-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச் சேரி, கோட்டயம், எர்ணா குளம் நகரம், ஆலுவா , திருச்சசூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.
    • வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

    கோவை:

    கோவை கணுவாய் அடுத்துள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார்.

    அவர் கோவிலுக்கு மலைஏறி சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார்.

    மேலும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் இது தொடர்பான தகவல்களையும் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பக்தர்கள் வசதிக்காகவும், முதியோர்கள் மற்றும் உடல் உபாதை உள்ள பக்தர்களின் வசதிக்காகவும் ரோப்கார் மற்றும் தானியங்கி லிப்ட் அமைத்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று கோவை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டோம். 560 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று ஏற்கனவே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியக்கூறுக்கான அறிக்கைகள் வந்த பின்னர் ரோப்கார் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கும்.

    இதேபோன்று திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில்களுக்கும் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தர உள்ளோம்.

    கரூர் அய்யர்மலை, சோழிங்கநல்லூர் கோவில்களில் ரோப் கார் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    கோவை மருதமலையில் தானியங்கி லிப்ட் அமைப்பதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்பேரில் அந்தந்த பகுதிகளில் மலைக்கோவில்களில் அங்குள்ள அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

    அதேபோன்று தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.5135 கோடி மதிப்பிலான 5335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசானது இறையன்பர்களுக்கு இறைபற்று ள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியான ஆட்சியாக உள்ளது.

    விலங்குகள் அதிகம் நடமாடும் கோவில் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காடுகளில் இருந்து வெளியே வராதபடி முள்வேலிகள் அமைக்க ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் பேரூரில் நடந்த நொய்யல் திருவிழாவில் பங்கேற்றார். பின்னர் தண்டுமாரியம்மன், லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • செயின் பறிப்பு சம்பவம் பெண்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை தேடி வருகிறனர்.

    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் ரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது.

    இதுகுறித்து அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி லதா(வயது 55). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து வந்தார்.

    அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் லதா கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து அவர் ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோல கணபதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி(58). சம்பவத்தன்று இவர் தனது மகளுடன் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர்கள் தமிழ்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர். மாநகரில் தொடர்ந்து நடந்து வரும் செயின் பறிப்பு சம்பவம் பெண்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் செயின் பறிப்பு ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை தேடி வருகிறனர்.

    மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    அந்த காட்சிகளை கைப்பற்றி செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் மர்மந பர்களை தேடி வருகின்றனர்.

    மாநகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை அடுத்து மாநகர் முழுவதும் நேற்று இரவு முதல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ்நிலையம், மார்க்கெட் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மாநகருக்குள் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

    வாகனங்களில் வருபவர்களிடம் தீரவிசாரித்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

    • திடீரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.
    • லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை-கேரள எல்லைப்பகுதியான ஆனை கட்டி மலைப்பகுதியில் யானைகள், காட்டுமாடுகள், மான்கள், காட்டுபன்றிகள், உள்ளிட்ட பல்வேறு வனவி லங்குகளும், பல்வேறு பறவைகளும் உள்ளன.

    இவைகள் அவ்வப்போது மலைப்பகுதிக்குள் இருந்து வெளியேறி, மலைப்பாதையில் சுற்றி திரிவது வழக்கம்.

    எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகையும் வைத்து உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஆனைகட்டி மலைப்பாதையில் டிப்பர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீ ரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.

    பின்னர் அந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து, மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றன.

    காட்டெருமைகள் சாலையை கடக்க முயற்சிப் பதை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்த முயன்றார்.

    ஆனால் அதற்குள்ளாகவே லாரி காட்டெருமைகள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஒரு காட்டெருமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டெருமை காயத்துடன் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

    இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    இது குறித்து லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை முடிவடைந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • தமிழகம் முழுவதும் 2.77 கோடி மதிப்பில் தொழில் நிறுவனத்துக்கு கடன் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கபட்டுள்ளது.
    • கோயம்புத்தூர் டி.ஐ.ஐ.எஸ் கிளை கோவை மாவட்டத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ தேவைகளை பூர்த்தி செய்கிறது.

    கோவை,

    மாவட்ட தொழில் துறைக்கு சிறப்பு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, கொடிசியா, கொசிமா போன்ற நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசி யதாவது:-

    தமிழகம் முழுவதும் 2.77 கோடி மதிப்பில் தொழில் நிறுவனத்துக்கு கடன் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கபட்டுள்ளது.

    தொழில் நிறுவனங்களுக்கு வழங்க கூடிய வங்கி கடன் எப்படி விண்ணப்பிப்பது என்றும், அதற்கு உண்டான வழிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    மைக்ரோ, எம்.எஸ்.எம்.இ போன்ற தொழிலுக்கு ரு.10 லட்சம் வரை பெறக்கூடிய நிறுவனங்களுக்கு எந்த விதமான செக்யூரிட்டி பத்திரமும் வாங்க கூடாது எனவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    1949-ம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழ்நாட்டில் உள்ள எம்.எஸ்.எம்.இ தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் முன்னோடி அரசாங்க நிதி நிறுவனமாகும்.

    கோயம்புத்தூர் டி.ஐ.ஐ.எஸ் கிளை கோவை மாவட்டத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ தேவைகளை பூர்த்தி செய்கிறது. டிஐ ஐ எஸ் ஆனது பல்வேறு திட்டங்களின் கீழ் கால கடன்கள், செயல்பாட்டு மூலதன கால கடன்களை வழங்குகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஏஏபிசிஎஸ் ஆனது கடந்த 21-ந் தேதி முதல் வருகிற 1-ந் தேதி வரை சிறப்பு தொழிற்கடன் முகாம் நடத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
    • எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    கோவை,

    தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது .

    கோவையில் பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி, கவுண்டம்பாளையத்தில் உள்ள கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி, காளப்பட்டி ரோட்டில் உள்ள என் ஜி பி கல்லூரி ஆகிய 4 மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

    தேர்வையொட்டி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.

    இந்த தேர்வு காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடந்தது. 7,805 பேரில் 6,168 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1,637 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    • அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை, தொண்டரில் ஒருவரான எடப்பாடியார் இன்றைக்கு வழிநடத்தி வருகிறார்.
    • சிலர் கட்சிக்கு துரோகம் செய்யும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    கோவை,

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் மேயருமான செ.ம.வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அறிஞர் அண்ணா வழியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய, புரட்சித்தலைவி ஜெயலலிதா வழி நடத்திய அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை, தொண்டரில் ஒருவரான எடப்பாடியார் இன்றைக்கு வழிநடத்தி வருகிறார்.

    அவரை பொதுக்குழுவும், தொண்டர்களும் ஏகமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அ.தி.மு.க இயக்கத்தை வழிநடத்த அங்கீகாரம் வழங்கி உள்ளது.

    சிலர் கட்சிக்கு துரோகம் செய்யும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதற்கு ஏற்ப நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களையும், நீதி தேவதையையும் வணங்குகிறோம்.

    2¼ கோடி தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒருசிலர் மேற்கொண்டு வரும் செயல்பாட்டுக்கு நீதிமன்றம், பொதுமக்கள் தண்டனை வழங்க வேண்டும். நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் கட்சி, கொடி, சின்னம் ஆகியவை எடப்பாடி தலைமையில்தான் என்று முடிவு செய்த பிறகும் சிலர் கரைவேட்டி மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

    வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் நம்மில் ஒருவர், நம்மவர் எடப்பாடியார் தலைமையில் எம்.பி தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

    மதுரை மாநாடும், பொதுமக்களும், நீதிமன்றங்களும் நல்ல தீர்ப்பு வழங்கி நாளை நமதே என்று அச்சாரம் வழங்கிய நிலையில் கண் துஞ்சாமல் கழகத்தையும், தமிழ் மக்களையும் காக்கும் எடப்பாடியாருக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சிறப்பு செயலாக்க திட்டத்திற்கு ஒரு கார்டுக்கு 50 பைசா வழங்குவதை தவிர்த்து ரூ.5 வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கோவை,

    தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமையில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தை வீடு வீடாக விசாரணை செய்ய ரேஷன் கடை பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது.

    இந்த சிறப்பு செயலாக்க திட்டத்திற்கு ஒரு கார்டுக்கு 50 பைசா வழங்குவதை தவிர்த்து ரூ.5 வழங்க வேண்டும். பணியில் உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்த பின்னரே புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    அயல் பணி, பணி பரவல், வெளி மாவட்ட மாறுதல் போன்றவற்றை மண்டல இணை பதிவாளரின் அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் ஆயிரம் தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×