

கோவை,
புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரம் அருகே உள்ள மீனாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 29). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் லாரியில் மணலை ஏற்றிக் கொண்டு விளாங்குறிச்சியில் இருந்து கோவைக்கு வந்தார்.
லாரி வெள்ளலூர் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் லாரியை வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து மிரட்டி சுரேஷிடம் இருந்த ரூ.1,000 பணத்தை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அங்கு இருந்த லாரி டிரைவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களை போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வெள்ளலூரை சேர்ந்த மெக்கானிக் தீபக் என்ற விவேக் (27),ரா மநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் முத்தரசு (19), கணேசபுரத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் கல்லூரி மாணவர் மெக்கானிக் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 17 வயது கல்லூரி மாணவரை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.