என் மலர்tooltip icon

    சென்னை

    • நாங்கள் எங்களது 10 அம்ச கோரிக்கையை ஏற்கனவே பலமுறை அரசிடம் வலியுறுத்தி வந்தோம்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நம்புகிறோம்.

    சென்னை தலைமை செயலகத்தில் போட்டா-ஜியோ சங்கத்தினருடன் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஜாக்டோ-ஜியோ சங்கத்தினருடன் காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த போட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் கூறியதாவது:-

    நாங்கள் எங்களது 10 அம்ச கோரிக்கையை ஏற்கனவே பலமுறை அரசிடம் வலியுறுத்தி வந்தோம். இப்போது 2 கட்ட போராட்ட நடவடிக்கையை திட்டமிட்டு இருந்தோம். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழுவினர் எங்களை அழைத்து பேசினார்கள். இதன் அடுத்த கட்டமாக இன்று அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம்தென்னரசு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், முதலமைச்சரின் கவனத்துக்கு இதை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பழைய ஓய்வூதியம் தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நம்புகிறோம். முதலமைச்சரின் நாளைய அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான பரிசாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    • தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது.
    • மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகிற 19-ந்தேதி தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தஞ்சையில் வருகிற 19-ந்தேதி மாலை 4 மணிக்கு தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறுகிறது.

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

    முன்னதாக, டிசம்பர் மாதம் 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ்நாடு காங்கிரசில் எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
    • ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.

    தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சனைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.

    தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத, ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது.

    எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

    இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.

    ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.

    தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.

    தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் 8-ம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் எட்டாம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் நேற்றைய போராட்டத்தின் போது ஆசிரியர்கள் சிலரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. 2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. இந்த அநீதியை இழைத்தது திமுக அரசு தான். அது தான் இந்த அநீதியைப் போக்க வேண்டும்.

    திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தக் கோரிக்கையை ஆதரித்தது. போராடிய ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளித்தார். ஆனால், இப்போது அதிகாரம் கிடைத்ததும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்.

    தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் கைது செய்து திமுக அரசு அலைக்கழிக்கிறது. கைது செய்யப்படும் போது பெண் ஆசிரியர்கள் மனிதநேயமின்றி கொடூரமாக நடத்தப்படுகின்றனர். சென்னையில் நேற்று போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் வில்லியம் என்பவரை காவல்துறை அதிகாரி ஒருவர் பேருந்துக்குள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதுடன் கன்னத்தில் அறையும் காணொலி சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற ஆசிரியரின் கை உடைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை மன்னிக்க முடியாது. இத்தகைய அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை முடக்கிவிடவும் முடியாது. ஆசிரியர்களை தாக்கிய காவல்துறையினர் மீது தமிழக அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு முக்கியப் பங்களிக்கும் ஆசிரியர்களை போராடும் நிலைக்கு தள்ளும் எந்த அரசும் நீடித்த வரலாறு இல்லை. திமுக அரசு அதையும் கடந்து ஆசிரியர்களைத் தாக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கான பாடத்தை திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் புகட்டுவார்கள்.

    • தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    4-ந்தேதி முதல் 8-ந்தேதிவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° குறைந்தபட்ச வெப்பநிலை 23" செல்சியஸை ஒட்டியும் செல்சியஸை ஒட்டியும், இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 6-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • ஆலோசனையின்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் போட்டா ஜியோ, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 6-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆலோசனையின்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

    அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து கோரிக்கை ஏற்கப்பட்டதாக போட்டா ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போட்டா ஜியோ நிர்வாகிகள் கூறுகையில்,

    பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று தெரிவித்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 26 செ.மீ. மழை பதிவானது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை இருந்தாலும் பொதுவாக டிசம்பர் மாதத்திற்குள் அதிகபட்ச மழை பெற்று முடிந்து விடும். ஜனவரி மாதத்தில் படிப்படியாக குறைந்து பருவமழை விலகி விடும்.

    ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதத்திலும் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையையொட்டி மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

    இன்றும் நாளையும் இடியுடன் மழையும் அதன் பின்னர் மழை குறைந்து 10-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 26 செ.மீ. மழை பதிவானது. தென்காசி மாவட்டம் கடனாஅணை 24 செ.மீ., குன்னூர் 21 செ.மீ., சிவகிரி 17 (தென் காசி), வீரபாண்டி (தேனி) 12, கோத்தகிரி (11 செ.மீ., சேரன் மாதேவி 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • கடந்த ஓரிரு நாட்களாக தங்கம் விலை குறைந்து வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளித்தது.
    • தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்து உள்ளது.

    ஆங்கில புத்தாண்டு பிறப்பான நேற்று சென்னையில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தது. தங்கம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 480-க்கு நேற்று முன்தினம் விற்றுவந்த நிலையில், நேற்று ரூ.40 குறைந்து ரூ.12 ஆயிரத்து 440-க்கு விற்றது. ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 840-ல் இருந்து ரூ.320 குறைந்து ரூ.99 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.

    தங்கம், வெள்ளி விலை போட்டிப்போட்டு தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக விலை குறைந்து வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளித்தது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி உள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640-க்கு விற்பனையாகிறது.

    தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    1-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

    31-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,840

    30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160

    28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    1-1-2026- ஒரு கிராம் ரூ.256

    31-12-2025- ஒரு கிராம் ரூ.257

    30-12-2025- ஒரு கிராம் ரூ.258

    29-12-2025- ஒரு கிராம் ரூ.281

    28-12-2025- ஒரு கிராம் ரூ.285

    • வருகிற 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் ‘மோடி பொங்கல்' நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
    • ஜனவரி 4-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுக்கோட்டைக்கு வர உள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தித்திக்கும் பொங்கலுடன் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 2 மாதங்களுக்கு தீவிர பிரசாரத்தை முன்னெடுக்கவும் பா.ஜ.க. வியூகங்கள் அமைத்து வருகிறது.

    அந்த வகையில் வருகிற 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஜனவரி 4-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுக்கோட்டைக்கு வர உள்ளார். அன்றைய தினம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற யாத்திரையின் நிறைவு விழா நடக்கிறது. இந்த விழாவில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

    இதில், சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். இதையடுத்து, திருச்சியில் அமித்ஷா தங்குகிறார். பின்னர், மறுநாள் (5-ந்தேதி) திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். இதையடுத்து காலை 11 மணி அளவில் மன்னார்புரம் ராணுவத்திடலில் ஏறக்குறைய 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் "மோடி பொங்கல்" விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

    அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள், மேலிட பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில் 4-ந்தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 5-ந்தேதி திருச்சியில் வைத்து இருவரின் சந்திப்பு நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    அமித்ஷாவுடனான சந்திப்பில் தொகுதி பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், தேர்தல் வியூகம், ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் இணைப்பு, குறித்து ஆலோசிக்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    வரும் 5-ந்தேதி திருச்சியில் நடக்கும் பொங்கல் விழாவிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

    • இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    லட்சத்தீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 46 குழந்தைகள் பிறந்தன.
    • தென்காசியில் 20 குழந்தைகள் பிறந்துள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    ஆண்டின் முதல் நாளில் பிறப்பவர்கள் ஆங்கில புத்தாண்டோடு தங்களது பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் பிறந்துள்ளன.

    சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 46 குழந்தைகள் பிறந்தன. அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் பிறந்தன. இதில், 2 தாய்மார்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

    இந்த குழந்தைகளை ஆஸ்பத்திரியின் உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா மற்றும் டாக்டர் சந்திரகலா உள்ளிட்ட மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கைகளை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

    மேலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 7 குழந்தைகள் பிறந்தன. இதில் 4 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தை ஆகும். திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் பிறந்தன. ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 12 குழந்தைகள் பிறந்தன. இதில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் ஆகும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு தினமான நேற்று அரசு ஆஸ்பத்திரிகளில் 4 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என 8 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் புத்தாண்டு தினமான நேற்று 9 ஆண் குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் என 20 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் 11 (ஆண்-5, பெண்-6), குழந்தைகளும், நீலகிரியில் 6 (ஆண்-3, பெண்-3), திருப்பூரில் 13 (ஆண் -5, பெண்-8), வேலூரில் 8 (ஆண்-6, பெண்-2), குழந்தைகளும், திருவண்ணாமலையில் 22 (ஆண்-12, பெண்-10) குழந்தைகளும், திருப்பத்தூரில் 12 (ஆண் - 4, பெண்-8) குழந்தைகளும், ராணிப்பேட்டையில் 6 (ஆண் 2, பெண் 4) குழந்தைகளும் பிறந்துள்ளன.

    குமரி மாவட்டத்தில் 6 (ஆண் 1, பெண் 5) குழந்தைகளும், ஈரோட்டில் 12 குழந்தைகளும், திண்டுக்கல்லில் 20 (ஆண்-6, பெண்-14) குழந்தைகளும், தேனியில் 13 (ஆண் 7, பெண் 6) குழந்தைகளும், கடலூரில் 13 (ஆண் 6, பெண் 7) குழந்தைகளும், கள்ளக்குறிச்சியில் 47 (ஆண்-24, பெண்-23) குழந்தைகளும், விழுப்புரத்தில் 27 (ஆண் 15, பெண்-12) குழந்தைகளும், மதுரையில் 22 குழந்தைகளும், சிவகங்கையில் 7 குழந்தைகளும், ராமநாதபுரத்தில் 6 குழந்தைகளும், விருதுநகரில் 6 குழந்தைகள் பிறந்து உள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் 24 குழந்தைகளும் (ஆண் - 9, பெண் -15), தூத்துக்குடியில் 12 (ஆண்-4, பெண்-8) குழந்தைகளும், தென்காசியில் 20 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    திருச்சியில் 13 (ஆண்-8, பெண்-4), பெரம்பலூரில் 10 (ஆண்-7, பெண்-3), அரியலூரில் 3 (ஆண்-2, பெண்-1), புதுக்கோடடையில் 14 (ஆண்-9, பெண்-5), கரூரில் 4 குழந்தைகள் (ஆண்-4) பிறந்துள்ளன. கிருஷ்ணகிரியில் 15 (ஆண் 7, பெண்8), தர்மபுரியில் 13 (ஆண் 7, பெண் 6), நாமக்கல்லில் 10 (5 ஆண், 5 பெண்), சேலத்தில் 29 குழந்தைகள் பிறந்துள்ளன. தஞ்சையில் 22 குழந்தைகளும், திருவாரூரில் 3 குழந்தைகளும், நாகையில் 6 குழந்தைகளும், மயிலாடுதுறையில் 16 குழந்தைகள் பிறந்துள்ளன.

    இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை சுமார் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.

    புதுச்சேரியை பொறுத்தவரை புத்தாண்டான நேற்று 26 குழந்தைகள் (ஆண்-12, பெண்-14) பிறந்துள்ளன.

    • ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவிப்பு.
    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    போராட்டம் அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ அமைப்பினருடன் நாளை அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவித்ததன் எதிரொலியால் நாளை அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

    அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் எ.வ.லு அறையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×