என் மலர்tooltip icon

    சென்னை

    • பீகாரில் பிரதமர் ந்நேரத்திர மோடி பொய் பிரசாரம் செய்கிறார்.
    • பாஜகவினர் பொய்களுக்கு தமிழக மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பீகாரில் பிரதமர் ந்நேரத்திர மோடி பொய் பிரசாரம் செய்கிறார்.

    பாஜகவினர் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் கருப்பர்கள் எனக்கூறி தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.

    பிஹாரில் ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் அவர்கள் ஏன் இங்கே வரப்போகிறார்கள்?; வேலை கேட்டு வரும் பிஹார் மக்களுக்கு இங்கு வேலை கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

    தமிழகத்திற்கான நிதி, கல்விக்கான நிதி என மாநிலத்திற்கான எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை.

    திமுக கூட்டணி பெற்ற வெற்றி, திமுக ஆட்சியில் தமிழகம் அடைந்து வரும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பிரதமர் பேசியுள்ளார்.

    ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட பிரித்தாளும் சூழ்ச்சியை பிரதமர் செய்கிறார். பாஜகவினர் பொய்களுக்கு தமிழக மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள், பீகார் மக்களும் பாஜகவின் பொய்களை அறிவர்.

    பிஹார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழில் படித்து அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

    நாங்கள் இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம். இந்திக்காரர்களுக்கு எதிரி அல்ல; முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து திட்டமிட்டு பிரதமர் மோடி பேசியதற்கு திமுக கண்டனம் தெரிவிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீர் இளநீரைப் போன்ற சுவையுடன் இருந்தது.
    • தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அவை அனைத்தும் சீரழிக்கப்பட்டன.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகள், புளியம்பட்டி, குள்ளக்கவுண்டனூர், பல்பாக்கி, வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, மூங்கில்பாடி, செங்காடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ளக்கல்பட்டி, மாமாங்கம், கருப்பூர் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களின் வாயிலாகத்தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு நிலத்தடி நீர் மட்டும் தான் பாசன ஆதாரமாக உள்ளது.

    இத்தகைய நிலையில் ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டால் குடிநீர் ஆதாரங்களும், வேளாண்மையும் முற்றிலுமாக அழிந்து விடும்.

    சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீர் இளநீரைப் போன்ற சுவையுடன் இருந்தது. ஆறுகளிலும் தூய்மையான நீர் ஓடியது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அவை அனைத்தும் சீரழிக்கப்பட்டன. அந்த சீரழிவுகளை சரி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், அவற்றை மேலும், மேலும் சீரழிக்கும் சதியில் தமிழக அரசு ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், பா.ம.க. சார்பில் மக்களைத்திரட்டி நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நிகழாண்டு பக்தா்கள் கூடுதலாக பயணம் செய்வாா்கள் எதிா்பாா்க்கப்படுகிறது.
    • குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையிலும் பஸ் வசதி செய்து தரப்படும்.

    அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவுக்கு, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தா்கள் சென்று வர ஏதுவாக, முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பஸ்கள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி முதல் 2026 ஜன.16-ந்தேதி வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூா் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பஸ்கள், குளிா்சாதன பஸ்கள் மற்றும் குளிா் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30-ந்தேதி வரை மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிச.26-ந்தேதி முதல் டிச.29-ந் தேதி வரை இந்த சிறப்புப் பஸ்கள் இயக்கப்படமாட்டாது.

    நிகழாண்டு பக்தா்கள் கூடுதலாக பயணம் செய்வாா்கள் எதிா்பாா்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையிலும் பஸ் வசதி செய்து தரப்படும்.

    60 நாள்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பஸ்களுக்கு இணையதளம் மூலமாக, மற்றும் டி.என்.எஸ்.டி.சி. எனப்படும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி: 9445014452, 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்.
    • தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை செய்துள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

    ஒரு மக்களாட்சியின் தலைவராக, அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களையும் சமமாகக் கையாளுவது பிரதமரின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்களை பழித்துக் கூறுவது அரசியல் நாகரிகத்துக்கும், ஜனநாயகக் கொள்கைக்கும் எதிரானது.

    தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள். அவர்களை குறைத்து பேசுவது, தமிழ் மக்களின் மனதை மட்டும் அல்லாது, இந்திய ஒற்றுமையையே பாதிக்கும் வகையில் உள்ளது.

    தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்நிலையிலேயே, தமிழர்களின் மீதான அவதூறு கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக தமது கருத்துகளை திரும்பப்பெற்று, தமிழர்களிடம் தனது பேச்சுக் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரிவினை மற்றும் வெறுப்பை தூண்டும் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.

    மாநிலங்களின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பிரதமர் செயல்பட வேண்டும்.

    தமிழர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எந்தவித செயலும், எந்தவித கருத்தும் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தெற்கு மியான்மர், அந்தமான் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்.

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர புயலாக உருவாகியுள்ளது.

    அந்த வகையில் அந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி வருவதாக கணிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு அருகே வந்து அங்கிருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடைய கரையை கடந்தது. இதையடுத்து தமிழகத்தில் பெய்து வந்த மழை நின்று தற்போது வெயில் அடிக்கத்தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தெற்கு மியான்மர், அந்தமான் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    • தமிழக அரசு ஒவ்வொரு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்று, இரண்டு என மாதிரி பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக உருவாக்கியது.
    • மாதிரி பள்ளிகள் ஒரு ஒன்றியத்திற்கு ஒன்று, இரண்டு தான் தற்போது வரை உள்ளன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஒவ்வொரு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்று, இரண்டு என மாதிரி பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக உருவாக்கியது. இந்த திட்டத்தை கொண்டு தமிழகம் முழுவதும் அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த கட்டுமானத்தை தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், போதிய இருக்கை வசதி மற்றும் அனைத்து வசதிகளை கொண்டும், போதிய ஆசிரியர்கள் மற்றும் அனைத்து கட்டமைப்புகளுடனும் தனியார் பள்ளிக்கு நிகராக உருவாக்கப்பட்டு சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாதிரி பள்ளிகளை உருவாக்கி அந்தப் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தையும், மதிப்பெண்ணையும் உயர்த்தியது வரவேற்கக்கூடியது.

    அந்த மாதிரி பள்ளிகள் ஒரு ஒன்றியத்திற்கு ஒன்று, இரண்டு தான் தற்போது வரை உள்ளன. அந்த மாதிரி பள்ளிகளை தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளும் அதே கட்டமைப்புகளுடனும், கல்வி தரத்துடனும், போதிய ஆசிரியர்களுடனும் செயல்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆர்வம் வரும். அரசு பள்ளிகள் மீதும் மதிப்பு கூடும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழர்கள்-பிகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே!
    • அறிவாலயத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர்.

    தமிழகத்தில் தி.மு.க.வும், பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருப்பவர்களும் பீகார் மக்களை துன்புறுத்துகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று தமிழர்கள்-பிகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே! தங்களது தேர்தல் பிரசாரத்தின்போது, வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநிலத்தவர்களைத் தமிழகத்திற்குள் திமுக என்றும் அனுமதிக்காது என்று சூளுரைத்தீர்களே, அப்போதெல்லாம் தேச ஒற்றுமை மறந்துவிட்டதா? பிகாரிகள் தமிழகத்தில் கழிவறை கழுவுகின்றனர் என்று தரக்குறைவாக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியபோதும், பானி பூரி விற்பவர்கள் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏளனமாகப் பேசிய போதும், தங்களது மூத்த அமைச்சர் துரை முருகன் வடமாநிலப் பெண்களைப் பன்றிகளுடன் ஒப்பிட்டு வசைபாடியபோதும், வேற்றுமையில் ஒற்றுமை தங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

    இப்படித் தாங்களும் தங்கள் திமுக உடன்பிறப்புகளும் அனுதினமும் பிகார் மக்களைப் பொதுவெளியில் வசைபாடி அவமதிக்கும் உண்மையைத் தான் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார். அதனைக் கண்டு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததும், தேச ஒற்றுமை குறித்து பதிவிட்டு புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா? தேச ஒற்றுமையைப் பேணிவரும் இச்சமூகத்தில் வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை உண்டாக்கத் துடிக்கும் உங்கள் அரசியல் முயற்சி முற்றிலும் வீண்.

    காரணம், பொழுது போகாவிட்டால் வடமாநிலத்தவர்களை வசைபாடி வன்மத்தைக் கக்குவது, பிகாரில் தேர்தல் காலம் வந்தால் வடமாநிலத்தவர்களைப் 'பிரதர்' எனக் கூறி இண்டி கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற

    அறிவாலயத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர்.

    எனவே, ஆட்சி முடியும் தருவாயிலாவது தங்கள் இருமுகன் வேடத்தைக் களைந்துவிட்டு, முதலில் தமிழக மக்களின் தேவைகளைக் கண் திறந்து பாருங்கள்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பீகார் மக்கள் பற்றி தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியது சரித்திரத்தில் உள்ளது.
    • தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால்தான் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தார்.

    தமிழகத்தில் தி.மு.க.வும், பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருப்பவர்களும் பீகார் மக்களை துன்புறுத்துகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

    * பீகார் மக்களை தி.மு.க.வினர் கீழ்த்தரமாக நடத்துவதாக பிரதமர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

    * பீகார் மக்கள் பற்றி தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியது சரித்திரத்தில் உள்ளது.

    * பீகாரிகள் அறிவில்லாதவர்கள் என கே.என்.நேரு சொன்னார். டேபிள் துடைக்க, பாத்ரூம் கழுவத்தான் சரியானவர்கள் என தயாநிதி கூறினார்.

    * தி.மு.க. மீது வைக்கப்படும் விமர்சனம் தி.மு.க. மீது மட்டும் தான், தமிழர்கள் மீது இல்லை என்பதை முதல்வருக்கு சொல்லிக்கொள்கிறேன்.

    * தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால்தான் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தார்.

    * தமிழக முதல்வரின் வேற்றுமை அரசியல் எடுபடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • செந்தில் நகர், சக்தி நகர், குறிஞ்சி நகர், அருள்முருகன் ராமமூர்த்தி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (01.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தரமணி: எம்.ஜி.ஆர். சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓ.எம்.ஆர்., காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், ஸ்ரீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, சர்ச் சாலை, சி.பி.ஐ. காலனி.

    பல்லாவரம்: ஜமீன் ராயப்பேட்டை, செந்தில் நகர், சக்தி நகர், குறிஞ்சி நகர், அருள்முருகன் ராமமூர்த்தி நகர்.

    • கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர்.
    • அடுத்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும்.

    தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர்.

    ஆனால், கோவிட் பெருந்தொற்றின்போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று.

    தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்ய முடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

    • திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம்.
    • தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, மு.க.ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி. ராஜா, எம்.பி. தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது பாரதப் பிரதமர், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.

    எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, மு.க.ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    தங்கம் விலை ஏற்றம் கண்டு, கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை குறையத் தொடங்கியது. கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வரை சென்றது. தொடர்ந்து விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து மிரட்டியது.

    தங்கம் விலை நேற்று குறைந்தது. காலை விலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் குறைந்த நிலையில், பின்னர் பிற்பகல் விலையில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து காணப்பட்டது.

    இந்நிலையில் தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400

    29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600

    28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600

    27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600

    26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-10-2025- ஒரு கிராம் ரூ.165

    29-10-2025- ஒரு கிராம் ரூ.166

    28-10-2025- ஒரு கிராம் ரூ.165

    27-10-2025- ஒரு கிராம் ரூ.170

    26-10-2025- ஒரு கிராம் ரூ.170

    ×