என் மலர்tooltip icon

    சென்னை

    • வார இறுதியில் பயணிப்பதற்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
    • பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இருக்கும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை (13-ந்தேதி) 350 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வார இறுதிநாள் விடுமுறையையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14, 15-ந் தேதிகளில் 545 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் என 616 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வார இறுதியில் பயணிப்பதற்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
    • தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நியமித்த 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    அந்த குற்றப்பத்திரிகையில் ஞானசேகரன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. வேறு யாருக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தான் இருந்ததற்கான தடயம் மற்றும் ஆதாரத்தை மறைப்பதற்காக அவர் தனது செல்போனை பிளைட் மோடுக்கு மாற்றினார். தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.

    பல்கலைக்கழக படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த மாணவியையும், அவரது நண்பரான மாணவரையும் பார்த்த ஞானசேகரன், மாணவரை தாக்கி கல்லூரி அடையாள அட்டையை பறித்தார். பின்னர் அவர்களை வீடியோ எடுத்திருப்பதாகவும், அதை டீன் மற்றும் ஊழியர்களிடம் காண்பிப்பதாகவும் மிரட்டினார். அவர்கள் கெஞ்சியதால் மாணவரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மாணவியின் செல்போனை பிளைட் மோடுக்கு மாற்ற சொன்னார். பின்னர் மாணவியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். தான் பல்கலைக்கழக அதிகாரி என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக யாரிடமோ போனில் பேசுவதாக நடித்து, "சார், நான் மாணவியை எச்சரித்து போக விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.

    மாணவி பெற்றோரின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை செல்போனில் மறைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அதை அழித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளன.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஞானசேகரன் பயன்படுத்திய செல்போனின் அழைப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர் மாணவியை மிரட்டுவதற்காக யாருடனோ செல்போனில் பேசுவது போல் நடித்து, அவரை 'சார்' என்று சும்மா அழைத்தார். உண்மையில் சார் என்று யாரும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    • தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நேற்று மழை பொழிந்தது.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதான வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்மொழி கொள்கையை விடவும் சிறப்பான இருமொழிக் கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்.
    • இது மொழி பற்றியது மட்டுமல்ல - முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது.

    தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    * தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் மாநில வாரிய பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

    * மொத்தம் 1,635 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

    * மும்மொழி கொள்கையை விடவும் சிறப்பான இருமொழிக் கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்.

    * மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதை முடிவு செய்வதில் தமிழ்நாடு அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது.

    * தமிழ்நாட்டில் கல்விமுறை சிறந்தது என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏன் மாற்ற வேண்டும்?

    * தமிழ் என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல - அது நமது வேர்கள், வரலாறு மற்றும் மதிப்புகளுடன் தொடர்புடையது.

    * நமது மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை.

    * இது மொழி பற்றியது மட்டுமல்ல - முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது.

    * NEP-ஐ விட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2024-2025-ம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4ஆயிரம் ரூபாய் என அறிவிக்க வேண்டும்.
    • மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார விலையை கணிசமாக உயர்த்த வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை டன்னுக்கு 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றது. தி.மு.க. இந்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை அளிக்கும் செயல்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் ஆதார விலையோடு சேர்த்து 2024-2025-ம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4ஆயிரம் ரூபாய் என அறிவிக்க வேண்டும். 2025-2026-ம் ஆண்டு கரும்பிற்கான ஆதார விலையை கணிசமாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார விலையை கணிசமாக உயர்த்த வேண்டும். இரண்டையும் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்.
    • திருக்கோவில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனையை தடுக்கவில்லை.

    சென்னை:

    தொடர்ந்து fight பண்ணிட்டே இருங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஊக்கம் அளித்தது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    * சீமானும் அண்ணாமலையும் நிழலோடு யுத்தம் செய்கின்றனர். நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்.

    * சீமானும் அண்ணாமலையும் செய்யும் யுத்தத்திற்கும், தி.மு.க.வின் யுத்தத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளது.

    * கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், கைப்பேசி எண்ணுடன் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

    * தமிழில் அர்ச்சனை செய்தால் அர்ச்சனை சீட்டு கட்டணத்தில் 60 சதவீதத்தை ஈட்டுத்தொகையாக வழங்கி வருகிறோம்.

    * திருக்கோவில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனையை தடுக்கவில்லை. அதே நேரத்தில தமிழ் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளோம்.

    * எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஒரு மொழியை திணிக்கின்றபோதான் அதற்கு எதிர்த்து நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ள விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கும் விற்பனையாகிறது.

    நேற்று வெள்ளி விலை சற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160

    10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400

    09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

    08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320

    07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-03-2025- ஒரு கிராம் ரூ.107

    10-03-2025- ஒரு கிராம் ரூ.108

    09-03-2025- ஒரு கிராம் ரூ.108

    08-03-2025- ஒரு கிராம் ரூ.108

    07-03-2025- ஒரு கிராம் ரூ.108

    • தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மத்திய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் மார்ச் 12-ந்தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.

    திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். 

    • காரில் இருந்த சீமான், அண்ணாமலையை கண்டதும் நலமா இருக்கீங்களா என்று கேட்டார்.
    • விட்டுடாதீங்க அண்ணா.. Bye அண்ணா" என்று கூறினார்.

    பா.ஜ.க. நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்தார்.

    காரில் இருந்த சீமான், அண்ணாமலையை கண்டதும் நலமா இருக்கீங்களா என்று கேட்டார்.

     

    பதிலுக்கு சீமானுக்கு கைகொடுத்த அண்ணாமலை, "Fight பண்ணிட்டே இருங்கண்ணா.. Strong-ஆ இருங்க.. விட்டுடாதீங்க அண்ணா.. Bye அண்ணா" என்று கூறினார்.

    அவருக்கு பதிலாக thumbs up-ஐ சீமான் காட்டினார்.

    • அதானி குழுமத்துடனான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் டெண்டர் கோரியது.
    • 6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இந்த முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மின் மீட்டர் அமைப்பதற்கான 2-வது டெண்டரை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

    அதானி குழுமத்துடனான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி நிறுவனம் பெற்ற டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இந்த முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    • சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அனுமதியோடு மாணவர்கள் விடுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
    • போலீசார் 3 பயிற்சி டாக்டர்களை கைது செய்து விசாரித்தனர்.

    சென்னை:

    சென்னை போலீசில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், உளவுப்பிரிவு இணை கமிஷனர் தர்மராஜனின் நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் இந்த தனிப்படை போலீசாரும், கோட்டூர்புரம் போலீசாரும் இணைந்து உயர்ரக கிரீன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆங்கிலோ இந்தியரான சைதாப்பேட்டை சின்னமலை பகுதியைச் சேர்ந்த ரோட்னி ரொட்ரிகோ (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து1¼ கிலோ கிரீன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களுக்கு கிரீன் கஞ்சா விற்றதும், அந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அனுமதியோடு மாணவர்கள் விடுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் பயிற்சி டாக்டர்கள் தருண், ஜெயந்த், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய 3 பேர் தங்கியிருந்த அறையில் இருந்து கஞ்சா, வலி நிவாரணத்துக்காகவும், போதைக்காகவும் பயன்படுத்தப்படும் 4 கேட்டமைன் போதைப்பொருள் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீசார், 3 பயிற்சி டாக்டர்களையும் கைது செய்து விசாரித்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெறுகிறது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.
    • சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது.

    கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டில் நேற்று அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது.

    அதிலும் குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவானது. இதுதவிர சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்தது.

    கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும், பல இடங்களில் 100 டிகிரியை நெருங்கியும் வெப்பம் பதிவானது. நேற்று பெய்த மழையால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.

    சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது. காலையில் சூரியன் தென்பட்டாலும், சற்று நேரத்தில் மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கியது. ஓரிரு இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாலங்காட்டில் 2.4, சோழவரத்தில் 1.4, பூண்டியில் 1.5 செ,மீ. மழை பதிவாகி உள்ளது.

    ×