என் மலர்tooltip icon

    சென்னை

    • நேற்று தங்கம் விலை காலையில் உயர்ந்தும், மாலையில் குறைந்தும் காணப்பட்டது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 16-ந்தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது. தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    தொடர்ந்து எகிறி வந்த நிலையில், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,720 சரிந்து, சற்று ஆறுதலை கொடுத்து, நேற்று மீண்டும் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இப்படியான விலை ஏற்றம் தங்கத்தை வாங்க நினைப்பவர்களுக்கு பெரிய 'ஷாக்' கொடுத்து வருகிறது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.450-ம், பவுனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று தங்கம் விலை காலையில் உயர்ந்தும், மாலையில் குறைந்தும் காணப்பட்டது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200-க்கும், கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,16,400-க்கும், கிராமுக்கு ரூ.14,550-க்கும் விற்பனையானது.

    கடந்த 10 நாட்களில் தங்கம் விலை ஏற்றத்தை வைத்து மட்டும் பார்த்தால், கிராமுக்கு ரூ.1,480-ம், பவுனுக்கு ரூ.11 ஆயிரத்து 840-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,400

    22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

    21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320

    20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

    19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-1-2026- ஒரு கிராம் ரூ.345

    22-1-2026- ஒரு கிராம் ரூ.340

    21-1-2026- ஒரு கிராம் ரூ.345

    20-1-2026- ஒரு கிராம் ரூ.340

    19-1-2026- ஒரு கிராம் ரூ.318

    • தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும்.
    • திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    நாடு முழுவதும் அம்ரித் பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை கடந்த 17-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில், தமிழகத்திற்கு 3 ரெயில்களும் அடங்கும்.

    அதாவது நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்காளம் நியூ ஜல்பாய்குரி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, தாம்பரம்-சந்திரகாச்சி ஆகிய 3 ரெயில்களாகும்.

    பிரதமர் மோடி நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளி ஆகிய 3 வழித்தடங்களுக்கான அம்ரித் பாரத் ரெயில் சேவை மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை ஆகியவற்றை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே தொடங்கப்பட்டுள்ள அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 11 தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகள், 8 உட்காரும் வசதி உடைய முன்பதிவு இல்லாத பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டி, ஒரு உணவுக்கூட பெட்டி என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

    தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    இந்த ரெயில் நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    நாகர்கோவில் மற்றும் மங்களூரு இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் சென்டிரல், கொல்லம், செங்கன்னூர், கோட்டயம் போன்ற முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

    இந்த ரெயில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பகல் 11.40 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மங்களூரு சென்றடையும். புதன்கிழமை மங்களூருவில் இருந்து காலையில் புறப்பட்டு அதே நாள் இரவு நாகர்கோவிலை வந்தடையும்.

    இதேபோன்று திருவனந்தபுரத்தில் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளிக்கு அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

     சென்னை தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் சேவை வரும் 28-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு 24-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.

    • பா.ஜ.க. தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக பேச வேண்டும்.
    • நெருக்கடிக்கு ஆளாகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் விஜயின் அரசியல் கேள்விக்குறியாகும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் 'ஜனநாயகன்' திரைப்படத்தை முடக்குவதில் மத்திய அரசு வேகமாக செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    * 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு அரசியல் தலையீடு இருக்கிறது என்ற விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    * அப்படி பா.ஜ.க. தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக பேச வேண்டும். பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் மௌனித்து இருக்கிறார்.

    * அவரை தடுப்பது எது என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றங்கள் மட்டுமே இதில் நெருக்கடி தருகிறதா? அல்லது பா.ஜ.க.வும் சேர்ந்து அவருடைய திரைப்படம் வெளியாகாமல் தடுப்பதற்குரிய நெருக்கடி தருகிறதா என்ற கேள்விக்கு விஜய் அவர்களால் மட்டும் தான் பதில் சொல்ல முடியும்.

    * ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. அவர் பா.ஜ.க.வையோ அல்லது மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க விஜய் தயாராக இல்லை, அச்சப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

    * இந்த அச்சம் ஏன்? என்பதை மக்களிடையே அவர் தெளிவுபடுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது.

    * விஜயை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இணைக்க முயற்சி நடக்கிறது.

    * விஜய்க்கு வியூகம் வகுத்து வரும் சிலரையும் பா.ஜ.க. அச்சுறுத்துவதாக தகவல் வருகிறது.

    * நெருக்கடிக்கு ஆளாகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் விஜயின் அரசியல் கேள்விக்குறியாகும்.

    * விஜய்க்கு பா.ஜ.க. நெருக்கடி தருகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

    * தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வராத கட்சிகளை பா.ஜ.க. மிரட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் மாதவரம், பொன்னோரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை மற்றும் மாதவரம், பொன்னேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம்.
    • மத்தியில் உள்ள NDA அரசும், தமிழகத்திற்கான நிதிகள், திட்டங்களை வாஞ்சையோடு வழங்கும்.

    பிரதமர் சொல்லும் டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது என்ற முதலமைச்சரின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இன்றைய தினம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் இந்திய திருநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இணைந்து பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி.

    அதிமுக தலைமையிலான நம் வெற்றிக் கூட்டணியின் சார்பில் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று,

    இன்றைய நமது கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம், ஆளுங்கட்சி திமுக-வை ஆட்டம் காண வைத்துள்ளதை ஆணித்தரமாக எடுத்துரைத்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும்,

    "திமுக ஆட்சி என்றாலே அது ஒரு பூஜ்ஜியம் ஆட்சி" என்ற உண்மையை உரக்கச் சொன்ன பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும்,

    "மக்கள் விரோத திமுக குடும்ப ஆட்சியை அகற்றி, மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய அம்மாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைந்து அயராது உழைக்க வேண்டும்" என்று உரைத்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர், அன்புச் சகோதரர் டிடிவி தினகரன் அவர்களுக்கும், இம்மாபெரும் பொதுக்கூட்டத்தை சிறப்பித்த

    ஜி.கே.வாசன் அவர்களுக்கும், ஜான் பாண்டியன் அவர்களுக்கும்,

    ஜகன் மூர்த்தி அவர்களுக்கும், புதிய நீதிகட்சித் தலைவருக்கும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர்க்கும்,

    மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கும், பல்வேறு அமைப்பை சார்ந்த தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    எங்கள் கூட்டணியின் எழுச்சியை நேரலையில் மு.க.ஸ்டாலின்

    பார்த்து அலறிப் போய் விட்டார் போல. உடனே எக்ஸ் தளத்தில் தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார்.

    "அடி மேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும்" என்பார்கள். ஆனால்,

    நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத,

    ஒரு "ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சி"யை நடத்திவிட்டு, இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம்.

    வரும் சட்டமன்றத் தேர்தலில் அமையவுள்ள அதிமுக அரசு, நமது மாநிலத்தின் நியாயமான தேவைகளை மத்திய அரசிடம் உரிமையோடு கேட்டுப் பெறும். மத்தியில் உள்ள NDA அரசும், தமிழகத்திற்கான நிதிகள், திட்டங்களை வாஞ்சையோடு வழங்கும்.

    "மதுரை மெட்ரோ எங்கே?

    கோவை மெட்ரோ எங்கே?" என்று வாய்கிழிய கேட்கும் நீங்கள், எதற்காவது ஒழுங்கான ஆவணங்களை, அறிக்கைகளை

    மத்திய அரசிடம் சமர்பித்தீர்களா?

    இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? நீங்கள் தான் ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர் ஆச்சே... உங்கள் அதிகாரிகளிடம் இதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், எதற்காக வெறும் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

    தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என எல்லாவற்றையும் கொடுத்த தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஏமாற்றி நீங்கள் நடத்திய #FraudModel_திமுகஆட்சி-யைக் கண்ட பிறகு, நீங்கள் எத்தனை தகிடுத்தத்தங்கள் போட்டாலும், இனி #தமிழ்நாடு_ஏமாறாது !

    குடும்ப ஆட்சியை, ஊழல் ஆட்சியை, மக்களின் பாதுகாப்பை சீர்குலைத்த விடியா ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஒருமித்த எண்ணம்.

    மக்களின் எண்ணத்தை ஈடேற்ற அமைந்ததே அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி!

    எங்கள் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தைக் கண்டு இப்படி பயந்துவிட்டீர்களே மு.க.ஸ்டாலின் அவர்களே-

    இது தொடக்கம் தான்...

    Lot more to come!

    மாண்புமிகு அம்மா அவர்கள் கூறுவது போல்,

    நமது இலட்சியம் உயர்வானது!

    நமது பார்வை தெளிவானது!

    நமது வெற்றி உறுதியானது!

    நாளை நமதே!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்தது.
    • இதனால் ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து 'ஜெட்' வேகத்தில் எகிறி வந்து, நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டிப்பிடித்து இருந்தது. தொடர்ந்து விலை ஏற்றம் கண்ட நிலையில், நேற்று விலை சற்று குறைந்தது.

    இதனையடுத்து தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை சற்று குறைந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,16,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.14,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.360-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

    21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320

    20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

    19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600

    18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-1-2026- ஒரு கிராம் ரூ.340

    21-1-2026- ஒரு கிராம் ரூ.345

    20-1-2026- ஒரு கிராம் ரூ.340

    19-1-2026- ஒரு கிராம் ரூ.318

    18-1-2026- ஒரு கிராம் ரூ.310

    • கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன.
    • 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே,

    Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?

    Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மத்திய உள்துறை அமைச்சர்

    அமித் ஷா, கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தெரிவித்துவிட்டார். உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை?

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்?

    100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள். மத்திய அரசு தற்போது அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது.

    AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த வருடம் மதுரை AIIMS, மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா?

    இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை.

    கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? திருத்தம் செய்யப்பட்ட DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா?

    கீழடி ஆய்வறிக்கை, உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு?

    நீட் தேர்வை, தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களுக்கு, நீட் ஒரு வரப்பிரசாதம் என்பதை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் இணையும் எளிய பின்புலம் கொண்ட பெற்றோர்கள் கூறுவார்கள். மருத்துவக் கல்வி இடங்களை விற்று, இத்தனை ஆண்டு காலம் பல கோடி சம்பாதித்த திமுக கும்பலுக்கு மட்டுமே நீட் தேர்வு கசக்கிறது.

    ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக்கழிவறைகளில் கரித்துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான பழக்கத்தை, AI காலத்திலும் தொடராதீர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான்.
    • சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர்.

    சென்னை:

    சட்டசபையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தினை முன்மொழிந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித் திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்று வருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம்.

    எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கேற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-2026-ம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டு உள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்திற்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இன்றுவரை விடுவிக்கப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர்த் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.

    இப்படி இவர்கள் தாமதிப்பதால் பாதிக்கப்படுவது யார்? தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். நம் மாநிலத் தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம். இந்த வஞ்சனையை எல்லாம் விஞ்சக்கூடிய அளவிற்கு, தற்போது ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கக்கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாற்றி, அதற்குப் பதிலாக "வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஊரகப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை உறுதி செய்தும், சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் திட்டத்தை, அறிமுக நிலையிலேயே நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பி இருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்தத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்தப் புதிய திட்டமானது, மக்களின் தேவையின் அடிப்படையிலே அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நான் ஏற்கனவே பிரதமருக்கு கடந்த 18.12.2025 அன்று கடிதம் எழுதி இருக்கிறேன்.

    இந்த புதிய வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலை உறுதி மற்றும் வாழ் வாதார திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட உள்ள உத்தேச ஒதுக்கீட்டின்படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன்.

    "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்;

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டு களின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்;

    உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும், மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்;

    இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவீதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்;

    தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா-ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம்-ஊரகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது."

    இந்திய நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-ன் விதிமுறைகளின்படியே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் மேற்படி தீர்மானத்தை இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் கேட்டு அமைகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

    • கோயம்பேட்டில் இருந்து இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.
    • கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    குடியரசு தினம் 26-ந் தேதி (திங்கட்கிழமை) வருவதையொட்டி சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை உடன்தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கிறது.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இன்று (வெள்ளிக்கிழமை) கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 550 பஸ்களும் நாளை (சனிக்கிழமை) 450 பஸ்களும் கூடுதலாக இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. இது தவிர பெங்களூரு திருப்பூர் ஈரோடு, கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 பஸ்கள் விடப்பட்டுள்ளன. மாதவரத்தில் இருந்து இன்றும் நாளையும் 24 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

    சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 26-ந் தேதி 800 சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.

    கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் ரூ.500 கோடி நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.
    • 100 நாள் வேலை திட்டமானது மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.

    சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

    ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக இன்று சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்து இருந்தார்.

    இந்நிலையில் மத்திய அரசின் விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் கூறுகையில்,

    * மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு பாகுபாடின்றி திறம்பட செயல்படுத்தி வருகிறது.

    * தமிழகத்தின் மீது பாரபட்சத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    * பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் ரூ.500 கோடி நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.

    * கிராம மக்களின் வாழ்வாதாரத்தை வேரறுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    * திட்டங்களை செயல்படுத்தும்போது மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதை கொள்கையாக கொண்டிருக்கிறது.

    * விபி-ஜி ராம் ஜி திட்டத்தின்படி 40 சதவீதம் பங்களிப்பு என்ற அறிவிப்பால் மாநிலத்தின் நிதி சுமை மேலும் அதிகரிக்கும்.

    * மக்களின் தேவை அடிப்படையில் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய சட்டம் கொண்டு வரப்படவில்லை.

    * 100 நாள் வேலை திட்டமானது மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.

    * 100 நாட்கள் வேலை திட்டத்தில புதிய நடைமுறையை கைவிட வேண்டும். பழைய நடைமுறையே தொடர வேண்டும்

    * 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு நிலை நாட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

    • பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
    • கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?

    பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி செய்த துரோகங்களை பட்டியலிட்டு கேள்விகளை எழுப்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே...

    தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?

    #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?

    பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

    தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?

    "#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?

    பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?

    இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?

    ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?

    கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?

    ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?

    தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×