என் மலர்tooltip icon

    சென்னை

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • சிந்து நகர், டிஆர்ஆர் நகர், தனலட்சுமி நகர், நாசர் மெயின் ரோடு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 5 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை (20.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, திருமுல்லைவாயல் பகுதியில் ஆர்ச் ஆண்டனி நகர், பொதூர் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை. அதேபோல ஆவடி பகுதியில் சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், டிஆர்ஆர் நகர், தனலட்சுமி நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும். 

    • சோதனை நடந்த 2 நாட்களும் விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • விசாரணையின்போது அவரது செல்போன், லேப்டாப்பில் இருந்து பல்வேறு ஆதாரங்களை அமலாக்கத்துறையினர் திரட்டி உள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிக்கை வெளியிட்டது.

    இதுதொடர்பாக, கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 16-ம் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேடு ராஜகீழ் வீதியில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் மேகநாதன் வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள தொழில் அதிபர் தேவக்குமார் வீடு.

    சாஸ்திரி நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமார் வீடு, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் முதல் தெருவில் உள்ள பாபு வீடு, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள கேசவன் வீடு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள தொழில் அதிபர் ரித்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனை நள்ளிரவு 2 மணி அளவில் முடிவடைந்தது. அனைத்து இடங்களிலும் நடைபெற்ற சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது காரில் எடுத்துச் சென்றனர்.

    சோதனை நடந்த 2 நாட்களும் விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவரது செல்போன், லேப்டாப்பில் இருந்து பல்வேறு ஆதாரங்களை அமலாக்கத்துறையினர் திரட்டி உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதை ஏற்று ஜோதி சங்கர் அமலாக்கத்துறையில் இன்று ஆஜரானார். இவரிடம் ஏற்கனவே 7 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். இதில் இன்னும் பல தொழில் அதிபர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

    • முக்கிய நகரங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    • சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது பற்றியும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குண்டு வைப்பதற்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளான சிராஜ், அமீர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேலும் பலர் இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இதனை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது பற்றியும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் உயர் அதிகாரிகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    பொதுமக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.

    சென்னை:

    வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் டெல்லியில் வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்படவுள்ள முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.ஐ., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.

    • 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
    • மாநாடு நடைபெறும் தேதியை கட்சி தலைவர் விஜய் அதிகார பூர்வமாக விரைவில் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பு பணிகளை கட்சி தலைவர் விஜய் வலுப்படுத்தி வருகிறார்.

    234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அதில் சுமார் 69 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பூத் கமிட்டி உறுப்பினர்கள் முதல்கட்ட மாநாடு கோயம்புத்தூரில் 2 நாட்கள் நடந்தது. 13 மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்த விஜய்யை வழிநெடுகிலும் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து வரவேற்றனர். திறந்த வேனில் பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி வந்த விஜய் பொதுமக்களின் வரவேற்பை கண்டு திக்கு முக்காடினார்.

    மாநாட்டில் பேசிய விஜய் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கும் மாநாடு இல்லை. நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதே மக்களுக்காகத்தான் மக்களோடு மக்களாக எப்படி ஒன்றிணைய போகிறோம் என்பதற்காகதான் இந்த பயிற்சி பட்டறை என அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும் பேசி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினார்.

    விஜய் பேச்சு மற்றும் அவரை காண திரண்ட கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து த.வெ.க. பூத் கமிட்டி 2-ம் கட்ட மாநாட்டை உடனே நடத்துவது பற்றி கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்துடன் ஆலோசனை நடத்தி வந்தார். மாநாட்டுக்காக மதுரை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வேலூரில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இடங்கள் தேர்வு செய்யும் பணி சில தினங்களாக நடந்தது. இதற்காக வேலூர், கிருஷ்ணகிரியில் மாநாடு நடத்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் வேலூரில் மாநாடு நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    வேலூரில் நடைபெறும் மாநாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி உள்பட 20 மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

    2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரை ஆற்ற இருக்கிறார். 'ரோடு-ஷோ' நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    மாநாடு நடைபெறும் தேதியை கட்சி தலைவர் விஜய் அதிகார பூர்வமாக விரைவில் வெளியிட இருக்கிறார். மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் வேளாண்மையைத் தான் வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர்.
    • வேளாண் தொழில் வளர்ந்தால் தான் அந்த 60 சதவீதம் மக்களும் முன்னேறுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500ஆக உயர்த்த வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதில் 60 சதவீதம் மட்டும் தான் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது.

    இது தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினால், 2021-ம் ஆண்டில் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை 2026-ம் ஆண்டில் நிறைவேற்றி விடுவோம் என்று திமுக அமைச்சர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை கிண்டல் செய்கின்றனர். வேளாண் வளர்ச்சிக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    2024-25-ம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரம் 9.69 சதவீதம் வளர்ச்சி அடைந்து விட்டதை கோடிக்கணக்கில் செலவழித்துக் கொண்டாடிய திமுக அரசு, வேளாண்துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஒப்புக் கொண்டு, நடப்பாண்டிலாவது வேளாண்துறையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த நேர்மை திமுக அரசுக்கு சிறிதளவு கூட இல்லை. மாறாக, இந்த உண்மையை மறைக்கும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் வேளாண்துறை சராசரியாக 5.66 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாகக் கூறி பொய்யாக பெருமை தேடத் துடிக்கிறது.

    தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் வேளாண்மையைத் தான் வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர். வேளாண் தொழில் வளர்ந்தால் தான் அந்த 60 சதவீதம் மக்களும் முன்னேறுவார்கள். அவர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது. எனவே, வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

    அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். அதன் மூலம் வேளாண் வளர்ச்சியையும், உழவர்களின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
    • இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    முதலமைச்சர் தலைமையில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நீலகிரி, கோவை, தேனி, குமரி மாவட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

    இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

    கடலோர மாவட்டங்களில் அதீத கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பருவமழையால் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

    • தன்னைப் போன்றே "20 வயதுள்ள 20 பெண்கள்" தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
    • நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக "சார்"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சு. இரவி அவர்களிடம் மாணவி முறையிட்ட பிறகே FIR பதிந்துள்ளது.

    மேலும், தன்னைப் போன்றே "20 வயதுள்ள 20 பெண்கள்" தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

    "பொள்ளாச்சி பொள்ளாச்சி" என்று மேடைதோறும் கூவிய மு.க.ஸ்டாலின் அவர்களே- "உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தானே?

    பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக CBI-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!

    பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக "உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை" அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட திமுக-வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். குறிப்பாக, அமைச்சர் அன்பில் மகேஷின் உதவியாளர் உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன்.

    தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!

    20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த "டம்மி அப்பா" அரசு நடவடிக்கை எடுக்குமா?

    எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அ.தி.மு.க. மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்!

    #யார்_அந்த_தம்பி

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 



    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த வார இறுதியில் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720-க்கும் ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    17-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    16-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    15-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,880

    14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-05-2025- ஒரு கிராம் ரூ.108

    17-05-2025- ஒரு கிராம் ரூ.108

    16-05-2025- ஒரு கிராம் ரூ.108

    15-05-2025- ஒரு கிராம் ரூ.108

    14-05-2025- ஒரு கிராம் ரூ.109

    • இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
    • ஆலோசனை கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்கிறார்.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர், அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
    • இன்று காலை 10 மணிவரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழக மற்றும் அதனைய ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையில் நேற்று இரவு மிதமான மழையும் பெய்தது.

    இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. எழும்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனிடையே, இன்று காலை 10 மணிவரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாகை, நீலகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    • ஈழப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவது வேதனையளிக்கிறது.
    • பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சொந்த மண்ணில் சுயாட்சி உரிமையுடனும், சுய மரியாதையுடனும் வாழும் உரிமையைக் கேட்டு போராடியதற்காக ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் சொந்தங்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டதன் 16-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதத் தன்மையற்றவர்களால், போர்விதிகளை மீறி கொல்லப்பட்ட நமது சொந்தங்களுக்கு இந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன்.

    உலக வரலாற்றில் ஏராளமான படுகொலைகள் நடந்துள்ளன. அவை அனைத்தையும் விட கொடூரமான இனப்படுகொலையை செய்தவர்கள் இராஜபக்சேவும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட கூட்டாளிகளும் தான்.

    உலகின் பிறநாடுகளில் இனப்படுகொலைகளை அரங்கேற்றியவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஈழப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவது வேதனையளிக்கிறது.

    இனப்படுகொலையாளர்களை தண்டிக்க பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    இலங்கை இனப்படுகொலை நடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே ஈழத்தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

    பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவர் என்ற முறையில் நான் 3 முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.

    பசுமைத்தாயகம் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக இனப்படுகொலை குறித்து ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது. ஆனாலும், அது இன்னும் நீதிமன்ற விசாரணை என்ற நிலைக்கு செல்லவில்லை.

    இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தருவது இந்தியாவால் மட்டும் தான் சாத்தியமாகும். அதற்காக மத்திய அரசுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் அழுத்தம் கொடுத்து ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×