என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்"

    • ஈழப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவது வேதனையளிக்கிறது.
    • பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சொந்த மண்ணில் சுயாட்சி உரிமையுடனும், சுய மரியாதையுடனும் வாழும் உரிமையைக் கேட்டு போராடியதற்காக ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் சொந்தங்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டதன் 16-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதத் தன்மையற்றவர்களால், போர்விதிகளை மீறி கொல்லப்பட்ட நமது சொந்தங்களுக்கு இந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன்.

    உலக வரலாற்றில் ஏராளமான படுகொலைகள் நடந்துள்ளன. அவை அனைத்தையும் விட கொடூரமான இனப்படுகொலையை செய்தவர்கள் இராஜபக்சேவும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட கூட்டாளிகளும் தான்.

    உலகின் பிறநாடுகளில் இனப்படுகொலைகளை அரங்கேற்றியவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஈழப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவது வேதனையளிக்கிறது.

    இனப்படுகொலையாளர்களை தண்டிக்க பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    இலங்கை இனப்படுகொலை நடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே ஈழத்தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

    பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவர் என்ற முறையில் நான் 3 முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.

    பசுமைத்தாயகம் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக இனப்படுகொலை குறித்து ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது. ஆனாலும், அது இன்னும் நீதிமன்ற விசாரணை என்ற நிலைக்கு செல்லவில்லை.

    இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தருவது இந்தியாவால் மட்டும் தான் சாத்தியமாகும். அதற்காக மத்திய அரசுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் அழுத்தம் கொடுத்து ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம்.
    • உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.

    முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக இன்று உறுதி ஏற்போம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.

    மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.

    மாமக்கள் போற்றுதும்!

    மாவீரம் போற்றுதும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நிகழ்ச்சி நடத்திய புகைப்படங்களையும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
    • கட்சி தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள படத்தை தவிர எந்த படத்தையும் பயன்படுத்தக் கூடாது.

    தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-

    முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி இன்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரி ழந்த ஈழத் தமிழர்களை நினைவு கூறும் விதமாக இன்று மாலை 6 மணி அளவில் தங்கள் மாவட்ட அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் தினம் அனுசரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    நிகழ்ச்சி நடத்திய புகைப்படங்களையும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கட்சி தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள படத்தை தவிர எந்த படத்தையும் பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நினைவேந்தல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட வேண்டிய கோஷங்களும் கட்சித் தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

    • 2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் வைத்து தமிழினப்படுகொலை நடந்தது.
    • பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம் அறம் சார்ந்த இன விடுதலைப் போராட்டமாகும்.

    சென்னை:

    முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வீரவணக்கப் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் நாளை நடைபெறுகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று பேசுகிறார்.

    இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் வைத்து தமிழினப்படுகொலை நடந்தது.

    பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம் அறம் சார்ந்த இன விடுதலைப் போராட்டமாகும்.

    ஈழத்தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டமாகட்டும், பிரபாகரன் தலைமையிலான ஆயுதவழி அறப்போராட்டமாகட்டும் எல்லாமே மக்களுக்கான விடுதலைப் போராட்டமே!

    ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை தீவிரவாதமாக பார்த்து தடை செய்தது. தடைகளை மீறி போராட்டங்கள் தொடரத்தான் செய்கிறது.

    2010-ம் ஆண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பேசும் போது,

    "கடைசி விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் வரை, ஈழவிடுதலைக்காக போராடுவோம்-ஈழ விடுதலைப் போரை முன்னெடுப்போம்" என பிரகடனப்படுத்தினார்.

    எத்தனையோ அவதூறுகள், எத்தனையோ சாதிவெறித் தாக்குதல்கள்

    அத்தனையையும் முறியடித்து மக்களுக்காக நின்று களமாடி வருகிறோம்.

    இனப்படு கொலைகளுக்கு எதிரான களத்தில், எந்த சோர்வும் இல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளை வழிநடத்தி வரும். தமிழ்த்தேசியப் பெருந்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், நாளை மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் நடைபெறுகிறது.

    இனப்படுகொலைகளுக்கு எதிராக களமாட உறுதி ஏற்போம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×