என் மலர்tooltip icon

    சென்னை

    • மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!
    • நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!

    மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!

    அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!

    மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்!

    #வெல்வோம்_ஒன்றாக!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
    • பி.டி. உஷாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். தங்களின் அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் பி.டி. உஷாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம்.
    • தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

    சென்னை:

    அரசு டாக்டர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

    அதன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்து வந்த டாக்டர்களிடம் அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் மீண்டும் போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ளனர்.

    ஒத்துழையாத போராட்டம் என்ற அடிப்படையில் அரசு டாக்டர்கள் பல்வேறு பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் பயோமெட்ரிக் வருகை பதிவை புறக்கணிப்பது வாட்ஸ் அப் குழு, ஆன்லைன் மற்றும் நேரடியாக நடைபெறும் அலுவல் சார்ந்த கூட்டங்களை புறக்கணித்தல், மருத்துவ மாணவர்களின் வகுப்புகள் புறக்கணிப்பு என அரசுக்கு ஒத்துழைக்காமல் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். சம்பள உயர்வு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ரூ.3000 படி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம்.

    அதனை நிறைவேற்றவில்லை. பொதுமக்கள் நலன் பாதிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் போராட்டத்தை மேற்கொள்ளாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் நிறைவேற்ற முன்வரவில்லை.

    இன்று முதல் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளோம். 4 பணிகளை புறக்கணித்து உள்ளோம். பிப்ரவரி 4-ந் தேதி வரை ஒத்துழையாமை போராட்டம் நடைபெறும். அதன் பின்னர் மாநில செயற்குழு கூடி அடுத்தகட்ட போராட்டத்தை முடிவு செய்வோம்.

    தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மருத்துவர்கள் சேவையில் எந்த குறைவும் இருக்காது. அடுத்த வாரம் புதன்கிழமை மீண்டும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு  மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    • பா.ஜ.க.வின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் தான்.
    • கட்டாயத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது.

    சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் 2 நாள் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க.வின் மீது வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதாவது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதா?

    * பா.ஜ.க.வின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் தான்.

    * பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் ஊழல்வாதிகள் வெளுக்கப்பட்டு விட்டனரா?

    * இந்தி திணிப்பை ஏற்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி எப்போது வரும்?

    * களத்தில் எங்களை எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு தான் வாரிசு அரசியல்.

    * ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுடன் தான் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது.

    * கட்டாயத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது. அது துரோகக்கூட்டணி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் 3-ம் நிலை நகரங்கள் கூட வளர்ச்சி அடைந்துள்ளன.
    • தி.மு.க. ஆட்சியில் 4,000 கோவில்களில் குடமுழுக்கு செய்துள்ளோம். இது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத சாதனை.

    சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் 2 நாள் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சமூகநீதி - சமத்துவம் - மக்கள் நலன் ஆகியவற்றை தி.மு.க. அரசு முக்கியமாக பார்க்கிறது.

    * தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைந்துள்ளது.

    * மத்திய அரசின் நெருக்கடிகளை தாண்டி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    * தமிழ்நாட்டில் 3-ம் நிலை நகரங்கள் கூட வளர்ச்சி அடைந்துள்ளன.

    * சமூகத்தில் எந்த பிரிவினரும் விடுபட்டு விடக்கூடாது என பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    * மாநிலத்தின் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * இந்தியாவில் எந்த மாநிலமும் அடைய முடியாத 11.8% வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.

    * தமிழ்நாடு முழுவதும் உள்கட்டமைப்பு மேம்படுத்தி உள்ளது திராவிட மாடல் அரசு.

    * இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும்.

    * நாட்டிலேயே முதல்முறையாக காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது.

    * தி.மு.க. வெற்றி பெற்ற மறுநாளே விடியல் பயண திட்டத்தை தொடங்கி வைத்தோம்.

    * சொன்னதை போலவே மகளிர் உரிமை தொகை திட்டத்தை நிறைவேற்றி காட்டியிருக்கிறோம்.

    * தி.மு.க. ஆட்சியில் 4,000 கோவில்களில் குடமுழுக்கு செய்துள்ளோம். இது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத சாதனை.

    * நாட்டுக்கே வழிகாட்டி திராவிட மாடல் ஆட்சி என்பதற்கான அடையாளம் மற்ற மாநிலங்களில் நம் திட்டங்களை பின்பற்றுவதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
    • கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில்,

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

    உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி.

    தினந்தோறும் "இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?" என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். "இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது" என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

    தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்.

    இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான

    விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.



    • தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை, தாம்பரம்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • நெல்லையில் இருந்த வருகிற 1-ந்தேதி இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 9.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை, தாம்பரம்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்விவரம் வருமாறு:-

    எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06001), மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்த வருகிற 1-ந்தேதி இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 9.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    தாம்பரத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (06003), மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து வருகிற 1-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் சிறப்பு ரெயில் (06004), மறுநாள் காலை 11.30 மணிக்கு வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சம் என்ற பாணியை கையில் எடுத்துவிட்டது. விலை உயர்ந்தாலே உச்சம் என்ற போக்கிலேயே 'கிடுகிடு'வென அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

    ஆண்டின் முதல் மாதமான இம்மாத தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர், தங்கம் விலை ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கியது.

    அதிலும் கடந்த 12-ந்தேதிக்கு பிறகு தங்கம் விலையின் வேகம் யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது. சில நாட்கள் தங்கம் விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

    அந்த வகையில் நேற்று முன்தினமும், நேற்றும் தங்கம் விலை ஏற்றம் இதுவரை இல்லாதபடி தாறுமாறாக 'டாப் கியரில்' எகிறி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து காணப்பட்டது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 610-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. அதாவது ஒரு சவரன் ரூ.1¼ லட்சத்தை நெருங்கியதாக செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டன. இந்த நிலையில் நேற்றும் தங்கம் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது.

    இந்த ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து நேற்று வரையிலான கடந்த 29 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.4 ஆயிரத்து 360-ம், சவரனுக்கு ரூ.34 ஆயிரத்து 880-ம் உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.415-க்கும் பார் வெள்ளி 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    29-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,34,400

    28-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,880

    27-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680

    26-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,200

    25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    29-1-2026- ஒரு கிராம் ரூ.425

    28-1-2026- ஒரு கிராம் ரூ.400

    27-1-2026- ஒரு கிராம் ரூ.387

    26-1-2026- ஒரு கிராம் ரூ.375

    25-1-2026- ஒரு கிராம் ரூ.365

    • தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு!
    • 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும்.

    சென்னை:

    அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதை காட்டுகின்றன. நேற்று டெக்கான் க்ரானிகல் பத்திரிகை எழுதியிருந்த ஆய்வு கட்டுரையும், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அதனை மெய்பிக்கின்றன.

    'பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணியில் உள்ளது' (In race to win hearts of women, DMK is ahead a) என தலைப்பிட்டு டெக்கான் க்ரானிகல் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில், சிறுபான்மையினர் மத்தியில் அதிமுகவின் அங்கீகாரம் சரிந்துள்ளது என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 70 முதல் 80 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்று கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர் என தெரிவித்திருக்கிறார்கள்.

    இந்தியா டுடே பத்திரிகையும் சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்தியா கூட்டணி 45 சதவிகித ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது என இந்தியா டுடே - சி வோட்டர்ஸ் தெரிவித்திருக்கிறது. அதிமுக இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 33 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது. வித்தியாசம் 12% என்பதால் தொட முடியாத உயரத்தில் திமுக கூட்டணியை மக்கள் உயர்த்திப்பிடிக்கின்றனர்.

    மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையில் 2019 பாராளுமன்றத் தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறும் கூட்டணியாக திமுக அணி இருக்கிறது. 2026 தேர்தலிலும் திமுக வெல்லும். அதனை கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்கின்றன.

    தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு! திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்! தமிழ்நாட்டில் இருக்கும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றியில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.

    தமிழ்நாட்டுப் பெண்களின் உரிமைகளுக்காக அவர்களின் சமூக மேம்பாட்டிற்காக திராவிட மாடல் அரசு அக்கறையோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தில் ஏறக்குறைய 1.30 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர். அரசு நகர பேருந்துகளில் அனைத்துப் பெண்களுக்கும் 'விடியல் பயணம்' மூலம் உத்வேகத்தையும் பொருளாதார சேமிப்பையும் உறுதிப்படுத்தியிருப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இதுவரை 800 கோடி பயணங்களுக்கும் மேல் பெண்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதே இத்திட்டத்தை தமிழ்நாட்டுப் பெண்கள் எவ்வளவு தூரம் வரவேற்றிருக்கிறார்கள் என்பதற்குச் சான்று.

    பெண்களின் முன்னேற்றத்திற்கான தடைகள் எங்கிருந்தாலும் அதை ஒழித்து, அவர்களது முன்னேற்றப்பாதையைச் செழுமைப்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்களைத் திராவிட மாடல் அரசு தீட்டியிருக்கிறது. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இத்திட்டம் மூலம் இதுவரை 6.95 இலட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.

    பெண்களின் திறன்களும் உழைப்பாற்றலும் படைப்பாற்றலும் கிராமங்களில் முடங்கிவிடக் கூடாது அவர்கள் நகரங்களுக்கு வந்து, தங்களையும் உயர்த்தி தமிழ்நாட்டையும் உயர்த்த வேண்டும் எனும் நோக்கத்தோடு அதீத பாதுகாப்போடு உயர்தர தோழி விடுதிகளை அமைத்திருக்கிறது.

    பணிக்குச் செல்லும் குடும்பப் பெண்கள் பள்ளிக்குச் செல்லும் தங்கள் குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்துள்ள காலை உணவு கிடைக்காமல் போய்விடுகிறேதே என்றிருந்த கவலையைத் தீர்த்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சுவையான சத்தான காலை உணவுத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இத்திட்டத்தின் மூலம் 20 இலட்சம் மாணவர்கள் தினமும் பயன் பெறுகின்றனர்.

    இன்றைக்கு பெண்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்குப் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயதுடைய, சுமார் 3.39 இலட்சம் சிறுமிகளுக்கு விலையில்லா தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பெண்களின் வாழ்வாதாரத்தில் மட்டுமல்ல அவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டு கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறது திமுக அரசு.

    பெண்களை ஆதிக்கம் செய்ய நினைப்பவர்கள், துன்புறுத்த நினைப்பவர்களை கடுமையாக தண்டிக்கத் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு (திருத்தச்) சட்டத்தை கொண்டு வந்தவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்தான்.

    பெண்களை முன்னேற்று திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இது போன்றத் திட்டங்கள் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திவரும் மறுமலர்ச்சியை கண்டு வயிற்றெரிச்சலில் திரிபவர்கள், உண்மைகளை ஜீரணிக்க முடியாமல், அவதூறுகளை நாள்தோறும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிருக்கிறார்கள்.

    இதனையெல்லாம் தமிழ்நாட்டுப் பெண்கள் பொருட்படுத்துவதில்லை. தங்களுக்காக உழைக்கின்ற, தங்களுக்காக திட்டங்களை உள்ளன்போடு, உயர்த்தும் நோக்கத்தோடு செயல்படுத்தும் திராவிட மாடல் அரசே தொடர வேண்டும் எனும் தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

    45% என்பதே கூட மிகக் குறைவான கணக்குதான் என்பதை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும். அதற்கு திமுக ஆட்சியில் பயன்பெறும் பெண்கள்தான் மகுடம் சூட்டுவார்கள்! என்று கூறியுள்ளார். 

    • விஜய்யை இயக்கும் கொள்கை ஆசான் யார்?.
    • தன் அரசியல் நடிப்பை வெளிப்படுத்தி வரும் திருமாவளவனும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் விஜய் ஊழலையும், வாரிசு அரசியலையும் ஒழிப்பதற்காக அரசியலுக்கு வந்தேன் என்று ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் சத்தியம் செய்ததை மறந்தது ஏன்?. விஜய்யை இயக்கும் கொள்கை ஆசான் யார்?.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைதான் கொள்கை ஆசான் என்று த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் அறிவித்ததின் பின்னணி என்ன?. அனைத்துக் கட்சிகளுக்கும் அறிவுரை சொல்லும் திருமாவளவன் நடிகர் விஜய்யை காங்கிரசோடு கைகோர்க்க வேண்டும் என்று மறைமுகமாக ஆதவ் அர்ஜூனா மூலம் அறிவுரை சொல்வது ஏன்?.

    எதிர்எதிர் துருவங்கள் போல காட்டிக் கொண்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதில் மறைமுகமாக ஒன்றிணைந்து, இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படும் அரசியல் நடிகர் விஜய்யும், ஒரு படத்தில் நடித்திருந்தாலும், தேர்தல் நேரத்தில் புதுப்புது அரசியல் கேரக்டராக, தன் அரசியல் நடிப்பை வெளிப்படுத்தி வரும் திருமாவளவனும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    • மொத்தம் உள்ள 234 தொகுதிகளும் 72 நிர்வாகிகளுக்கு பங்கிட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

    தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க. பிரசார பணிகளை வியூகம் அமைத்து முன் னெடுத்து உள்ளன.

    கட்சியின் முக்கிய தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரங்களை மேற்கொள்ள ஒவ்வொரு வருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தேர்தலை சந்திக்க ஒவ்வொரு தொகுதியையும் தயார் செய்யும் வகையில் தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் தொடர் சுற்றுப்பயணம் செய்வதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். அதில் 2 முதல் 7 சட்டசபை தொகுதிகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மத்திய மந்திரி எல்.முருகன் திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வானதி சீனிவாசனுக்கு திருப்பூர் தெற்கு, குன்னூர், கோவை தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர், நாங்குனேரி, பொள்ளாச்சி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அண்ணாமலை-சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பத்தூர் சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எச்.ராஜாவும் எழும்பூர், ராசிபுரம், பர மத்திவேலூர் தொகுதிகளுக்கு வி.பி.துரைசாமியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

    பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மொத்தம் உள்ள 234 தொகுதிகளும் 72 நிர்வாகிகளுக்கு பங்கிட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் தமிழ்நாட்டு வளர்ச்சியில் அனைவரும் பங்கெடுப்போம். மக்களிடம் இருந்து மக்களுக்காகஎன்ற கோஷத்தோடு மக்களிடம் நேரடியாக கருத்து கேட்கும் பிரசார பயணத்தை இன்று தொடங்குகிறது.

    இதன் தொடக்க விழா இன்று அமைந்தகரை அய்யாவு மகாலில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் இந்த கருத்து கேட்பு வாகனத்தை தொடங்கி வைக்கிறார். மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த வாகனம் தமிழ்நாடு முழுவதும் செல்லும். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன தேவைகள்? மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பதை கேட்டறிந்து அதன் அடிப்படையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.

    புதுவையிலும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க. சார்பில் மக்களி டம் கருத்துக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காகப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த படிவத்தை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா புதுவை கடற்கரை காந்தி திடல் அருகே இன்று மாலை வெளியிடுகிறார்.

    உங்களின் விருப்பம், எங்களின் வாக்குறுதி எனும் தலைப்பில் இந்த படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் கருத்து தெரிவிப்பவரின் பெயர், தொகுதி, தொலைபேசி எண் உட்பட விவரங்கள் அடங்கியிருக்கும். இந்தப் படிவத்தில் இருந்து வரும் கருத்துகளின் அடிப்படை யில்தான் தேர்தல் வாக்குறுதி அமையும் என கூறப்படுகிறது.

     

    ×