என் மலர்tooltip icon

    சென்னை

    • கோவையில் செம்மொழி பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
    • ஈரோட்டில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

    வருகிற 25-ந்தேதி கோவையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும் அன்றைய தினமே கோவையில் செம்மொழி பூங்காவையும் திறந்து வைக்கிறார்.

    இதனை தொடர்ந்து 26-ந்தேதி ஈரோடு- மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தீரன் சின்னமலையின் மணிமண்டபத்திற்கு சென்று மலர் தூவி மரியதை செலுத்துகிறார். மேலும் ஈரோட்டில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    • இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.
    • எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இராஜேந்திரனை சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. நிலத்தகராறுக்கு கூட ஆளும்கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மோசமடைந்திருப்பதை பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு? என்ற வினா தான் எழுகிறது.

    திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டும் தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை பழிவாங்கத் துடிப்பதில் காட்டும் அக்கறையையும், செலவிடும் நேரத்தையும் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால் இத்தகைய படுகொலைகளை தடுத்திருக்க முடியும். ஆனால், திமுக காவல்துறை அதற்கு தயாராக இல்லை.

    திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    கடந்த சில வாரங்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான சு.சக்கரவர்த்தியை அதே பகுதியைச் சேர்ந்த சமூகவிரோதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.

    தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனாலும், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது. தங்களைக் காக்கத் தவறிய திமுகவுக்கு வரும் தேர்தலில் சரியான தண்டனையை தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள் என்று கூறியுள்ளார். 

    • இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

    சென்னை:

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 



    • மக்கள் சந்திப்புக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.
    • கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக த.வெ.க. தெரிவித்துள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார்.

    அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.

    தொடர்ந்து கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த பொதுக்குழுவில் மீண்டும் த.வெ.க. பயணம் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயத்தமானார். இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளித்தார்.

    இந்த பயிற்சி சென்னையை அடுத்த செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்தநிலையில், விஜய் சேலத்தில் இருந்து டிசம்பர் 4-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக 3 இடங்கள் தேர்வு செய்து போலீசாரிடம் வழங்கப்பட்டது. ஆனால் தீப திருவிழா மற்றும் சில பாதுகாப்பு காரணங்களால் வேறு ஒரு தேதியில் பிரசாரத்தை வைத்துக்கொள்ள போலீசார் அறிவுறுத்தினர்.

    இதற்கிடையே, நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.

    குறிப்பாக இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மக்கள் சந்திப்புக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.

    இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக த.வெ.க. தெரிவித்துள்ளது. காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

    இதனை தொடர்ந்து 11 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பிற்கான திட்டத்தை த.வெ.க.வினர் தயாரித்து விட்டதாகவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அந்தந்த மாவட்டங்களில் நலிவடைந்த பிரிவினரை மாவட்ட வாரியாக உள்ள அரங்குகளில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 460-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • நேற்று குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 18-ந்தேதி குறைந்து, 19-ந்தேதி உயர்ந்த நிலையில், நேற்று முன்தினம் விலை சரிந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 460-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இதனை தொடர்ந்து வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630-க்கும் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,040 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 172 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,680

    20-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,000

    19-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

    18-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,200

    17-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-11-2025- ஒரு கிராம் ரூ.169

    20-11-2025- ஒரு கிராம் ரூ.173

    19-11-2025- ஒரு கிராம் ரூ.176

    18-11-2025- ஒரு கிராம் ரூ.170

    17-11-2025- ஒரு கிராம் ரூ.173

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!
    • கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

    சென்னை:

    மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை கொண்டு வருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில்,

    தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!

    கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

    அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்!

    அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்! என்று கூறியுள்ளார். 

    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
    • சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கௌதம், நிரஞ்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.

    ரவுடி விஜயகுமாரை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் விஜயகுமார் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கௌதம், நிரஞ்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

    • கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சிறப்பு ரெயில்கள் மட்டுமின்றி, கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.

    தெற்கு ரெயில்வேயைப் பொறுத்தவரையில், கடந்த 2 ஆண்டுகளைவிட நடப்பாண்டில் அதிகளவு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்கு ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 7 மாதங்களில் ரெயில்களில் 5 ஆயிரத்து 436 கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.22.97 கோடி வருவாய் கிடைத்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு.
    • தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பவாரியா கொள்ளையர்களால் அதிமுக எம்எல்ஏ சுதர்சமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    மேலும், குற்றவாளிகள் மூவருக்கான தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2005ம் ஆண்டில் கும்மிடப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் நுழைந்து அவரைக் கொன்று கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் .... தேதி அன்று தானாகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

    சுதர்சனத்தை கொன்று அவரது மனைவி, மகன்களை தாக்கி 62 சவரவன் தங்க நகைகளை பவாரியா கொள்ளையர்கள் திருடி சென்றனர். சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

    பிடிபட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமினில் தலைமறைவான நிலையில் 2 பேர் சிறையில் உயிரிழந்தனர். இதில், மீதமுள்ள 4 பேரில் மூன்று பேரான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுதர்சனத்தை கொன்று கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் பின்னணியை வைத்து உருவானதே தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னையில் மக்கள் சந்திப்பை நடத்த இடம் தேர்வு செய்துள்ளார்.
    • விஜய் புதிய பாணியில் மீண்டும் அதிரடி பிரசாரம் செய்து மக்களின் ஆதரவை திரட்ட உள்ளார்.

    வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் த.வெ.க. விஜயின் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில்,

    விஜய் பிரசாரத்துக்கு முந்தைய நாள் 3-ந் தேதி கார்த்திகை தீபம் விழாவுக்காக திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் செல்வார்கள். அதே போல் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

    எனவே நீங்கள் கேட்கும் நாளில் அதாவது டிசம்பர் 4-ந்தேதி விஜய் பிரசார கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் விஜயின் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் நீங்கள் உங்கள் தலைமையை தொடர்பு கொண்டு வேறு தேதியை முடிவு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுங்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். மேலும் இனி வரும் காலங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 4 வாரங்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

    இதற்கிடையே சேலத்தில் விஜயின் தேர்தல் பிரசார கூட்டம் தள்ளிப் போவதால் அதற்கு முன்பு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் முடிவு செய்தார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் விஜயை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார். சென்னையில் இந்த மக்கள் சந்திப்பை நடத்த இடம் தேர்வு செய்துள்ளார்.

    சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு நடக்கிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்களை விஜய் சந்திக்கிறார். இதன் மூலம் விஜய் புதிய பாணியில் மீண்டும் அதிரடி பிரசாரம் செய்து மக்களின் ஆதரவை திரட்ட உள்ளார்.

    தமிழகத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வெளியிடப்படாமல் கோர்ட்டு பரிசீலனையில் உள்ளது. இதனால் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி உள் அரங்கில் நடக்கிறது.

    • புரட்சி வெடிக்கும் என பதிவிட்டு பின்னர் டெலிட் செய்திருந்தார் ஆதவ் அர்ஜூனா.
    • ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டுதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவுகளில் வழக்கு.

    தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    போராட்டம் வெடிக்கும் என எக்ஸ் தளத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.

    கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டிலும் இளைஞர்களின் புரட்சி வெடிக்கும் என பதிவிட்டு பின்னர் டெலிட் செய்திருந்தார் ஆதவ் அர்ஜூனா.

    இதனால், ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டுதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவுகளில் பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 

    ×