என் மலர்
சென்னை
- அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே?
- இதற்கு பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை தமிழ்நாடு காவல்துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா? அதற்காக தி.மு.க. அரசு காவல்துறையை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
சனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே? அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள்வரை அனைவருமே மக்களுக்கு தொண்டு செய்யும் சேவர்கள்தான் எனும்போது மக்களுக்கு உதவிசெய்வதை, அதுவும் எதிர்பாராத விபத்தில் சிக்கி நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததை தடுத்து நிறுத்தி தி.மு.க. அரசின் காவல்துறை தாக்கியது ஏன்?
உண்மையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருக்க வேண்டியது நல்ல அரசின் முழுமுதற் கடமையாகும். தி.மு.க. அரசு செய்யத்தவறியதை ஓர் அரசியல் இயக்கத்தினர் தாமாக முன்வந்து உதவினார்கள் என்றால் அதை தட்டிகொடுத்து பாராட்ட வேண்டுமே தவிர, தடுத்துநிறுத்தி, தாக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.
பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என்றால் கூட எங்கள் பெயரை ஒட்டி நாங்கள் மட்டும்தான் செய்ய வேண்டும், நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை? இதற்கு பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா? இதுதான் தி.மு.க. பெற்றுத்தந்த சமூக நீதியா?
தி.மு.க. அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்!
ஆகவே, த.வெ.க பெண் நிர்வாகிகளை தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமெனவும், மக்களுக்கு உதவுதைக்கூட தடுத்து தாக்கும் இதுபோன்ற கொடுமைகள் தொடரா வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாட்டு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 6-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 21, 22-ந்தேதிகளில் விலை அதிகரித்து, 23-ந்தேதி விலை குறைந்தது. அதேபோல், 24, 25-ந்தேதி உயர்ந்து, நேற்று முன்தினம் குறைந்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று மீண்டும் உயர்ந்திருக்கிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 995-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து 6-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,960
26-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,600
25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
24-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
23-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-05-2025- ஒரு கிராம் ரூ.111
26-05-2025- ஒரு கிராம் ரூ.111
25-05-2025- ஒரு கிராம் ரூ.111
24-05-2025- ஒரு கிராம் ரூ.111
23-05-2025- ஒரு கிராம் ரூ.111
- அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
- தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
இதுதவிர தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதன் காரணங்களால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும்
அந்தவகையில், இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல் வாரத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டாலும், அதனைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது.
- சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது.
சென்னை:
தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 4-ந் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. இந்த ஆண்டு வெப்ப அலை தமிழ்நாட்டில் இருக்காது. வெப்பத்தின் தாக்கமும் வழக்கத்தைவிட குறைந்தே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கேற்றாற்போல், முதல் வாரத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டாலும், அதனைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது.
இதற்கிடையில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கியதால், தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழையும் பதிவாகி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெப்பம் தணிந்தே காணப்படுகிறது.
அதிலும் நேற்றைய வெயில் அளவை பார்க்கையில், தொண்டியில் மட்டும் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. மற்ற இடங்களில் எல்லாம், இயல்பைவிட 1 டிகிரி முதல் 6 டிகிரி வரை வெப்பம் குறைந்து இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்த காலகட்டங்களில் சுட்டெரிக்கக் கூடிய பகுதிகளான வேலூர், திருப்பத்தூரில் நேற்று இயல்பைவிட 6 டிகிரி குறைந்து வெப்பம் பதிவானது. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழையும் பெய்தது.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தொடங்கிய கத்திரி வெயில் சுட்டெரிக்கும் வெப்பம் என எந்த ஆரவாரமும் இல்லாமல் வழக்கம்போல இன்றுடன் விடைபெறுகிறது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக ஈரோடு, கரூர், மதுரை, வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவானது. கடந்த ஆண்டில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானது உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கத்திரி வெயில் காலத்தில் வெப்பத்தின் அளவு குறைந்தே இருக்கிறது. இருந்தாலும் உஷ்ணத்தால் சில நாட்கள் மக்கள் அசவுகரியத்தை சந்தித்தனர்.
- 120 அடி உயரத்தில், அந்தரத்தில் தொங்கிய பொதுமக்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
- தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசாரும், துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சென்னை:
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் உள்ளது. இந்த ராட்டினம் செங்குத்தாக மேலே சென்று கீழே இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 7 மணி அளவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த ராட்டினத்தில் ஏறி இருந்தனர். ராட்டினம் சுமார் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேலேயே நின்று விட்டது.
இதனால் 120 அடி உயரத்தில், அந்தரத்தில் தொங்கிய பொதுமக்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். இதைப்பார்த்து கீழே நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தொழில்நுட்ப கோளறாரை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் அந்தரத்தில் தொங்கியவர்களில் சிலர், நடந்த சம்பவம் குறித்து தங்களது செல்போன் மூலம் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசாரும், துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தவர்களை 'பிராண்டோ லிப்ட்' மூலமாக மீட்டனர். 3 மணி நேரத்துக்கு பின்னர் அவர்கள் கீழே வந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பொழுதுபோக்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நீலாங்கரை காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், பொழுதுபோக்கு மையத்தை தற்காலிகமாக மூட அதன் நிர்வாகத்திற்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
- திருவண்ணாமலை கோவிலின் பெயர் அருணாசலேசுவரர் கோவில் என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
- பல நூற்றாண்டுகளாகவே பக்தர்கள் அண்ணாமலையார் கோவில், அருணாசலேசுவரர் கோவில் ஆகிய பெயர்களில் அழைத்து வருகின்றனர்.
சென்னை:
திருவண்ணாமலை கோவிலின் பெயர் படிப்படியாக அருணாசலேசுவரர் கோவில் என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இது முற்றிலும் பொய்யான தகவல். திருவண்ணாமலை கோவில் இணை கமிஷனர் அளித்துள்ள விளக்கத்தில், ''1940-ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜக் காரியதரிசி ம.பாலசுப்பிரமணியனால் எழுதப்பட்ட 'திருவண்ணாமலை வரலாறு' என்ற நூலில் இந்த கோவிலின் பெயர் ஸ்ரீ அருணாசலேசுவரர் தேவஸ்தானம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகவே பக்தர்கள் அண்ணாமலையார் கோவில், அருணாசலேசுவரர் கோவில் ஆகிய பெயர்களில் அழைத்து வருகின்றனர். கோவில் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது" என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை போலீஸ்காரர் பிடித்து இழுத்ததால் கீழே விழுந்த குழந்தை மீது வேன் மோதி உயிரிழந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிகழ்ந்தது. ஆனால், இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக பரவிய பதிவுக்கும், தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
- பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர்.
- போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. அப்போது, ஞானசேகரனுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஞானசேகரன் சார்பில் ஆஜராக வக்கீல்கள் கோதண்டராமன், ஜெயபிரகாஷ் ஆகியோரை சட்டப்பணி ஆணைக்குழு நியமித்தது.
கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி கடந்த வாரம் உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பிக்க உள்ளார்.
- கடந்த ஆண்டு 2.55 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
- இந்த ஆண்டு கால அவகாசம் முடிவடைவதற்கு 10 நாட்கள் முன்னதாகவே கடந்த ஆண்டு எண்ணிக்கையை தாண்டியுள்ளது.
ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பிற்கு மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இதற்கான காலஅவகாசம் இன்னும் 10 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது 2.55 லட்சம் பேர் விண்ணப்பத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு மொத்தமாக 2.53 லட்சம் மாணவ-மாணவிகள்தான் விண்ணப்பித்திருந்தனர். தற்போது 10 நாட்களுக்கு முன்னதாகவே கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களை விட எண்ணிக்கை தாண்டியுள்ளது.
- நெல் கொள்முதல் பொறுப்பை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவுனத்திற்கு தரைவார்ப்பு.
- அது தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற தனியார் அமைப்புடன் உடன்பாடு செய்து கொண்டது.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உழவர்களிடம் ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான விலையை இரு மாதங்களுக்கும் மேலாக உழவர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் சார்பில் நெல் கொள்முதல் செய்த தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, அவற்றைக் காப்பாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் அந்தப் பொறுப்பை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு தாரை வார்த்ததுதான் இப்போது ஏற்படிருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும்.
இதுகுறித்த செய்திகள் கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் வெளியான போதே, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. நிறுவனர், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாகவே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
அதை செய்திருந்தாலே இப்போது ஏற்பட்டிருக்கும் அவல நிலையை தடுத்திருக்க முடியும். ஆனால், அதை செய்யாத உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் 2014-ஆம் ஆண்டிலிருந்தே நெல் கொள்முதலில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த நிறுவனம் மிகச்சிறப்பாக செயல்படும் என்றும் சான்றிதழ் அளித்தார்.
அவ்வாறு அமைச்சரால் சான்றிதழ் அளிக்கப்பட்ட நிறுவனம்தான் உழவர்களிடமிருந்து ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து விட்டு, அதற்கான பணத்தைக் கொடுக்காமல் அப்பட்டமாக ஏமாற்றி வருகிறது. இதை பா.ம.க.வால் சகித்துக்கொள்ள முடியாது.
தமிழக அரசால் நெல் கொள்முதல் அதிகாரம் அளிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் இல்லை. அதனால் அது தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற தனியார் அமைப்புடன் உடன்பாடு செய்து கொண்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் ரூ.500 கோடிக்கு தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் செய்திருக்கிறது.
அதன்பின் இரு மாதங்களாகியும் நெல்லுக்கான கொள்முதல் விலை உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் கடந்த 20-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்பட்டும் கூட, உழவர்களுக்கு நிலுவையை பெற்றுத் தர அரசு முன்வரவில்லை.
உழவர்களிடமிருந்து மொத்தம் ரூ.811 கோடி மதிப்புள்ள 33.11 லட்சம் குவிண்டால் நெல்லை கொள்முதல் செய்த தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு, அதில் ஒரு பகுதியை தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாரியத்திற்கு வழங்கி, அதற்காக இன்று வரை ரூ.210 கோடியை பெற்றுள்ளது.
ஆனால், அந்தத் தொகை இன்னும் உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சம் குவிண்டால் நெல் நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வழங்கப்படாமல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.
உழவர்களிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு செய்த ஊழலுக்கும், அதனால் உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் மட்டும்தான் செய்ய வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் 8 மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யும் உரிமையை தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் வாயிலாக தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டது பெரும் தவறு ஆகும். அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு உழவர்களிடம் நெல்லை கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகளை செய்வதாகவும், உழவர்களுக்கு பணம் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது அதை விட பெரும் தவறு. இதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
இப்போதும் கூட உழவர்களிடமிருந்து ரூ.811 கோடிக்கு நெல்லை கொள்முதல் செய்து விட்டு, அதற்கான பணத்தை வழங்காத தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர்களுக்கு துரோகம் செய்த மோசடி அமைப்பை தமிழக அரசு பாதுகாப்பதற்கான காரணம் என்ன? அந்த அமைப்புக்கு நெல் கொள்முதல் உரிமை வழங்கப்படுவதற்கு மறைமுகமாக உதவிய சக்தி எது? அந்த அமைப்பின் மீது ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு பாசம் ஏன்?
தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் வாயிலாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்ட நெல்லுக்கு பணம் கிடைக்காததால், லட்சக்கணக்கான உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலையில், பல உழவர்கள் தற்கொலை செய்து கொள்ள முயன்று காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சிக்கலில் தமிழக அரசு இனியும் வேடிக்கப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் நெல் வழங்கிய உழவர்கள் அனைவருக்கும் அதற்கான தொகையை தமிழக அரசே நேரடியாக வழங்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் உழவர்களிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாரியம் மட்டும் தான் நெல்லை கொள்முதல் செய்யும் என்ற கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் உழவர்களைத் திரட்டி எனது தலைமையில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம் காலியாகிறது.
- அதிமுக சார்பில் 2 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
ஒரு எம்.பி.யை தேர்வு செய்த 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதன்படி அதிமுக இரண்டு எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலங்களவை எம்.பி.யாக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக-விடம் மாநிலங்களவை சீட் கேட்பீங்களா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் பதில் அளிக்கையில் மாநிலங்களவை தேர்தல், தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். எங்களிடம் 4 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். தற்போது கூட்டணியில் உள்ளோம். அதிமுக-வுக்கு ஆதரவு என தலைமை கூறினால், அதிமுக-வுக்கு ஆதரவு கொடுப்போம்" என்றார்.
- இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
- வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் மிரட்டில் வெறும் புரளி எனக் கண்டுபிடிப்பு.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மர்ம் நபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், தூதரகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த மர்ம் நபர்கள் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்.
பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் ஒரு மேல் சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தி.மு.க. கூட்டணிக்கு சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் 4 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அதுபோல அ.தி.மு.க. கூட்டணி 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.
மக்களவை தேர்தலின்போது அதிமுக கூட்டணில் தேமுதிக அங்கம் வகித்தது. அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவதாக உறுதி அளித்ததாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். ஆனால் அப்படி உறுதி அளிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டயில் தேமுதிக இடம் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்பினால், மாநிலங்களவை எம்.பி. பதவியை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் எடப்பாடி பழனிசாமி எந்த வகையான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவி குறித்து பிரேமலதா விஜயகாந்த கூறுகையில் "பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்" என்றார்.






