என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெரம்பூரில் லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சென்னையில் விதிகளை மீறியதாக 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்பட்டதால் அபராதம் விதித்தும், வழக்கு பதிந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 12 மணிக்கு மேல் மாநகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. 

    • 811 கோடி ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு, பணத்தை பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளைத் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
    • ஒன்றிய பா.ஜ.க. அரசை வெளியில் எதிர்ப்பது போல் கபட நாடகம் நடத்தும் தி.மு.க அரசு.

    த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நலத் திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் இருண்ட தி.மு.க அரசுக்கு வெற்று விளம்பரம் செய்யப்படுகிறது!

    ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

    'கருவறை முதல் கல்லறை வரை...' அலட்சியமும் ஊழலும் மலிந்து போன, நிர்வாகத் திறனற்ற 'விளம்பர மாடல்' ஆட்சியாகத்தான் தி.மு.க. அரசு திகழ்கிறது. அதன் காரணமாகவே ஆண்டு முழுதும், 'நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த... அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாயிகள், ஒவ்வொரு வட்டத்திலும் மாவட்டத்திலும் தொடங்கி, தலைநகர் சென்னை வரையிலும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தித் தமிழக அரசை எதிர்த்துத் தினமும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    அதன் ஒரு பகுதிதான், நெல் விவசாயிகள் வயிற்றில் நேரடியாக அடித்து, அவர்களின் வாழ்வைப் பறித்த நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள்.

    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஏற்ற - இறக்க, எடைபோட்டுக் கட்ட, மூட்டைகளாகப் பிரிக்க என அனைத்து வேலைகளுக்கும் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு கட்டமாக விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதையும் கடந்து, வேறு வழியில்லாமல் லஞ்சமும் கொடுத்து, தாங்கள் விற்பனை செய்த நெல்லுக்கு உரிய பணத்தையும் கேட்டு மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    811 கோடி ரூபாய்க்கு நெல்லைக் கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளைத் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய பா.ஜ.க. அரசை வெளியில் எதிர்ப்பது போல் கபட நாடகம் நடத்தும் தி.மு.க அரசு, அவர்கள் உருவாக்கிய தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (National Co-Operative Consumer's Federation of India Private Limited) என்ற நிறுவனத்திற்கு நெல்லைக் கொள்முதல் செய்யும் அனுமதியை வழங்கியதே இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.

    இந்தத் தகவல் வெளியான போதே டெல்டா மாவட்ட விவசாயிகள், 'தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு, அரசின் பொதுத்துறை நிறுவனமோ... கூட்டுறவு அமைப்போ அல்ல! அது தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்கள், லாரி ஒப்பந்தக்காரர்கள் அடங்கிய தனியார் கூட்டமைப்பு. அவர்களிடம் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான எந்த உள்கட்டமைப்புகளும் இல்லை; அப்படிப்பட்ட அமைப்புக்குத் தமிழக அரசு அனுமதி அளிப்பதால், நெல் கொள்முதல் என்பது நாளடைவில் முழுக்க முழுக்கத் தனியார்மயமாகிவிடும்; நெல்லுக்கு உரிய ஆதார விலை கிடைக்காது; விற்பனை செய்த நெல்லுக்குரிய பணமும் கிடைக்காது என எச்சரித்துப் போராட்டங்களில் இறங்கினர்.

    அதோடு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைத் தமிழக அரசு நாளடைவில் இழந்துவிடும் என்றும் எச்சரித்தனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சமாதானப்படுத்திய தி.மு.க. அரசு, டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு நெல்லைக் கொள்முதல் செய்யும் அனுமதியை வழங்கியது.

    விவசாயிகள், விவசாய சங்கத்தினர் எச்சரித்ததைப் போலவே, எந்த உள்கட்டமைப்பு வசதியும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாட்டில் தனியார் ஏஜென்டுகளை நியமித்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கொள்முதல் செய்த நெல்லுக்கான விலையை விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை.

    விவசாயிகளிடம் கொள்முதல் செய்த ஏஜென்டுகளிடம் கேட்டால், 'எங்களுக்குப் பணம் வந்தால் உங்களுக்குத் தருகிறோம்' என அலட்சியமாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக எத்தனை விவசாயிகளிடம், எவ்வளவு நெல்லைத் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் கொள்முதல் செய்தது என்பதற்கான விபரங்களே தங்களிடம் இல்லை என்று துறை அதிகாரிகள் கூறியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    மோசடி தி.மு.க அரசு 'திருடனுக்குத் தேள் கொட்டியது போல்' திகைத்துப் போய் இருக்கிறது. இது ஒருபக்கம் என்றால், "ம் என்றால் சிறைவாசம்..." ஏன் என்றால் வனவாசம்...' என்ற அதிகார மமதையில், அடக்குமுறைகளை ஏவி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் துயர் துடைப்போம்" என்று உறுதி கொடுத்துவிட்டு, இன்று அந்த விவசாயிகளையே கண்ணீர் விட வைத்திருக்கும் கபட நாடக ஆட்சியாகத் தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

    எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக உள்ள பி.ஆர்.பாண்டியன் அவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு எல்லாம் ஓடிவந்து குரல் கொடுத்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்றைய முதலமைச்சர், இன்று அதே பி.ஆர். பாண்டியன் அவர்கள் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தடுப்பதோடு, அவர்களின் குரல்வளையை நெரிக்கும் பாதகச் செயலையும் செய்கிறார். ஆனால், 811 கோடி ரூபாய் வரை நெல் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என்றும் அதில் முதலமைச்சருக்குப் பங்கிருக்கிறதா? எனவும் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையிலான விவசாயிகள் எழுப்பும் கேள்விக்கு, முதலமைச்சரின் பதில் என்ன?

    நெல் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.சண்முகசுந்தரம் அவர்களை அந்தப் பொறுப்பில் இருந்து திடீரெனப் பணியிட மாற்றம் செய்தது ஏன்? எட்டுவழிச் சாலைக்காகப் போராடிய அருளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது முதல், விவசாயிகள் தங்கள் தாய் மடியாகக் கருதும் விவசாய நிலங்களைப் பரந்தூர் விமான நிலையத்திற்காகப் பறித்துக் கொண்டு, அந்த விவசாயிகளை ஓலமிடச் செய்தது வரை, ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரோத ஆட்சியாகத்தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது.

    தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் போராடும் விவசாயிகளைக் குற்றவாளிகளைப் போல் கைது செய்வது எந்த வகையில் நியாயம்?

    வெற்று விளம்பர ஆட்சியைப் போலவே விவசாயிகளுக்கான தனி நிதிநிலை அறிக்கையும் வெற்றுக் காகித அறிக்கையே தவிர வேறு என்ன?

    அடக்குமுறையைக் காட்டி விவசாயிகளை ஒடுக்க நினைத்தால். டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் எப்படி வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்து ஸ்தம்பிக்க வைத்தார்களோ... அதே நிலை தமிழகத்திலும் நடைபெறும்.

    அதற்கான முன்னோட்டம்தான். நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து இன்றைக்கு நடைபெறும் போராட்டங்கள்.

    உடனடியாகத் தமிழ்நாடு அரசு விவசாய விரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு நெல் விவசாயிகளுக்கு உரிய தொகையைப் பெற்றுத் தர வேண்டும்: இனி வரும் காலங்களில் முன்பிருந்ததைப் போல், தமிழக அரசே நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும். அதில் லஞ்சம் ஊழல் உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகள் நடைபெறாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
    • கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். டாஸ்மாக்கில் நடந்ததாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். சோதனையின்போது தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    டாஸ்மாக் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.

    சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    • பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!
    • “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்!

    உலக அகதிகள் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் உலகெங்கிலும் உள்ள அகதிகளை கௌரவிக்கும் ஒரு சர்வதேச தினமாகும். உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ந்தேதி நினைவுகூரப்பட்டு வருகின்றது.

    இந்தநிலையில் உலக அகதிகள் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!

    மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்!

    நமது #DravidianModel-இல் "அகதிகள் முகாம்" என்பதை "மறுவாழ்வு முகாம்" எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்!

    போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பறக்கும் ரெயில் திட்டம் முழுமை அடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மெட்ரோ ரெயில் திட்டத்துடன் இணைக்க வழிவகை காணப்படும்.
    • ஆலந்தூர் மெட்ரோ-பறக்கும் ரெயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பறக்கும் ரெயில் திட்டத்துடன் இணைக்க பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

    அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்தும் பேசினார்.

    இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். இது தொடர்பாக மனுவும் வழங்கினார்.

    அதில் உள்ள முக்கிய முன்னுரிமைகளில் சென்னை மெட்ேரா ரெயில் பறக்கும் ரெயில் திட்டம் இணைப்பை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பறக்கும் ரெயில் திட்டத்தில் வேளச்சேரி-ஆலந்தூர் இடையே 500 மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் பறக்கும் ரெயில் திட்டம் முழுமை அடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மெட்ரோ ரெயில் திட்டத்துடன் இணைக்க வழிவகை காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆலந்தூர் மெட்ரோ-பறக்கும் ரெயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • பஜவுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு என முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.
    • கீழடி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக ஐடி விங் கார்ட்டூன் வெளியிட்டது.

    கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள இன்னும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். பஜவுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு என முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.

    இந்த விவகாரத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக வாய் திறக்காதது குறித்து திமுக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கீழடி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக ஐடி விங் வெளியிட்ட கார்ட்டூனுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஐடி விங் செயலாளர், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில் தான். அதிமுக குறித்து அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது. அதிமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள். கீழடி குறித்து திமுகவுடன் விவாதிக்க தயார்" என தெரிவித்துள்ளார்.  

    • நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,265-க்கும், ஒரு சவரன் ரூ.74,120-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்தது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது.

    இதனையடுத்து கடந்த 16, 17-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக மீண்டும் விலை அதிகரித்தது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,265-க்கும், ஒரு சவரன் ரூ.74,120-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,210-க்கும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்தது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    19-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,120

    18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000

    17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600

    16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440

    15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    19-06-2025- ஒரு கிராம் ரூ.120

    18-06-2025- ஒரு கிராம் ரூ.122

    17-06-2025- ஒரு கிராம் ரூ.120

    16-06-2025- ஒரு கிராம் ரூ.120

    15-06-2025- ஒரு கிராம் ரூ.120

    • இன்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து புறப்பட்டது.
    • முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இன்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து மதுரை கிளம்பிய இண்டிகோ விமானம் புறப்பட்டவுடன் மீண்டும் சென்னையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விமானி சுமார் அரை மணி நேரம் பறந்த பிறகு கோளாறைக் கண்டறிந்து, திரும்பிச் செல்ல அனுமதி கோரியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில் 68 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

    • கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 விமானம் தரையிறங்க இருந்தது.
    • இந்த விவகாரம் குறித்து விமானி புகார் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 4வது முறையாக இன்று தரையிறங்கயிருந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.

    இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.

    லேசர் ஒளி மறைந்த பிறகு விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். இதன் பின் இந்த விவகாரம் குறித்து விமானி புகார் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பயணிகளின் வசதிக்காக வாரநாட்களில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரெயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது.

    எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காகவும், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏறுவதற்கு தாம்பரம் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் வாரநாட்களில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் ஆகஸ்டு 18-ந்தேதி வரையில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரை செல்லும்.

    * கடற்கரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக அதிகாலை 4.25 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும்.

    * செங்கல்பட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 10.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    * கடற்கரையில் இருந்து காலை 11.52 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக காலை 11.55 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும்.

    * கடற்கரையில் இருந்து மதியம் 12.02 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக மதியம் 12.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும்.

    *கடற்கரையில் இருந்து மதியம் 12.28 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக மதியம் 12.25 மணிக்கு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும்.

    * அரக்கோணத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயில், காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மேற்கண்ட ரெயில்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரநாட்களில் இயக்கப்படும் ரெயில்கள் ஆகும்.

    * ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரெயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை கடற்கரை-தாம்பரம் இருமார்க்கமாக கூடுதலாக ஒரு சிறப்பு ரெயில் மட்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரைக்கும், மறுமார்க்கமாக கடற்ரையில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரத்திற்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • தேசத்திற்கு சேவை செய்யும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தேசத்திற்கு சேவை செய்யும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது.
    • மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதிலும் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உயரும் என சொல்லப்பட்டது.

    அதன்படி, மதுரை விமான நிலையம் 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்), மதுரை நகரம் 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்), கடலூர் 100.93 டிகிரி (38.3 செல்சியஸ்), பரங்கிப்பேட்டை 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), திருச்சி 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்), ஈரோடு 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்) ஆகிய 7 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. இதில் மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடல் காற்று நிலப்பகுதிக்குள் வராத காரணத்தினால் இந்த நிலை இருந்தது. ஆனால் நேற்று கடல் காற்று ஓரளவுக்கு வந்ததால், வெப்பம் சற்று குறைந்ததை உணர முடிந்தது.

    வருகிற 25-ந்தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும், அதன் பிறகு பகலில் வெப்பமும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

    ×