என் மலர்tooltip icon

    சென்னை

    • சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார்.
    • சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய் (வயது 21). சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

    பின்னர் அவர் தனது கல்லூரி நண்பர் அபிஷேக் என்பவருடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் பள்ளி சாலை அருகே வந்தபோது ஸ்கூட்டர் மீது அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு நிதின்சாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அபிஷேக் படுகாயம் அடைந்தார்.

    கார் மோதியதில் ஸ்கூட்டர் உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பலியான நிதின்சாய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    நிதின்சாய் மற்றும் அபிஷேக்கின் நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவால் இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

    இந்த கொலைக்கான பயங்கர பின்னணி வருமாறு:-

    கொலையான நிதின் சாயின் நெருங்கிய நண்பரான வெங்கடேஷ் என்பவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அவரது காதலை ஏற்காமல் கண்டித்து வந்துள்ளார். எனினும் வெங்கடேஷ் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அந்த மாணவி தனது நண்பரான பிரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர், வெங்கடேசனை நேரில் சென்று மிரட்டி உள்ளார். எனினும் அவரது மிரட்டலை வெங்கடேசன் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து பிரணவ் தனது நண்பர்களுடன் சொகுசு காரில் வந்துள்ளார். ஓட்டலை விட்டு வெளியே வந்தவுடன் வெங்கடேசனை பிரணவ் தரப்பினர் தாக்க முயன்றனர். அப்போது நிதின்சாயும், அபிஷேக்கும் அவர்களை தடுத்து நிறுத்தி வெங்கடேசனுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.

    இந்த சந்தர்ப்பத்தில் வெங்கடேசனின் கால் மீது பிரணவ் தரப்பினர் காரை ஏற்றி உள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த நிதின் சாய், அபிஷேக் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சொகுசு காரை சேதப்படுத்தி, நம்பர் பிளேட்டையும் உடைத்து எறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிரணவ் தரப்பினர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    அதன்பின்னர், நிதின்சாயும், அபிஷேக்கும் ஸ்கூட்டரில் ஒன்றாக சென்ற போதுதான் பிரணவ் தரப்பினர் காரில் பின்தொடர்ந்து வந்து வேகமாக மோதி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு போலீசார் வசம் வந்தது. கொலை வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரில் வந்தவர்கள், விபத்தில் நிதின்சாய் இறந்தது தெரியாமல் சிரித்தபடி எச்சரிக்கை விடுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சொகுசு காரை ஓட்டி வந்து நிதின்சாய் மீது மோதி கொலை செய்தது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துரு என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நிதின்சாயின் உறவினர்கள், நண்பர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து திருமங்கலம் உதவி கமிஷனர் பிரம்மானந்தன், இன்ஸ்பெக்டர் தீபக் ஆகியோர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். அதன்படி பிரணவ் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்துரு தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துருவை கைது செய்த திருமங்கலம் போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலாண்டு, அரையாண்டு தேர்வு: அட்டவணைகளை வெளியிட்ட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
    • பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

    சென்னை:

    2025 – 26-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

    2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18ல் தொடங்கி 26ம் தேதியில் காலாண்டுத் தேர்வு முடிவடைகிறது. செப்டம்பர் 27 முதல் 30-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 15-ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025 – 26-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின் (2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு.
    • தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    உலகப் புலிகள் நாளில் தமிழ்நாடு பெருமிதத்துடன் முழங்குகிறது!

    தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. இந்த வெற்றிக்குக் காரணம், கடினமான பகுதிகளில், முக்கியத்துவம் மிகுந்த புலிகளின் வாழிடங்களைப் பாதுகாக்கும் நமது வனத்துறைப் பணியாளர்களும், வேட்டைத் தடுப்பு அணியினரும்தான்.

    வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேம்படுத்திட, 1,947 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, வனத்துறையினருக்கு நவீன உடைகள், தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்படுகின்றன, கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அயல்-ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, புலிகளின் வாழிடங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. காடுகளின் வளம் மேம்படுத்தப்படுகிறது. கானுயிர் மீதான குற்றங்கள் புரியும் கும்பல்களை அடக்க, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது.
    • சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    20,088 இடங்கள் = பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு!

    சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது - இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்!

    சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள மெட்ரோ ரெயில் நிலைய தூணில் பயங்கரமாக மோதியது.
    • விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த கிஷோரும், ஏனோசும் தூக்கி வீசப்பட்டனர்.

    குரோம்பேட்டை அடுத்த அஸ்தினா புரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர்(வயது 17). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஏனோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அண்ணாநகரில் உள்ள நண்பர்களை பார்க்க புறப்பட்டார்.

    இரவு 10 மணியளவில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஆசர்கானா வளைவில் திரும்பினர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள மெட்ரோ ரெயில்நிலைய தூணில் பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கிஷோரும், ஏனோசும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஏனோசை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விபத்து நடந்து உள்ள இதே இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட் பார்த்து திரும்பியபோதும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மோதி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை மாநகராட்சி கழிப்பறைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • சென்னை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) கீழ் 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் உள்ள பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய ₹1,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்ட பிறகும், அவை பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இந்நிலையில், மீண்டும் பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சி ரூ.1,000 கோடியை செலவிட திட்டமிட்டுள்ளது

    சென்னை நகரத்தில் 1,260 இடங்களில் 10,000 பொது கழிப்பறை இருக்கைகளை சுத்தம் செய்தல், பராமரித்தல் மற்றும் கட்டுதல் ஆகியவற்றிற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) கீழ் 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

    ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் கழிப்பறைகளை 9 ஆண்டுகள் தனியார்மயமாக்க 430 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இது தவிர, மொபைல் கழிப்பறைகள், மின் கழிப்பறைகள் மற்றும் சிங்காரா சென்னையின் 'ஒப்பனை கழிப்பறைகள்' ஆகியவற்றைக் கட்டவும் பராமரிக்கவும் சுமார் 50 கோடி செலவிட்டுள்ளது.

    ரூ.1000 கோடி செலவு செய்த பின்னரும் சென்னை மாநகராட்சியில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக பயன்படுத்தப்பட முடியாத நிலையில் தான் உள்ளது. அப்படியெனில் இந்த 1000 கோடி ரூபாய் எங்கே போனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள்.
    • உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ’பாட்டிகளின் வடை கடைகள்’ வரலாற்றில் மட்டுமே இருக்கும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை ஆகும்.

    கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருவாயும், இலாபமும்

    தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்காக செய்யப்படும் தொழில் - வணிகத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

    கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள். அதேபோல், ஆதரவற்ற மூதாட்டிகள், பிறரை எதிர்பார்த்திருக்கக் கூடாது என்ற சுயமரியாதை உணர்வுடன் இடலி சுட்டு விற்பது, மாலையில் வடை சுட்டு விற்பது போன்ற தொழில்களை செய்வார்கள். இதற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது பெரும் அநீதி. இது அவர்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக அழித்து விடும்.

    கிராமப்புற கடைகள் உரிமம் பெறுவதுடன் மற்றும் இந்த நடவடிக்கை நின்று விடப் போவதில்லை. உரிமம் பெற்ற கடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் எந்த உதவியும் செய்யப்படாது. அதே நேரத்தில் உரிமம் வைத்திருப்பவர்களைத் தேடித் தேடி தொழில் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளில் உள்ளாட்சிகள் ஈடுபடும். வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அதையே காரணம் காட்டி, அந்த வீட்டுக்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற மின்வாரியம் முயலும்.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியையும், அதிகாரத்தையும் வழங்காமல் தன்னிடம் வைத்துக் கொள்ளும் திமுக அரசு, உள்ளாட்சிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும். இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 'பாட்டிகளின் வடை கடைகள்' வரலாற்றில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் இருக்காது. எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது.
    • சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சமக்ரா சிக்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாடு அரசு முன்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன.

    மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனை. இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

    சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.

    வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கும், ஒரு சவரன் ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    26-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    25-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    24-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-07-2025- ஒரு கிராம் ரூ.126

    27-07-2025- ஒரு கிராம் ரூ.126

    26-07-2025- ஒரு கிராம் ரூ.126

    25-07-2025- ஒரு கிராம் ரூ.128

    24-07-2025- ஒரு கிராம் ரூ.128

    • கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
    • ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவினும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இதனையறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். அதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின் விபத்தில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலியில் சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவினின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர்.

    சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவினின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான்.

    பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக தெரியவருகிறது.

    இந்த கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையில் பணியாற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர்களை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மேலும் அவர்கள் காவல்துறையில் பணியாற்றுவதால் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க சாதி வெறிக் கொலைகள், சாதிவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனையளிக்கிறது. ஆதிக்க சாதிவெறியாட்டத்தைத் தடுப்பதற்கு காவல்துறையில் ஒரு தனி நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறோம்.

    ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    கவின் செல்வகணேஷை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.
    • சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

    நவீனமும், அறிவியல் தொழில்நுட்பமும் உச்சப்பட்ச வளர்ச்சி பெற்றிருக்கும் தற்காலத்தில் நடந்தேறும் இத்தகைய ஆணவப் படுகொலைகள் நாகரீகச் சமுதாயத்தையே முற்றுமுழுதாகக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழினத்தின் ஓர்மையைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களும், கொடுங்கோல் செயல்பாடுகளும் ஒருநாளும் ஏற்புடையதல்ல. சக மனிதரின் உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல்கள் மனிதத்தன்மையே அற்றவை என்பதைத் தாண்டி, சாதியின் பெயரால் அவை நிகழ்த்தப்படுவது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கின்றன.

    ஒரு ஆணும், பெண்ணும் மனமொத்து விரும்பி, வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எதிராக சாதியை நிறுத்துவதும், அந்த சாதிக்காகப் பச்சைப்படுகொலைகளை செய்வதும் மிருகத்தனத்தின் உச்சமாகும். சமத்துவத்திற்கும், சமூக அமைதிக்கும் எதிரான இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகள் நம்மைக் கற்காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. ஆகவே, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் முற்றாக நிறுத்தப்பட ஆளும் ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. அந்தவகையில், சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றவும், மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.

    ஆகவே, தம்பி கவின்குமார் அவர்கள் ஆணவப் படுகொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அதற்குத் துணைபோன பெற்றோரையும் சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார்.
    • 4வது நாளாக சென்னை மதுரவாயலில் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணத்தை மேற்கொண்டார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் கடந்த 25ம் தேதி தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல்கிறார்.

    முதல் நாள் அன்று திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார்.

    சமூகநீதி, பெண்களுக்கான உரிமை, விவசாயம், வேலை வாய்ப்பு, நல்லாட்சி, கல்வி உரிமை, உணவு, வளர்ச்சி மற்றும் அடிப்படை சேவைகள் என 10 உரிமைகளை மீட்கும் நோக்கில் அன்புமணி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், அன்புமணி இன்று 4வது நாளாக சென்னை மதுரவாயலில் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணத்தை மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மின்சாரத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுகவினர் பொய் சொல்கிறார்கள். 541 வாக்குறுதியில் 60 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது.

    மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என கூறினார்கள். அதையும் செய்யவில்லை. மின்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற வருகிறது.

    இவ்வாறு குறிப்பிட்டார்.

    ×