என் மலர்
சென்னை
- 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
- ரூ. 11.69 கோடியில் அறிவியல் ஆய்வகத் திட்டம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்.
அதற்காக தமிழ்நாடு மாநிலக் கொள்கையைப் புதிதாக வடிவமைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு புதிய வரலாறு படைக்க இருக்கும் தமிழ்நாடு அரசின் புதிய இந்த மாநிலக் கல்விக் கொள்கை 2025 தமிழ்நாடு முதலமைச்சரால் 8.8.2025 அன்று வெளியிடப்பட்டு கல்வியாளர்களால் வரவேற்கப்படுகிறது.
இல்லம் தேடிக் கல்வி கொரோனா காலக்கற்றல் இடைவெளியை நிறைவு செய்திடும் நோக்கில் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் அறிமுகப்படுத்திய திட்டம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
2025–- 2026-ம் கல்வியாண்டில் 34 ஆயிரம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் 5.986 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் 37,767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 25.08 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.
28,067 அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100 Mbps வேகமான இணைய வசதி வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 6,540 அரசுப் பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தகைசால் பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரிப் பள்ளிகள் ரூ.352.42 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 28 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக ரூ.100.82 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.455.32 கோடி செலவில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு ஆற்றல்கள் வளர்க்கப்படுகின்றன.
தொழிற்கல்வி கற்பிக்கும் 726 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்புத் திட்டமாக 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு ஆசிரியர்களுக்குப் பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இணைய வழி மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
ரூ.3,117 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ரூ. 11.69 கோடியில் அறிவியல் ஆய்வகத் திட்டம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கணினி அறிவியல் பாடத் தனிக் கட்டணம் ரத்து, மகிழ் முற்றம், ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம், மாணவர்கள் ஆசிரி யர்களை ஊக்கப்படுத்தும் வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா திட்டம், ரூ.658.17 கோடி நிதியுடன் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி - திட்டத்தின் முன்னேற்றம் அரசுப் பள்ளிகளில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
11-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தனித்தேர்வர்களுக்கான தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்றிதழ்கள் இணையவழியில் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 12,000 அலுவலர்களுக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் என மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்ய ஆணை வெளியடப்பட்டன.
கணினி வழியாக போட் டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,043 முதுகலை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. 97 வட்டாரக் கல்வி அலுவலர் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியி டங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள குறைதீர்க்கும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 -ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், திறன்மிகு வகுப்ப றைகள், காலை உணவுத் திட்டம், புதிய ஆசிரியர் நியமனங்கள், கல்விச் சுற்றுலா திட்டம் முதலிய பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதால் சிறந்த தரமான பள்ளிக் கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்கிறார்.
சென்னை:
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணமாக கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வருகிற செப்டம்பர் 9-ந் தேதி புதிய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர கவர்னரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான ஆந்திராவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். 2 பேருமே தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் மாநிலம் வாரியாக தனித்தனியாக சென்று கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சி சமூக நீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பது நம் கடமை என கூறி இருந்தார்.
இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கவும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டவும் சுதர்சன் ரெட்டி முடிவு செய்து இருந்தார்.
அதன்படி சுதர்சன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், திருச்சி சிவா, வழக்கறிஞர் வில்சன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் விமான நிலையம் சென்று சுதர்சன் ரெட்டியை வரவேற்றனர்.
அங்கிருந்து காரில் புறப்பட்ட சுதர்சன் ரெட்டி சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார். இன்று மாலை 5 மணி அளவில் அக்கார்டு ஓட்டலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் செல்கிறார்கள். சுதர்சன் ரெட்டியை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்கிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தந்த கட்சி எம்.பி.க்களும் பங்கேற்கிறார்கள். பின்னர் அங்கு நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர்.
- முதலமைச்சரை 'ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
- 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் விமர்சித்ததை ஏற்க முடியாது.
மதுரையில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். குறிப்பாக முதலமைச்சரை 'ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சித்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதியுடன் விஜய் குடும்பம் நல்ல உறவுமுறையில் இருந்தவர்கள்தான்.
* 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் விமர்சித்ததை ஏற்க முடியாது.
* த.வெ.க. தொண்டர்கள் மெச்சூரிட்டி ஆன நிலையில், விஜய் விசிலடிச்சான் குஞ்சுகளாகி விட்டாரா?
* கட்சி ஆரம்பித்த காரணத்திற்காகவே வசைபாடுவது ஏற்கத்தக்கதா என விஜய் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
- நிச்சயதார்த்தம் முடித்து திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
- தர்ஷனின் வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தர்ஷன். 26 வயதான இவர், பாரிமுனையில் ஹார்டுவேர்ஸ் டீலர்ஷிப் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியில் வசித்து வந்த ஹாசிதா என்ற 25 வயது இளம்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இதையடுத்து அண்ணாநகரில் உள்ள ஓட்டலில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஹாசிதா மாற்றுத்திறனாளி ஆவார். சிறுவயது முதலே இடதுகால் ஊனமுற்ற நிலையில் இருந்து வந்தார். இதுபோன்ற சூழலில் தான் நிச்சயதார்த்தம் முடித்து திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் தர்ஷனும், ஹர்சிதாவும் எப்போதும் போல பேசி பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தர்ஷன் ஹர்சிதாவுக்கு செல்போனில் பேசி உனது கேரக்டர் சரியில்லை. நீ எனக்கு வேண்டாம். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹர்சிதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறிய ஹர்சிதா நான் தர்ஷனுடன் சேர்ந்து வாழ்வதற்கு விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக வேப்பேரியில் உள்ள தர்ஷனின் வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போதும் தர்ஷன் மனம் மாறாமல் ஹர்சிதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார்.
இதனால் மனமுடைந்த ஹர்சிதா 7-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதில்,
முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது - கழக துணைப் பொதுச்செயலாளரும் -கழக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு வழங்கப்படும்.
அண்ணா விருது - தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமனுக்கு வழங்கப்படும்.
கலைஞர் விருது - நூற்றாண்டு கண்டவரும் அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும் -அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா.இராமச்சந்திரனுக்கு வழங்கப்படும்.
பாவேந்தர் விருது - கழக மூத்த முன்னோடியும் - தலைமைச் செயற்குழு உறுப்பினரும் - குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கு வழங்கப்படும்.
பேராசிரியர் விருது - கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் - காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் - சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் இராமலிங்கத்துக்கு வழங்கப்படும்.
மு.க.ஸ்டாலின் விருது - ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!
- நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!
நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!
வரும் 26-08-2025 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் #CMBreakfastScheme விரிவாக்கம் செய்கிறோம்.
நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்! தமிழ்நாடு நாளும் உயரும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ந்தேதி வாக்கில், ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- எனக்கு வேண்டிய மொழியை தேவைப்படும் நேரத்தில் கற்றுக்கொண்டேன்.
- என்னுடைய தாய்மொழி தமிழ் தான் என்றார் கமல்ஹாசன்.
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-
மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம் இரு மொழிக் கொள்கை. ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கூறப்பட்டுள்ளது. ஒன்று தாய்மொழி, ஒன்று ஆங்கிலம் மற்றொரு மொழி கற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு மொழி என்ன என்பது அனைவக்கும் தெரியும்.
எனக்கு 6 மொழி தெரியும். எனக்கு வேண்டிய மொழியை தேவைப்படும் நேரத்தில் கற்றுக்கொண்டேன். ஆனால் என்னுடைய தாய்மொழி தமிழ் தான்.
போர் என்றால், நமக்கு ஆங்கிலம் தான் கேடயம் என்று கருணாநிதி அன்று கூறினார். அது சொல்லி ரொம்ப நாட்களாகிவிட்டது.
போருக்கு நாள் குறிக்கும் பழைய பஞ்சாங்கத்தை தூக்கி போட்டுவிட்டு, புதிதாக நாம் சொல்வோம். நாம் குறிக்கிற தேதி, எதிர்காலத்தில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக குறிக்கப்படும் தேதி. அது நடந்தே தீரும்.
எனக்கு பிடித்த மய்யத் தூண் திருவள்ளுவர். அவர் பிடித்த தராசின் முள்ளாக நம் தலைவர்கள் எல்லாம் நின்றே ஆக வேண்டும். அவர்களுக்கு அடிவருடுவதில் எனக்கு வெட்கமும் இல்லை. கோபமும் இல்லை. என் கடமை. இந்த கூட்டத்தில் அளந்து பேசவேண்டியதில்லை. ஆனால் வெளியில் போகும்போது ஜாக்கிரதையாக பேச வேண்டும். அது எனக்கு தெரி–யும்.
இன்று என்னை பலர் என்னென்னெவோ சொல்லி கூப்பிடுகிறார்கள். எல்லாம் எனக்கு பொருந்தும். எல்லா வேஷமும் நான் போட்டு இருக்கிறேன். எனக்கு நீ வேஷம் கட்ட வேண்டாம். நான் வேஷம் கட்டச் சொல்லி, டைரக்டும் செய்து இருக்கிறேன். சரித்திரம் வேறு, புராணம் வேறு என்று புரிந்தவர் யாம். மீன் எங்கள் கொடியில் இருக்கும், புலி எங்கள் நெஞ்சில் இருக்கும், வில் எங்கள் கையில் இருக்கும். ஆங்கிலத்தில் 'வில்' இருந்தால் வழி உண்டு. அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதைத் தான் தொடர்ந்து செய்வோம். அதற்கு தோள் கொடுப்பதில் எனக்கு எந்த பயமும் இல்லை.
எனக்கு 3 அம்மாக்கள். எனை பெற்றெடுத்த அம்மா இறந்துவிட்டார்கள். மிச்சம் இருப்பது என் சினிமா, இந்திய தாய். இந்த 2 தாய்களுக்காக என் 2 தோள்களும் இருக்கும். என்னை யாரும் இடது பக்கமும் இழுத்துவிட முடியாது. வலது பக்கமும் இழுத்துவிட முடியாது. என் பெயர் கமல்ஹாசன். நான் இந்த குளத்தில் தான் பூப்பேன் என தெரிவித்தார்.
- துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது.
- பாராளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
சென்னை:
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதன்படி, துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பாராளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு இன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பி. சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இரு வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று சந்திக்க உள்ளார்.
சென்னை தி.நகர் அக்கார்ட் ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் சுதர்சன் ரெட்டி துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுகிறார்.
- சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அவசரமாக தாக்கல் செய்தார்கள்.
- அந்த மசோதா இந்திய ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க மிரட்டல் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளில் முக்கியமான முழக்கம் மாநில சுயாட்சியாகும். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், முரசொலி மாறன் என திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் மாநில சுயாட்சி முழக்கத்தைத்தான் உயர்த்தி பிடித்தார்கள்.
ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே Coordination தான் இருக்க வேண்டுமே தவிர, subordination இருக்கக் கூடாது என்பதுதான் இதற்கான தெளிவுரை. இந்த புரிதல் எல்லோருக்கும் ஏற்பட்டாக வேண்டும். அப்படி புரிந்துகொண்ட காரணத்தால் தான், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடனேயே 'மாநில சுயாட்சி' முழக்கத்தை கையில் எடுத்தது.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை தரும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது, இப்போதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அது நடக்கும்வரை திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர், 1969-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, டெல்லிக்குச் சென்ற முதல் பயணத்திலேயே
மாநில சுயாட்சி குறித்துதான் பேசினார். அதன்படி, பின்னாளில் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தார்கள். அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 1974-ம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.
ராஜமன்னார் குழு அறிக்கையையும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் இந்தியாவின் பல மாநில முதலமைச்சர்களிடமும் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுபோய் சேர்த்தார். மாநில சுயாட்சிக் கொள்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு திரட்டினார். அதேபோல், மாநில சுயாட்சிக் கோரிக்கை என்பதையே தவறு, பிரிவினை என்று சிலர் நம்மைப் பார்த்து விமர்சித்தார்கள்.
அவர்களுக்கு பதில் சொல்வதுபோல், கலைஞர் அவர்கள் ஒரு முழக்கத்தை அறிவித்தார்கள். அது தான், "மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி" என்கின்ற முழக்கம். அந்த முழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அதனால்தான் முதலமைச்சர், ஒன்றிய -மாநில அரசுகளுக்கு இருக்கின்ற உறவு குறித்து ஆராய High Level committee to study union-state relations என்கின்ற உயர்நிலை குழுவினை இன்றைக்கு அமைத்துள்ளார்.
ஒன்றிய அரசு - மாநில அரசின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மறைந்த இனமானப் பேராசிரியர் அவருக்கே உரிய பாணியில் ஒரு உதாரணத்தை சொல்லியிருக்கின்றார். அதை நான் இங்கே நினைவுகூர விரும்புகின்றேன். "ஒரு கடிகாரத்தினுடைய முட்களில் மணிமுள் முதன்மையானது என்றாலும், நிமிடமுள் பேரளவு இயங்கினால் தான், அந்த மணிமுள் சிறிதளவு இயங்கும். அதே மாதிரி, மக்களோடு நெருக்கமாக இருக்கக்கூடிய மாநில அரசு பேரளவு இயங்க வேண்டும். மத்திய அரசு அதற்கு இணக்கமாக, அளவோடு இயங்க வேண்டும்" என்று அருமையாக சொன்னார்.
ஆனால், இப்போது ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்றால், அதிகாரத்தை மேலும், மேலும் குவித்து வைத்துக் கொண்டு,
இந்தியா என்கின்ற கடிகாரத்தில் மணிமுள் மட்டும் இருந்தால் போதும், நிமிடமுள்ளே தேவையில்லை என்ற அளவிற்கு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு கூட, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அவசரமாக தாக்கல் செய்தார்கள். மாநில முதலமைச்சர்கள் மீதோ, அமைச்சர்கள் மீதோ, ஒரு குற்றத்தைச் சுமத்தி, 30 நாட்கள் அவர்களை காவலில் வைத்து விட்டால் போதும். அந்தக் குற்றம் நிரூபிக்கப்படும் முன்பே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களாக இருந்தாலும், முதலமைச்சராக இருந்தாலும் நீக்கலாம் என்ற மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
இது மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு பகிரங்க மிரட்டல். அந்த மசோதா சட்டமாவதை முதலமைச்சர் எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் மாநில பட்டியலில் உள்ள அதிகாரங்களை எல்லாம் Concurrent Listக்கு மாற்றிக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, மாநிலப் பட்டியலில் உள்ள கல்வியை, கல்வி உரிமையை நம்மிடம் இருந்து பறிக்க முயற்சிக்கின்றார்கள்.
கல்வி தொடர்பாக, மாநில சட்டமன்றங்களை புறக்கணித்து விட்டு, ஒன்றிய அரசே தன்னுடைய சட்டங்களை இயற்றி வருகின்றது.
அதை எதிர்த்துதான் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் உரிமைக்குரலை எழுப்பி வருகின்றார்கள்.
அதற்கான தொடக்கமாகத்தான், மாநிலக் கல்விக்கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார். ஒன்றிய அரசினுடைய நேசனல் எஜிகேசன் பாலிசி, நியூ எஜிகேசன் பாலிசி என்.ஈ.பி யை முதலமைச்சர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தார். ஒன்றிய அமைச்சர் அந்த என்.ஈ.பி யை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாயை விடுவிக்க முடியும் என்று சொன்னார்.
ஆனால், இந்தப் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தமிழ்நாட்டிற்குள்ள என்னென்ன வரும். குலக்கல்வி வரும், அதாவது அப்பாவும், அம்மாவும் என்ன வேலை செய்கின்றார்களோ, அப்பாவும், தாத்தாவும் என்ன வேலை பார்க்கின்றார்களோ, அதே தொழிலை நாமும் செய்ய வேண்டி வரும் என்ற அந்தக் கொள்கையை கொண்டு வர பார்க்கின்றார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் 2,500 கோடி ரூபாய் கொடுப்போம். அதன் மூலமாக குறுக்கு வழியில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டிற்குள் நுழைக்க பார்க்கின்றார்கள்.
முதலமைச்சர் மிகத் தெளிவாக எதிர்த்து சொன்னார். என்.ஈ.பி யை ஏற்றுக் கொண்டால்தான் 2,500 கோடி ரூபாயை கொடுப்பேன் என்று சொல்கின்றீர்கள். ஆனால் ஒன்றிய அரசு நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், எந்த காலத்திலும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டு செல்ல மாட்டேன் என்று எதிர்த்தார்.
இதனால் மாநில அரசுக்கு பல்வேறு வழிகளில் கடும் நெருக்கடி எற்பட்டது. வருமானவரி, சுங்கவரி, நிறுவன வரி, இப்போது GST என்று அனைத்து வளமான வரிகளையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. மாநிலங்களை நிதிக்காக கையேந்த வைக்கும் அமைப்பாக மாற்றிவிட்டார்கள்.
Delimitation என்று இப்போது கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளை குறைக்கும் வேலையையும் ஒன்றிய அரசு செய்து வருகின்றது.
ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு இருக்கின்றன. ஓட்டுத்திருட்டு என்பது இந்திய ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலாக இன்றைக்கு இருக்கின்றது.
எதிர்த்து கேள்வி கேட்கும் மாநிலங்களுக்கு போதுமான நிதியை தர ஒன்றிய அரசு மறுக்கின்றது. இதையெல்லாம் மீறிதான், மாநில உரிமைகளை நாம் நிலைநாட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டே, தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சியில் இன்றைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக முதலமைச்சர் மாற்றிக்காட்டி இருக்கின்றார்.
இந்த கருத்தரங்கம் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக நிச்சயமாக அமையும் என தெரிவித்தார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (25.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பெருங்களத்தூர்: பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை ரோடு மற்றும் சடகோபன் நகர்.
முடிச்சூர்: ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, மேட்டு தெரு, பஞ்சாயத்து வாரியம் சாலை, சக்ரா அவென்யூ.
தாம்பரம்: திருவேங்கடம் நகர், மேலாண்டை தெரு, தெற்கு தெரு, பூர்ண திலகம் தெரு, கல்யாண் நகர் மற்றும் வைகை நகர்.
போரூர்: லட்சுமி அவென்யூ, முகலிவாக்கம் மெயின் ரோடு, ராமசந்திரா நகர், பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், குமரி நகர், சிவாஜி நகர், ஓம் சக்தி நகர், எம்ஆர்கே நகர்.
- வளிமண்டல வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
- சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியிருப்பதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடல் வடமேற்கு வங்கக்கடலில் வருகிற 25-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. ஆந்திரா, ஒடிசா வழியாக மகாராஷ்டிரா நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதற்கு வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை வருகிற 26-ந்தேதி முதல் மீண்டும் ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தீவிரமடையும். இந்த மழை வருகிற 29-ந் தேதி வரை நீடிக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த 2 நாட்களாக வடமாவட்டங்களில் மழை பெய்து கொண்டு உள்ளது. இன்று பரவலாக தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
வளிமண்டல வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.
சென்னை உள்பட வட மாவட்டங்களில் நாளை காலை வரையில் மழை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை காரைக்கால், நாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இன்று மாலை இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழலும் உள்ளது. நேற்று இரவு முதல் பெய்த மழை இன்று பகலில் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
25-ந் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 26, 27, 28 29 ஆகிய நாட்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதியில் மீண்டும் மழைக்கான வாய்ப்பும் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது பலத்த மழையை கொடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






