என் மலர்
சென்னை
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- அஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பாரிவாக்கம்: கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி.
தேனாம்பேட்டை: எல்லியம்மன் காலனி, போயஸ் கார்டன், ஜேஜே ரோடு, கேஆர் ரோடு, முரேஷ் கேட் சாலை, சேஷாத்ரி சாலை, பஷீர் அகமது தெரு, அம்புஜம்மாள் தெரு, எஸ்எஸ் ஐயங்கார் தெரு, வீனஸ் காலனி 1வது மற்றும் 2வது தெரு, மகாராஜா சாலை.
கோவிலம்பாக்கம்: வெள்ளக்கல், வடக்குப்பட்டு, எஸ்.கொளத்தூர், ஈச்சங்காடு, காந்தி நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர்.
நன்மங்கலம்: அஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு.
தாம்பரம்: முடிச்சூர் கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், கோபால் நகர், ஏஎல்எஸ் பசுமை நிலம், பரத் நகர், முல்லை நகர், கனகம்மாள் கோவில் தெரு, விஜயா நகர், நேரு நகர், பாம்பன்சாமிகள் சாலை, சி.வி.ராமன் தெரு, லெனின் தெரு, யு.வி.சுவாமிநாதன் தெரு, வள்ளியம்மை தெரு, சுதா அவென்யூ, கஸ்தூரிபாய் தெரு, நிஷா அவென்யூ.
- விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது.
- பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை:
விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் பிறந்தநாள், வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
இப்போது தான் விஜய் உங்களுக்கு பெரியதாக தெரிகிறார். ஆனால், விஜய் சிறிய பையனாக இருந்ததில் இருந்தே பார்த்து வருகிறோம். என்னை பொருத்தவரையில் அவர் எனது மகன் போன்றவர். அவருக்காக 'செந்தூரபாண்டி' படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தார். இன்று அவர் நன்றாக இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். அதற்காக அவர் விஜயகாந்த் படத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
- மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
- அதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
திருச்சி துறையூரில் அம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் மனிதநேயமற்ற செயலாகும் என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிர் காப்பாற்றும் நோக்கில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸை அஇஅதிமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய சம்பவம் மிகக் கடுமையான, மனித நேயமற்ற செயல் ஆகும்.
அவசர சிகிச்சை பெற வேண்டிய உயிர்களை அரசியல் சண்டை, அல்லது குறுகிய மனப்பான்மையால் தடுக்க முயன்றது மனித நாகரிகத்திற்கே கேள்விக்குறியாகும். மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த அராஜகச் செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். மனித உயிர் ஆபத்தில் இருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸின் சுதந்திர உரிமையைத் தடுக்க நினைப்பது சட்ட ரீதியாகவும் குற்றமாகும்.
அஇஅதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓஎன்ஜிசி-க்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ளது.
- ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு தமிழக அரசு வலியுறுத்தல்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு, கடந்த 20.02.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல (Protected Agricultural Zone – PAZ) சட்டம், 2020-ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை , பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது.
இச்சட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி, மற்றம் அகழ்வுத் தொழில்கள் ஆகியவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2023-ம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதற்கிடையில், ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation Ltd.) நிறுவனமானது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்ததை தொடர்ந்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority – SEIAA) ஓஎன்ஜிசி-க்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ள செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதனை அடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோ கார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவாகும்.
எனவே, தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்ட வட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய எம்பி விஜய் வசந்த்.
- தேசிய விருது பெற்றுள்ள "பார்க்கிங்" திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பங்கேற்றார்.
சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் குழந்தைகளுக்கு எம்.பி. விஜய் வசந்த் சொந்த நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கினார்.
தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நேற்று சென்னையில் ஊடகங்களின் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கும், பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கும் கல்வித் திருவிழாவை சென்னை சேத்துப்பட்டு தனியார் பூங்கா வளாகத்தில் நடந்தியது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, தனது சொந்த நிதியிலிருந்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

மேலும் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய எம்பி விஜய் வசந்த், அவர்களை ஊக்குவித்து பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேசிய விருது பெற்றுள்ள "பார்க்கிங்" திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், பாதுகாப்புக் கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பத்திரிகைககள், ஊடகங்களில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்டோர் குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
விழாவில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ ஆகியவை நிகழ்த்தப்பட்டது. மேஜிக் ஷோவில் பள்ளி குழந்தைகளும், பெற்றோர்கள் சிலரும் பங்கேற்றனர்.
ஏர்டெல் சூப்பர் ஜூனியர் புகழ் ஹர்ஷினி தனது இனிமையான குரலில் பல திரைப்பட பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு எம்பி விஜய் வசந்த் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.
- கல்வி, சுகாதாரத்தில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது தமிழ்நாடு.
- தொலைநோக்குப் பார்வையிலும் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது தமிழ்நாடு.
சென்னை வந்துள்ள இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
அவர், தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அப்போது, இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதைய நிலையில் கூட்டாட்சிக்கு மட்டுமல்ல அரசியலமைப்புக்கே ஆபத்து வந்துள்ளது. குடியரசு துணைத் தலைவராக எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் அரசியலமைப்பை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
கூட்டாட்சித் தத்துவத்தை காப்பதில் முன்னோடியாக விளங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கல்வி, சுகாதாரத்தில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது தமிழ்நாடு. தொலைநோக்குப் பார்வையிலும் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது தமிழ்நாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- அரசியலமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்து கொண்டிருக்கிறது.
சென்னை வந்துள்ள இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
அவர், தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் சுதர்சன் ரெட்டியை ஏற்று கொண்டுள்ளனர்.
அரசியலமைப்பின் மாண்பை போற்றி பாதுகாத்தவர் சுதர்சன் ரெட்டி. அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார்.
அரசியலமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்து கொண்டிருக்கிறது.
புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக பேசியவர் சுதர்சன் ரெட்டி. தமிழகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் சுதர்சன் ரெட்டி.
முன்னாள் நீதியரசன் குறித்து நக்சல் என விமர்சிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. பயங்கரவாதிகளை ஒழிக்க முடியாத அமித்ஷா, சுதர்சனை விமர்சிக்கிறார்.
அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது.
தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு தமிழன் என்ற முகமீடி அணிந்து ஆதரவு கேட்கின்றனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் அறிக்கை அளித்துள்ளனர்.
- மீனவர்கள் வாழ்வாதாரமும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
தமிழக பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது.
குறிப்பாக திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 10 ஆவது சுற்று ஏல அறிவிப்பில் இராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள நிலப் பரப்பில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
இதனால் மீனவர்கள் வாழ்வாதாரமும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் அறிக்கை அளித்துள்ளனர்.
எனவே ஒன்றிய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி., ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள சுற்றுச்சூழல் அனுமதியை மறு ஆய்வு செய்து, திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்று சுதர்சன் ரெட்டியை சந்தித்தனர்.
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணமாக கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வருகிற செப்டம்பர் 9-ந் தேதி புதிய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர கவர்னரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான ஆந்திராவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். 2 பேருமே தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் மாநிலம் வாரியாக தனித்தனியாக சென்று கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அவ்வகையில் சுதர்சன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், திருச்சி சிவா, வழக்கறிஞர் வில்சன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் விமான நிலையம் சென்று சுதர்சன் ரெட்டியை வரவேற்றனர்.
அங்கிருந்து காரில் புறப்பட்ட சுதர்சன் ரெட்டி சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார்.
இந்நிலையில், நட்சத்திர ஓட்டலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்று சுதர்சன் ரெட்டியை சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுதர்சன் ரெட்டி ஆதரவு கோரினார்
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தந்த கட்சி எம்.பி.க்களும் பங்கேற்கிறார்கள். பின்னர் அங்கு நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர்.
- சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
- இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெங்கடேஸ்வரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நல்லகண்ணு நேற்று முன்தினம் (22 ஆகஸ்ட் 2025), வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், நூறு வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு றிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.
- தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
இதைதொடர்ந்து,"ஜகதீப் தன்கர் என்னவானார்? இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஜகதீப் தன்கர் என்னவானார்? எங்கே மறைந்தார்?
எங்களது கவலையெல்லாம் அதே போன்ற நிலமை சி. பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.
தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறதல்லவா?" என்று குறிப்பிட்டுள்ளார்.
- விஜய்யின் கருத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் கடுமையாக விசமர்சித்துள்ளனர்.
- விஜயை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமையில் விமர்சித்ததால் அரசியல் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். குறிப்பாக முதலமைச்சரை 'ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சித்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், விஜய்யின் கருத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் கடுமையாக விசமர்சித்துள்ளனர்.
அதில், சூரியனை பார்த்து நாய் குரைக்கும், அதற்காக நாய் மீது சூரியன் கோபப்படுவதில்லை என்று ஈரோடு கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அப்பா, அம்மா, மனைவியை பார்த்து கொள்ள முடியாதவர், மக்களை எப்படி பார்த்து கொள்வார் என்று திமுக எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தெரிவித்துள்ளார்.
விஜயை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமையில் விமர்சித்ததால் அரசியல் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.






