என் மலர்
சென்னை
- கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றது.
- இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தி மொழி நாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர், "இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. இந்தி மொழி வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி, முக்கியப் பங்கு வகித்துள்ளது. அனைத்து மொழிகளையும் இணைத்து, வளர்ந்த மொழியியல் ரீதியாகத் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு தேசத்தில், 22 அலுவல் மொழிகளைக் கொண்டிருக்கும் அரசின் நிர்வாகத்தில் ஒற்றை மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது எதேச்சதிகாரப் போக்காகும்.
ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
பா.ஜ.க. முதன்முதலில் ஆட்சி அமைத்ததில் இருந்தே ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றைத் தன்மையில் சுருக்க முயல்கிறது. இந்த வரிசையில்தான் இப்போது ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள். ஒன்றிய அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி, கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றது.
யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. வலுக்கட்டாயமாகத் திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். ஆனால், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையும்கூட. இதனை எங்கள் பொதுக்குழுவிலும் செயற்குழுவிலும் தீர்மானமாகவே நிறைவேற்றி இருக்கிறோம்.
இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது. ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் அலுவல் மொழியாக 22 மொழிகள் இருக்கும்போது, இந்தியை மட்டுமே தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாற்ற நினைப்பது எதேச்சதிகாரப் போக்கு.
ஒன்றியத்தை ஆளும் அரசானது, நாட்டிலுள்ள அத்தனை மதத்தினரையும் மொழியினரையும் மாநிலத்தவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். இதுவே நாட்டின் ஒட்டு மொத்தப் பகுதிகளும் வளர்ச்சி அடைவதற்கான வழி ஆகும். இந்தி பேசாத மாநிலங்கள், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்று பிரித்துப் பார்ப்பதும், ஒற்றை மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை. எனவே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்ற தன் கருத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும்
நாளை மறுநாள் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம்.
19-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.
சென்னை:
தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் அறிஞர் அண்ணா கொள்கைகளை பின்பற்றி அரசியல் பணிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி த.வெ.க. தலைவர் விஜய்யை அண்ணா பாராட்டி பேசுவது போல் சிறப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் கோடான கோடி உழைக்கும் மக்களின் உணர்வுமிக்க தம்பிகளின் பேராதரவை பெற்று தமிழ் மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியை சாமானியன் அலங்கரித்தான் என்ற சாதனையை தொடங்கி வைத்த இந்த அண்ணாதுரை அன்று தலைமை தாங்க தம்பிகளை அழைத்தேன்.
'இன்று தம்பி விஜய் உன்னை அழைக்கிறேன், தம்பி வா. தலைமை தாங்க வா' என்பது உள்பட விஜய்யை புகழ்ந்து பேசும் பல வசனங்களுடன் அண்ணா, பெரியாருடன் விஜய் இருப்பது போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகி வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது.
- அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
கிண்டி:
சென்னை கிண்டியில் ராமசாமி படையாட்சியாருக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* சமூக நீதிக்கு தி.மு.க. துரோகி மட்டுமல்ல விரோதி. தி.மு.கவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை.
* சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.
* மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதலமைச்சர் பொய் சொல்கிறார்.
* அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றார்.
- பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலையில் விவாதம் நடந்து வருகிறது.
- விவாதத்தில் கருத்துக்களை சொல்ல யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.
சென்னை:
தமிழ்நாட்டில் பா.ஜ.க.- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த சூழ்நிலையில் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க.வில் இருப்பவர்களுக்கு அரசியல், சமூக ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி? கட்சியை பலப்படுத்தி சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் களத்தை சந்திப்பது எப்படி? என்பது உள்பட பல்வேறு செயல்கள் பற்றி விவாதித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
சிந்தன்பைடெக் (சிந்தனை அரங்கம்) என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நடத்துவார்கள். ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த சிந்தனை அமர்வு நிகழ்ச்சி தமிழ்நாட்டில் இன்று நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள அரங்கத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலையில் விவாதம் நடந்து வருகிறது.
கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், கரு.நாகராஜன் மற்றும் பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள், செயலாளர்கள், 7 அணிகளின் தலைவர்கள், அணி பிரிவுகளின் பொறுப்பாளர்கள் 25 பேர், முக்கிய நிர்வாகிகள் என சுமார் 70 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். கூட்டம் நடைபெறும் அரங்குக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. காலை தொடங்கிய இந்த கூட்டம் இரவு வரை நடக்கிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், கூட்டணிக்குள் ஏற்படும் குழப்பங்கள், மக்கள் மனநிலை அமைப்பு ரீதியாக கட்சியின் நிலை, தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது, தேர்தல் வெற்றிக்கான வழி முறைகள் மற்றும் கூட்டணியை வலுப்படுத்துவது என்பது உள்பட 10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
ஒவ்வொருவரும் பேசி முடித்ததும் அதன் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கருத்துக்களை சொல்ல யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.

இந்த அமர்வின் போது அவ்வப்போது தேனீர் இடைவேளை மட்டும் விடப்படும். இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சி வலுப்படாமல் இருப்பதற்கு நிர்வாகிகளிடையே நிலவும் கோஷ்டி பூசல்கள், கட்சியை விட தங்கள் சுயநலத்தின் மீது கொண்டுள்ள அக்கறை உள்ளிட்ட சில முக்கிய காரணங்கள் உள்ளன. இதுபற்றி எடுத்துச் சொல்லப்போவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
நாள் முழுவதும் அனைவரது கருத்துக்கள், சிந்தனைகள், ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகள், எதிர்பார்ப்பது பற்றிய விவரங்களை பி.எல்.சந்தோஷ் கேட்கிறார்.
நிறைவாக மாலை 6 மணியளவில் அவர் ஆலோசனை வழங்குகிறார். அப்போது அரசியல் ரீதியாக கட்சியினர் என்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டும். கட்சி அமைப்பை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சி கட்டுப்பாடு, தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு இணக்கமாக செயல்படுவது உள்ளிட்ட விஷயங்களில் பா.ஜ.க.வினர் நடந்து கொள்ள வேண்டிய விதங்கள் பற்றி எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் குழப்பங்கள் நடந்து வரும் நிலையில் இன்று இந்த கூட்டம் நடப்பதால் கட்சி மேலிடத்தின் முடிவு பற்றியும் அவர் விரிவாக விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
- சென்னையில் விஜய் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போவதாகவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
இதேபோல் சென்னையிலும் விஜய் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 27-ந்தேதியன்று வட சென்னையிலும், அக்டோபர் 25-ந்தேதியன்று தென் சென்னையிலும் சாலை மார்க்கமாக சென்று விஜய் மக்களை சந்திக்க அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நாளில் 4 மாவட்டங்களுக்கு செல்லும் திட்டத்தை மாற்றி ஒருநாளில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயின் தேர்தல் பிரசார பயணம் குறித்து புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இராமசாமி படையாட்சியாரின் 108-ஆம் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்.
- பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் இளம்வயதில் இருந்தே போராடிய பெருமைக்குரிய பெரியவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 108-ஆம் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்.
பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பணிகளைப் போற்றும் இந்த நாளில், நமது சமூகநீதிக்கான போராட்டங்களை இன்னும் தீவிரமாக வெற்றிக் கொடி நாட்ட உறுதியேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
- கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் 108-வது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
- புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
- நேற்று சவனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.81,680-க்கு விற்பனையானது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை வார தொடக்க நாளான நேற்று சற்று குறைந்தது. சவனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.81,680-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,280-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 82,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 144 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,680
14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
13-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
12-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,920
11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-09-2025- ஒரு கிராம் ரூ.143
14-09-2025- ஒரு கிராம் ரூ.143
13-09-2025- ஒரு கிராம் ரூ.143
12-09-2025- ஒரு கிராம் ரூ.142
11-09-2025- ஒரு கிராம் ரூ.140
- மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
- மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் சமையல் கியாசுக்கு மத்திய அரசு 5 சதவீதம்தான் வரி விதிக்கிறது. ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், 'சமையல் கியாஸ் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் வருகிறது. மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது. எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ரெயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
- 84 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தெற்கு ரெயில்வேயின் கீழ் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ரெயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடியோ, ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது, தண்டவாளங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் கடந்து செல்லக்கூடாது என ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
என்னதான் விழிப்புணர்வு மற்றும் அபராதம் விதித்தாலும் ரெயில்களில் படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள், தண்டவாளங்களை கடந்து செல்பவர்கள் யாரும் தங்களை மாற்றி கொள்ள முன்வரவில்லை. இதனால் பல்வேறு பயணிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வபோது அரங்கேறி வருகிறது.
அந்தவகையில், தெற்கு ரெயில்வேயில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையில் 8 மாதங்களில் தண்டவாளங்களை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதி 410 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், கடந்த 8 மாதங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்து தவறி விழுந்து 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
84 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்றால், பயணிகளும், பொதுமக்களும் தாங்களே தங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே தடுக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
- 17,18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை 5 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் சென்றுள்ளனர்.
டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் மாலை 4 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






