என் மலர்tooltip icon

    சென்னை

    • 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
    • தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    மத்திய அரசு 2024-25-ம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையை உள்நாடு மற்றும் வெளிநாடு என்ற 2 வகைகளில் மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் 294.82 கோடி உள்நாட்டு பயணிகளும், 2 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 64.68 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இது இந்திய அளவில் 21.9 சதவீதம் ஆகும். இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

    அடுத்தபடியாக தமிழகம் 30.68 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. இது தேசிய அளவில் 10.4 சதவீதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் என ஆன்மிக தலங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் என மலைவாழ் தலங்கள், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் காரணமாக அதிக அளவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.

    ஆனால், 2019-ம் ஆண்டு வாரணாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு 2021 டிசம்பர் 13-ந் தேதி காசி விசுவநாதர் கோவில் காரிடார் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2020-ல் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஜனவரி 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக உத்தரபிரதேசத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதனால், தமிழகம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

    இந்த நிலையில், கர்நாடக மாநிலம் 30.45 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை (தேசிய அளவில் 10.3 சதவீதம்) கவர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளது. 4-வது இடத்தில் 29.02 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 9.8 சதவீதம்) ஆந்திரபிரதேசமும், 5-வது இடத்தில் 23 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 7.8 சதவீதம்) ராஜஸ்தானும் இடம் பெற்றுள்ளன.

    இதேபோன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 37.1 லட்சம் எண்ணிக்கையுடன் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. 2-வது மாநிலமாக 31.2 லட்சம் பயணிகளுடன் மேற்கு வங்கமும், 3-வது மாநிலமாக 22.7 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் உத்தரபிரதேசமும் இடம் பெற்றுள்ளன.

    அதே போன்று 22.7 லட்சம் பயணிகளுடன் குஜராத் மாநிலம் 4-வது இடத்தை பெற்றுள்ளது. 11.6 லட்சம் பயணிகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பெற்றுள்ளது. இருந்த போதிலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.
    • பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இந்த பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 2 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.

    இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நடவடிக்கையானது, எந்த தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இந்த பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

    • கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
    • சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது என இபிஎஸ் பேசினார்.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கிறிஸ்தவ மக்களை பெருமைப்படுத்தும் விதமாக அ.தி.மு.க. சார்பில் கடந்த 20 ஆண்டாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.

    ஓட்டுக்காக மட்டுமே சிறுபான்மை நலனைப் பற்றி பேசும் தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பாவிக்கும் கட்சி.

    தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்.

    ஏசு பிரான் தீய சக்திகளை அழிக்க உலகத்துக்கு ஒலியாக வந்தார். தீயசக்திகளாக இருப்பவர்களை ஒலியின் வேஷம் தரித்தவர்கள் என்றும் அவர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில், கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்ற ஒப்பந்தம் மட்டுமே. அது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. கொள்கை என்பது எங்களது கட்சியின் உயிர் மூச்சு போன்றது.

    அ.தி.மு.க. தனது கொள்கையில் உறுதியாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற அடிப்படையில்தான் கூட்டணி வைத்து உள்ளோம்.

    ஜெயலலிதா. தி.மு.க. எனும் தீய சக்தியை எதிர்த்து ஜெயலலிதா போராடினார்.

    தீயசக்திகளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பாடுபடும் இயக்கம் என தெரிவித்தார்.

    • இது எனது 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம் என ஜிவி பிரகாஷ் தெரிவித்தார்.
    • பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியுள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

    ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

    இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, இன்று மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் #WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இதில் பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர்.

    இதில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் "இயக்குநர் சுதா கொங்கரா தான் எனக்கு முதல் தேசிய விருது வாங்கிக் கொடுத்தவர். அதனால் அவரது படம் என்றால் எனக்கு தனி மகிழ்ச்சி வந்துவிடுகிறது. ஏற்கனவே பல பீரியாடிக் படங்கள் செய்து விட்டேன். இது எனது 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம். இந்த படத்தில் எனக்காக இசையமைப்பாளர்களும் பாடல்கள் பாடிக் கொடுத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா மற்றும் ஷான் ரோல்டனுக்கு நன்றிகள். அதேபோல் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ள படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. அந்த பாடலும் விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய சிவகார்த்திகேயன், "பராசக்தி' படம் அனைவரையும் கவரும் படமாக உருவாகியுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தின் விழா நடப்பது சிறப்பான அனுபவமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

    • ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
    • செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.

    அப்போது விஜய் தனது உரையின்போது, திமுக ஒரு தீய சக்தி என்று ஆக்ரோஷமாக பேசினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், திமுக அரசு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.

    இந்நிலையில், திமுக அரசின் மீதான தவெக தலைவர் விஜயின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    மேலும், உதயநிதி ஸ்டாலினிடம்,"அரசாங்கம் நடத்துகிறீர்களா அல்லது கண்காட்சி நடத்துகிறீர்களா" என விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்," என்னைக்காவது விஜயிடம் போய் கேள்வி கேட்டிருக்கிறீர்களா? ஒருவாட்டி அவரை பேச விடுங்கள் பார்க்கலாம்.." என்றார். 

    • லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே அதில் உரிய வசதிகள் இல்லை என்று குறை கூறுகிறார்.
    • தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை இ.பி.எஸ். பிரதிபலிக்கிறார்.

    சட்டசபை தேர்தல் வர உள்ளதால் மடிக்கணினி தர உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

    * மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.

    * சில வாரங்களில் மாணவர்களுக்கு மடிக்கணினி தரப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்வியின் அர்த்தம் அனைவருக்கும் தெரியும்.

    * திராவிட மாடல் அரசு மாணவர்களுக்கு நிச்சயமாக மடிக்கணினி வழங்கத்தான் போகிறது.

    * மாணவர்கள் பயன்பெறும் திட்டத்துக்கு எதிராக அவதூறை பரப்ப வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்.

    * லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே அதில் உரிய வசதிகள் இல்லை என்று குறை கூறுகிறார்.

    * எடப்பாடி பழனிசாமி அல்ல அவர்களது டெல்லி ஓனர் நினைத்தாலும் மாணவர்களுக்கு லேப்டாப் தருவதை தடுக்க முடியாது.

    * Windows 11 OS உடன் உயர்தரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.

    * அதிவேக Processor மற்றும் அதிகநேரம் தாங்கும் பேட்டரியுடன் லேப்டாப் உள்ளது.

    * தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை இ.பி.எஸ். பிரதிபலிக்கிறார்.

    * பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    * மடிக்கணினி திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு மாணவர்களை ஏமாற்றியவர் தான் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக

    இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    23 மற்றும் 24-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    உறைபனி எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 2-வது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பஸ்களும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
    • இந்த 125 மின்சார பஸ்களில் 45 பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவை.

    பூந்தமல்லி:

    டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார பஸ்களை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 626 மின்சார பஸ்கள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல்கட்டமாக, வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பஸ்களும், 2-வது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பஸ்களும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.

    இந்த நிலையில் 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    இந்த 125 மின்சார பஸ்களில் 45 பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவை. மற்ற 80 பஸ்கள் சாதாரணமானவை ஆகும்.

    பூந்தமல்லி பணிமனையில் மின்சார பஸ்களை இயக்குவதற்கான கட்டமைப்பு, 25 சார்ஜிங் மையங்கள் மற்றும் பணிமனைகளில் விரிவாக்க பணிகள் ரூ.43.53 கோடி செலவில் முடிந்து உள்ளன. இந்த சீரமைக்கப்பட்ட பணிமனையும் திறக்கப்படுகிறது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், முத்துமாரி அம்மன் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (19.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அலமாதி: கீழ்கொண்டையுர், அரக்கம்பாக்கம், கர்ல பாக்கம், தாமரைபாக்கம், கதவூர், வேலச்சேரி, பாண்டேஸ்வரம், கரனை, புதுகுப்பம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி, குருவாயில், பூச்சியத்துபேடு, கோடுவல்லி, ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.

    செங்குன்றம்: சோத்துபாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலைன், பைபாஸ், வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன், கண்ணம்பாளையம், செம்பரம்பாக்கம், தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், முத்துமாரி அம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    • ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது பெண் தான். என் வெற்றிக்கு காரணமும் பெண்தான்.
    • பெண்கள் முன்னேறினால் அந்தக் குடும்பம் சிறப்பாக இருக்கும்.

    சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * என்னுடைய வெற்றிக்கு பின் இருப்பது எனது மனைவிதான்.

    * ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது பெண் தான். என் வெற்றிக்கு காரணமும் பெண்தான்.

    * மிசாவில் இருந்தபோது என்மனைவி கோபித்துக்கொண்டு அப்செட்டாகி ஏதாவது முடிவு எடுத்து இருந்தால் என் நிலை என்னவாகி இருக்கும் என்று நினைத்து பாருங்க... எவ்வளோ கொடுமைகள் எனக்கு வந்தபோதும், என்னை அவர் ஊக்கப்படுத்தியதால்தான் நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறேன்.

    * ஓராண்டு காலம் மிசாவில் சிறையில் இருந்தபோது பொறுமையாக இருந்தவர் எனது மனைவி.

    * பெண்கள் முன்னேறினால் அந்தக் குடும்பம் சிறப்பாக இருக்கும்.

    * பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம்.

    * பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்றால் 16 குழந்தைகள் இல்லை 16 செல்வங்கள்.

    * பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் என புதுமணத் தம்பதிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என நான் நினைத்தால் கூட அமைச்சர் சேகர்பாபு விடமாட்டார்.
    • கிண்டியில் உள்ளதைவிட கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது.

    சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே புது எனர்ஜி, உற்சாகம் எனக்கு வந்துவிடுகிறது.

    * ஒரு மாவட்டத்திற்கு 2 மாதத்திற்கு ஒரு முறை செல்லும் நான் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் 10 நாட்களுக்கு ஒரு முறை வருகிறேன்.

    * கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என நான் நினைத்தால் கூட அமைச்சர் சேகர்பாபு விடமாட்டார்.

    * பல மாவட்டங்களில் உற்சாகமான வரவேற்பு அளித்தாலும் கொளத்தூர் தொகுதியில் தரும் வரவேற்பு கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

    * எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளையாக குறிப்பாக ஒரு நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் இருக்கிறேன்.

    * மணமக்களோடு இந்த விழாவில் பங்கேற்று இருப்பது உற்சாகத்தை தருகிறது.

    * அமைச்சர்களே பொறாமைப்படும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    * கிண்டியில் உள்ளதைவிட கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது.

    * மினி ஸ்டேடியம், வண்ண மீன் விற்பனை மையம், பாலங்கள், அரசு மருத்துவமனை தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது.

    * கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனை தரம் உயர்த்தி இருக்கிறோம்.

    * கொளத்தூர் தொகுதிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. அதிக மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. அதிக நூலகங்கள், அதிக மருத்துவமனைகள் உள்ள தொகுதி கொளத்தூர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோயம்புத்தூர் மாவட்டத்தில் 32 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 51 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். 
    • திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது.

    இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் வீடு வீடாக சென்று கணக்கிட்டு படிவங்களை கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் வழங்கி வந்தனர். இந்த கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ந்தேதியுடன் நிறைவடைந்தது. 

    இந்நிலையில், நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97  லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இதன்படி, 26.90 லட்சம் பேர் இறந்தவர்கள், 13.60 லட்சம் பேர் கண்டுபிடிக்கப்பட முடியாதவர்கள் அல்லது ஆப்செண்ட் ஆனவர்கள், 52.60 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் மாறிச் சென்றவர்கள், 3.98 லட்சம் இரட்டை பதிவுகள் என்று மொத்தம் 97.40 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 40.05 லட்சம் வாக்காளர்களில் 14.26 லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. 

    செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 27.87 லட்சம் வாக்காளர்களில் 7.02 லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாயப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. 

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 24.45 லட்சம் வாக்காளர்களில் 5.64 லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாயப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. 

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் 32 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 51 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். 

    திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் விண்ணப்ப படிவம் 6-யை பெற்று அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஜனவரி 18ந்தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். பின்னர், அதுகுறித்த பரிசீலனைகள் நடைபெறும். அதன் பிறகு தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இடம் பெற செய்வார்கள்.

    இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வெளியாகும்.

    ×