என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் பட்டினத்தில் உள்ள சூசையப்பர் ஆலயத் தில் திருவிழா நடை பெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.
வாடிவாசல் வழியாக காளைகளை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக விழாக் குழுவினர் அவிழ்த்து விட்டனர். போட்டியில் திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் சேலம், கரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட நகரங்களில் இருந்து சுமார் 300 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். சூசையப்பர்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு ஜல்லிகட்டு போட்டியை ரசித்து பார்த்தனர். போட்டியில் காளையை அடக்கிய வீரர்கள் மற்றும் அடங்காத காளை மாட்டு உரிமையாளர்களுக்கு கட்டில், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், செல்போன், கடிகாரம், சேர், தங்க காசுகள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. ஜல்லிகட்டில் போட்டியில் பிராஞ்சேரி கண்ணன், சோழங்குறிச்சி வேல்முருகன், சூரியா, காடு வெட்டாங் குறிச்சி அன்பு மொழி உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடியை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 65). விவசாயி. இவரது மனைவி லோகாம்பாள். இந்த தம்பதிக்கு ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், குமார் என்ற 3 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் கோவிந்த ராசுக்கு சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதனை தனது முதல் 2 மகன்களான ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரனுக்கு பிரித்து கொடுத்தார். குமாருக்கு நிலம் கொடுக்க வில்லை. இதனால் குமாரும் அவரது மனைவி அமராவதியும் கோவிந்தராசுவிடம் சென்று தட்டிக்கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் வழக்கின் தீர்ப்பு குமாருக்கு சாதகமாக வருவது போல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராசு, லோகாம்பாள், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் மனைவி செல்வி ஆகிய 4 பேரும் நேற்றிரவு குமார் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அமராவதியிடம் , ஏன் எங்களிடம் சொத்து கேட்டு தகராறு செய்கிறாய் என்று கூறி அவரை கட்டையால் தாக்கினர் . இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனிடையே குமார் அங்கு வரவே அவரையும் கத்தியால் குத்தினர். இதையடுத்து 4 பேரும் தப்பியோடிவிட்டனர். காயமடைந்த குமாரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர். #tamilnews
அரியலூர்:
அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை அமைக்கவும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி அரியலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடாவும், அரியலூர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான தாமரை.எஸ். ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும் போது கூறியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சினையில் கடைசிவரை போராடியவர் ஜெயலலிதா. காவிரி விவகாரத்தில் 50 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது. 1974-ல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.வினர் புதுப்பிக்க தவறிவிட்டனர். கட்சத்தீவு பிரச்சினையில் பச்சை கொடி காட்டியது தி.மு.க. ஆட்சியில்தான்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி. இவர்கள் நினைத்திருந்தால் அனைத்து பிரச்சினைகளையும் முடித்திருக்கலாம். இதை புரிந்து கொள்ளாமல் ஸ்டாலின் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். ஸ்டாலின் செய்த மிகப்பெரிய சாதனையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்தது தான்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தினகரனை நீக்கி வைத்தார். கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் ஜெயலலி தாவின் வாரிசு என்று கூறி வருகிறார். அ.தி.மு.க. தொண்டன் ஒருவன் கூட அவர் பின் செல்ல மாட்டான். ஸ்டாலின், தினகரன் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-
நான் இந்த மாவட்டங்களை சுற்றி சுற்றி வந்தவன். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என ஜெயலலிதா கூறினார். நான் இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது பொதுக்கூட்டமா? மாநாடா? என்று என்ன தோன்றுகின்றது. நாடாளு மன்ற தேர்தலாக இருக்கட்டும், சட்டமன்ற தேர்தலாகட்டும்.
உள்ளாட்சி தேர்தலாகட்டும், வெற்றி பெறப்போவது நாம் தான். இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ? முடியாது. இது காலத்தின் கட்டாயம். அரியலூர் மாவட்ட செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் இரட்டை குழல் துப்பாக்கிகள்.
1974-ல் காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க தவறியது தி.மு.க.தான். விவசாயிகள் போட்ட வழக்கை வாபஸ் பெற செய்தது கருணாநிதிதான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி. அவர்கள் நினைத்திருந்தால் அனைத்து பிரச்சினையையும் தீர்த்து வைத்திருக்கலாம்.
தமிழர்களின் உரிமையை அடகு வைத்தவர் கருணாநிதி. தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.
இந்த பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டம், உண்ணாவிரதம், பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வரும் 29ம் தேதி வரை நடைபெறவுள்ள சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேருந்து நிலையம், அண்ணா சிலை, எம்ஜிஆர். சிலை, சின்னகடைத்தெரு, தேரடி, சத்திரம், மாதா கோவில் வழியாக ஒற்றுமை திடலை சென்றடைந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகர் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, வெங்கடேசன், அசோக்குமார், சுதாகர், ராஜா, ஜெமீன்வெங்கடேசன், ஜீவா, சக்தி, சகானா காமராஜ், மற்றும் ஓட்டுனர் பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் பேசும் போது, இருக்கையில் சரியான முறையில் அமர்ந்து வாகனத்தை ஓட்ட வேண்டும், வாகனம் ஓட்டும் போது அவசியம் சீட் பெல்ட் அணிய வேண்டும், பாலங்கள், குறுகிய சாலை வளைவுகளில் முந்தக்கூடாது, போக்குவரத்து சின்னங்களை மதித்து சிக்னல் பெற்ற உடன் செல்ல வேண்டும், மஞ்சள் கோட்டை தாண்ட கூடாது, திடீரென தடம் மாறி செல்லக்கூடாது, சாலை விதிமுறைகளை மதித்து வாகனம் ஓட்ட வேண்டும், அரியலூர் மாவட்டம் சாலை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். #tamilnews
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தின் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் புள்ளம்பாடியை சேர்ந்த மகேஷ்வரன் (வயது 27), பூண்டியை சேர்ந்த சக்திவேல் (27), அயன்சுத்தமல்லியை சேர்ந்த இளங்கோவன் (30), வடுக பாளையத்தை சேர்ந்த முரட்டுகாளை (39), கண்டராதித்தத்தை சேர்ந்த பிரபாகரன் (28) உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த பிரபாகரன் மட்டும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், நாற்காலிகள், கட்டில் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கீழையூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர், கடந்தாண்டு விளாங்குடியிலுள்ள பெரிய ஏரியை தூர்வாரி கொள்ள அனுமதி அளிக்குமாறு கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்தார். கலெக்டர் அனுமதி அளித்ததையடுத்து, இவர், அமெரிக்காவில் வசிக்கும் தனது மகள் ஆனந்தவள்ளி, மருமகன் அம்பலவாணன் அளித்த ரூ.3 லட்சத்து 70 ஆயிரம், ஏய்ம்ஸ் இண்டியா பவுன்டேசன் ப்ரம் அமெரிக்கா என்ற அமைப்பு கொடுத்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் செலவில் பெரிய ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தினார்.
இதேபோல் இந்த ஆண்டும் இவர், மகள் அளித்த ரூ.3 லட்சத்தை கொண்டு விளாங்குடியிலுள்ள கால்நடை மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிள்ளையார் ஏரி மற்றும் 2 ஏக்கர் பரப்பளவுள்ள வீரப்பிள்ளை குட்டை, ஏரிகளை தூர்வாரும் பணியை நேற்று முன்தினம் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
இது குறித்து தியாகராஜன் கூறியதாவது:-
மூன்றாம் உலக போர் என்று ஒன்று வருமானால் நீருக்காக தான் வரும். எனவே ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்த அளவு நீரை சேமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற உடன் வீட்டில் உட்கார்ந்திருக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தனது மகளின் உதவியுடன் எனது கிராமத்தில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து தனது மகள் மற்றும் மருமகனுடன் விவாதித்த போது நல்ல முயற்சி என்றனர். மேலும் என்னை ஊக்குவித்ததுடன் பொருளாதார உதவியும் செய்தனர். மேலும் நீர் நிலைகளை தூர்வாருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்த வரையில் நீராதாரத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.






