என் மலர்
செய்திகள்

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள எருத்துகாரன்பட்டி ஊராட்சியில் உள்ளது அண்ணாநகர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் சரி வர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வினியோகம் செய்யக் கோரி காலிக்குடங்களுடன் அரியலூர்-கோவிந்தபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் மற்றும் தாசில்தார் முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், இன்னும் 15 நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அரியலூர்-கோவிந்தபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story