என் மலர்
அரியலூர்
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள செம்பியக்குடி பகுதியில் வெங்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவதன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, செம்பியகுடி சுடுகாட்டு பாதையில் லாரிகளில் பொக்லைன் கொண்டு மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார், மணல் அள்ள பயன்படுத்தி பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், லாரிகளின் டிரைவர்கள் பெரம்பலூர் மாவட்டம் கவுபாளையம் குமார்(30), கோனேரி பானையம் சின்னதம்பி(22) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பொக்லைன் டிரைவரை தேடி வருகின்றனர். இது போன்று தினமும் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி சாலையில் திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியே க.மேட்டுத் தெரு பிரிவு பாதை அருகே வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்த போதுஅந்த லோடு ஆட்டோவில் அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவை ஓட்டி வந்த வைத்திய நாதபுரம் மணிகண்டன்(30) என்பவரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த அல்போன்ஸ், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ஜியாவுல்ஹக் ஆகியோர் சேர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த கதிர்வேல் மனைவி செல்வி என்பவர் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் அல்போன்ஸ், ஜியாவுல்ஹக் ஆகியோர் மூலம் 35 பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப செல்வி முடிவு செய்தார். இதற்காக 35பேரிடம் தலா ரூ.1லட்சம் வாங்கி, அதனை அல்போன்ஸ், ஜியாவுல்ஹக்கிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் கடந்த 5.2.2018 அன்று 35பேரும் ஹாங்காங்கில் வேலைக்கு செல்லும் வகையில் விசா, விமான டிக்கெட் எடுத்து செல்வியிடம் கொடுத்துள்ளனர். அதனை செல்வி ஆய்வு செய்து பார்த்த போது அவை போலி விசா, போலி டிக்கெட் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்திய 2பேரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்வி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராவல்ஸ் உரிமையாளர் அல்போன்சை கைது செய்தனர். தலைமறைவான ஜியாவுல்ஹக்கை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
அரியலூர் மாவட்டம் செந்துறை ரெயில் நிலையத்திற்கும் ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே பெரியாக்குறிச்சி பகுதியில் ரெயில்வே கேட் இருந்தது. இந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
இந்த சுரங்கப்பாதையை கடந்துதான் அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி விடும். இருப்பினும் பொதுமக்கள் சிரமத்துடன் தண்ணீரை கடந்து சென்று வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. நேற்று சிலுப்பனூர் கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக அந்த வழியே சென்றனர்.
சுரங்கப்பாதை அருகே செல்லும் போது அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்ததால் பாதையை கடக்க அச்சமடைந்தனர். இதையடுத்து சுரங்கப்பாதை அருகே அப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் மோட்டார் சைக்கிளை தூக்கிக்கொண்டு ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது மதுரையில் இருந்து சென்னையை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் வருவதை அறியாத இருவரும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்தனர். ரெயில் அருகே வந்ததும் சத்தம் கேட்கவே, அதிர்ச்சியடைந்த இருவரும் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
பின்னர் உயிர் பிழைக்க மோட்டார் சைக்கிளை தண்டவாளத்திலேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அதிவேகமாக வந்த ரெயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரெயில் என்ஜினில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த தீ என்ஜின் மற்றும் அதன் பின்னால் இருந்த 3 பெட்டிகளுக்கும் பரவியது.
உடனடியாக சுதாரித்து கொண்ட என்ஜின் டிரைவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினர். இதையடுத்து பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ரெயிலில் இருந்த தண்ணீரை கொண்டு என்ஜின் மற்றும் பெட்டிகளில் பற்றிய தீயை அணைத்தனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இல்லையென்றால் மிகப் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கும்.
தொடர்ந்து டிரைவர்கள் என்ஜின் மற்றும் பெட்டிகளில் ஏதாவது பழுது ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து, ரெயிலை இயக்கினர். இதன் காரணமாக பெரியாக்குறிச்சியில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
விருத்தாசலம் சென்றதும் என்ஜின் டிரைவர் நடந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் எரிந்த மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
மோட்டார் சைக்கிளின் வாகன பதிவு எண்ணை வைத்து விசாரிக்கும் போது, மோட்டார் சைக்கிள் செந்துறை பகுதியை சேர்ந்த அன்பழகன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை மகன் பழனிவேல் (வயது 27), விவசாயி.
இவருக்கும் தேளூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மகள் மணிமாலாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏற்கனவே மணிமாலாவுக்கு பலருடன் தொடர்பு இருந்துள்ளது.
இதனால் திருமணம் நடந்த நாள் முதல் பழனிவேலுக்கும், மணிமாலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், அவ்வப்போது மணிமாலா மாயமாவதும் தொடர் கதையாக இருந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
இந்தநிலையில் மணி மாலா கடந்த மாதம் விக்கிரமங்கலம் அருகே உள்ள நாயக்கன்காடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து எதுவும் பெறாமல் அவர் திருமணம் செய்து கொண்டதால் பழனிவேல் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரண்டாவது கணவர் மணிகண்டனை பிரிந்த மணிமாலா மீண்டும் முதல் கணவரான பழனிவேலிடம் குடும்பம் நடத்த ரெட்டி பாளையம் கிராமத்திற்கு வந்தார்.
ஆனால் அவரை பழனிவேலின் தந்தை பிச்சை பிள்ளை துரத்தினார். என் மகனுடன் குடும்பம் நடத்த நீ தகுதியானவர் இல்லை, இனிமேல் இங்கு வராதே என்று கூறி திருப்பி அனுப்பினார். தனது மண வாழ்க்கை பாழாய்போய் விட்டதே என்று பழனிவேல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்தநிலையில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்தததால் கடனாளி ஆகிவிட்டதாகவும், மணிமாலாவிடம் இருந்து திருமண செலவு ரூ.2 லட்சத்தை திரும்ப பெற்றுத் தருமாறும் மணிகண்டன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் முதல் கணவரான பழனிவேலை அழைத்து விசாரித்தனர். மேலும் ரூ.2 லட்சம் பணத்தையும் நீயே தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான பழனிவேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் பழனிவேல் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் இன்று காலை ரெட்டிபாளையம் பகுதியில் தனியார் சிமெண்டு ஆலை அருகே உள்ள ஒரு புளியமரத்தில் பழனிவேல் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் ரெட்டிபாளையம் பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார் பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பழனிவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனையில் யாராவது அவரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள சின்னபட்டாகாடு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 காளைகள் பங்கேற்றன. 100 மாடுபீடி வீரர்கள் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஊரின் தெற்குத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளையும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் ஆக்ரோஷத்துடன் மாடுபிடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு சென்றன.
காளைகளை அடக்க முயன்ற போது கோவிலூரை சேர்ந்த ராகுல்(வயது 20), வைப்பூர் ஆசைத்தம்பி(34), தஞ்சாவூர் ஆனந்த்(19) சின்னப்பட்டாகாடு முருகானந்தம்(39), கீழஎசனை புண்ணியமூர்த்தி(24) உள்பட 11 பேர் காயமடைந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரம், மின் விசிறி, சைக்கிள், கட்டில், வேட்டி மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஜல்லிக்கட்டில் விடப்பட்ட காளைகள் திரும்ப திரும்ப விடப்பட்டதாலும், சிறு கன்றுகள் விடப்பட்டதாலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மதியம் 1 மணிக்கு மேல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியை கைவிடக்கோரி கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் இரவு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் புனிதன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
புதிய வீராணம் திட்டத்திற்காக இதே திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் ஜெயலலிதாவால் கைவிடப்பட்டது. இதனை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும். கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்க தீவிரம் காட்டும் அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
மக்களின் பிரச்சினையை அரசுக்கு எடுத்துச் செல்லும் வகையில் போராடுபவர்கள் மீது அரசு பல வழக்குகளை போட்டு வருகிறது. 15 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முற்பட்டால் இங்கு ஒரு தூத்துக்குடி உருவாகும். மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் அனைத்து போராட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாநில குழு உறுப்பினர் சின்னத்துரை, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவை சேர்ந்த ராஜேந்திரன், தனபால், தங்கையன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மே 17 இயக்கத்தை சேர்ந்த பாலாஜி, பா.ம.க. மாவட்ட தலைவர் ரவிசங்கர், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், த.மா.கா. கைலாசம் மற்றும் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் எருத்துகாரன் பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பெரியசாமி என்பரது மகள் வெற்றி செல்விக்கும் (வயது23)பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தைதொடர்ந்து வெற்றி செல்வி மணிகண்டனிடம் ரூ1.20 லட்சம் கடனாக பெற்றார். ஆனால் வாங்கிய கடனை வெற்றி செல்வி திருப்பி கொடுக்க வில்லை.
மணிகண்டன் பணத்தை திருப்பி கேட்ட போது வெற்றி செல்வி மற்றும் அவரது தந்தை பெரியசாமி, தாய் தமிழரசி ஆகிய 3 பேரும் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மணிகண்டன் கயர்லாபாத் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கோர்ட்டின் உத்திரவு படி கயர்லாபாத் போலீசார் வெற்றிசெல்வி, பெரியசாமி, தமிழரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் கடந்த 29-5-18 அன்று வெற்றி செல்வியை மணிகண்டன் கடத்தி சென்று திருமணம் செய்தார். இருவரும் எருத்து காரன்பட்டியில் குடும்பம் நடத்தி வந்தனர். இந் நிலையில் வெற்றிசெல்வி வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்தும் அரியலூர் போலீசார் விரைந்து சென்று வெற்றி செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வெற்றி செல்வியின் தந்தை பெரியசாமி அரியலூர் போலீசில் எனது மகளை மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் சேகர் அவரது மனைவி பரிமளா, மாரிமுத்து அவரது மனைவி வேவுகரசி ஆகிய 5 பேர் சேர்ந்து அடித்து கொன்றுள்ளார்கள் என கூறியுள்ளார்.
இது குறித்து ஆர்.டி.ஓ. சத்திய நாராணன், இன்ஸ் பெக்டர் பழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வெற்றி செல்வி அடித்து கொலை செய்யப்பட்டரா? அல்லது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள த.பொட்டக்கொல்லை அடுத்த வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா (வயது 45). இவர்களது மகள் செல்வி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பிச்சை மகனும் தொழிலாளியுமான ராஜூ (21) என்பவருக்கும், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததோடு, பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும் சத்யா வீட்டில் தனியாக இருக்கும் போது ராஜூவை வரவழைத்து அங்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார்.
சத்யாவுடனான பழக்கத்தைப் பயன்படுத்தி அவரது மகள் செல்வியுடனும் ராஜூ பழகியுள்ளார். இதன் மூலம் அவருடனும் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் செல்வி கர்ப்பமானார்.
மகள் கர்ப்பமானது வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்று எண்ணிய சத்யா, ராஜூவுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதன் மூலம் ராஜூவுடனான தனது கள்ளக்காதலையும் நீட்டித்து கொள்ளலாம் என்று எண்ணினார். அதன்படி நடந்த சம்பவங்களை மறைத்து ராஜூவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செல்வியை சத்யா திருமணம் செய்து வைத்தார்.
இதையடுத்து செல்வியும், ராஜூவும் அங்கு தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே மகளை ராஜூவுக்கு திருமணம் செய்து வைத்த பிறகும், சத்யா தனது கள்ளக்காதலை கைவிடவில்லை. மகள் இல்லாத நேரத்தில் ராஜூ வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராஜூவும், தாய் சத்யாவும் உல்லாசமாக இருப்பதை செல்வி நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அவர், எப்படியாவது தனது கணவரை, தாயிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று முடிவு செய்து, வடகடலில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு தஞ்சைக்கு தனது கணவரை அழைத்து சென்று அங்கு அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.
மேலும் தனது தாயுடனான பழக்கத்தை கைவிடுமாறும் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜூ, செல்வியிடம் ஏன் இங்கு நீ குழந்தையுடன் கஷ்டப்படுகிறாய், உனக்கு துணையாக உனது தாய் சத்யாவை வேண்டுமென்றால் அழைத்து வா என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக இருவரும் நேற்று தஞ்சையில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு வடகடலுக்கு வந்து விட்டனர். அங்கு வந்ததும் செல்வியை அவரது தாய் சத்யா, சத்யாவின் தாய் சாந்தி, ராஜூ மற்றும் அவரது தாய் மாரியம்மாள் ஆகியோர் கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதில் சிக்கி தவித்த செல்வி, நடந்த சம்பவம் குறித்து அவரது தந்தை பாண்டியனிடம் தெரிவித்தார். மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன், செல்வியை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ராஜூ, சத்யா, சாந்தி, மாரியம்மாள் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சுசீலா(60). இவர் விளந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இதனால் பழனிசாமியும், அவரது மனைவி சுசீலாவும் விளந்தை கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 2-ந் தேதி மகளை பார்க்க சென்னை சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பழனிசாமியின் வீடு திறந்து கிடந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஒரு அறையில் இருந்த 2 பீரோக்கள் திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. இதுகுறித்து சென்னையில் உள்ள பழனிசாமியை செல்போன் மூலம் போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் படுக்கை அறையில் நகைகள், பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு லாக்கர் உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது நகை, பணம் இருந்த இரும்பு லாக்கர் மாயமாகி இருந்தது. மீண்டும் பழனிசாமியை தொடர்பு கொண்ட போலீசார், உடனே புறப்பட்டு வருமாறு கூறினர். அதன்பேரில் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டார்.
மர்ம நபர்கள் வீட்டின் முன்புற இரும்பு கேட்டின் மீது ஏறி குதித்து, கதவின் தாழ்ப்பாளை வெளியே இருந்து ஜன்னல் வழியாக கம்பியால் நெம்பி உடைத்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஒரு அறையில் இருந்த 2 பீரோக்களை திறந்து நகை, பணம் உள்ளதா? என்று பார்த்துள்ளனர். அதில், எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் படுக்கை அறைக்கு சென்று நகை-பணம் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாமல் போகவே, இரும்பு லாக்கரை அப்படியே தூக்கி சென்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மோப்ப நாய் மலரை வரவழைத்தனர். அது திருட்டு நடந்த வீட்டிலிருந்து ஓடி கொளப்பாடி சாலையில் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையில் சென்னையில் இருந்த பழனிசாமி, தனது மனைவி சுசீலாவுடன் நேற்று மாலை ஆண்டிமடத்திற்கு வந்தார்.
அவரிடம் போலீசார் வீட்டில் திருட்டு போன இரும்பு லாக்கரில் எவ்வளவு நகை, பணம் இருந்தது என்று விசாரித்தனர். லாக்கரில் வீடு மற்றும் நில பத்திரங்கள், 19 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் மற்றும் ¼ கிலோ வெள்ளி பொருட்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து பழனிசாமி கொடுத்த புகாரின்பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






