என் மலர்tooltip icon

    அரியலூர்

    செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு பகுதியில் பெண் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி வந்தார். இதை பார்த்த பொதுமக்கள் குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து அப் பெண்ணை தாக்கினர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது கோட்டைகாடு. இந்த பகுதி யில் இன்று காலையில் சுமார் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி வந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் அவர்களிடம் பேச வில்லை. அந்த பெண்ணின் மணிபர்சை பார்த்த போது அதில் 7 பவுன் தங்க நகைகள் இருந்தது. இதனால் அந்த பெண் குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் அவரை சராமாரியாக தாக்கினர். 

    பின்னர் அங்குள்ள கோவிலில் அவரை அமர வைத்து தளவாய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அந்த பெண் இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசினார். தமிழ் தெரியவில்லை. 

    மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 20 ரூபாய் நோட்டு ஒரு கட்டு இருந்தது. மொத்தம் ரூ. 2 ஆயிரம் இருந்தது . அவரை பார்க்க வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் தெரிகிறது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. 
    மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர்  அங்குள்ள வெள்ளாற்றில்  மணல் அள்ளி வருகின்றனர். மணல் அள்ளக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்தும்,  தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. மேலும் தங்களுக்கு ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அப்பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    இந்தநிலையில் நேற்று வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த  இளம்பரிதி, வீரமுத்து ஆகியோரின் வண்டிகளை செந்துறை தாசில்தார் உமாசங்கரி மற்றும் அதிகாரிகள் பிடித்ததோடு, 2பேர் மீதும் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தளவாய்  போலீசார் 2பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதையறிந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் இன்று காலை தளவாய் தனியார் சிமெண்ட் ஆலை அருகே கடலூர் பெண்ணாடம் சாலையில் திடீரென மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதன் காரணமாக  அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்த தகவல் அறிந்ததும்  தளவாய் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)  மோகன் மற்றும் வருவாய் அதிகாரி செந்தில் ஆகியோர் சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தங்களுக்கு முறையாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். இளம்பரிதி, வீரமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள்- போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து  தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    குழந்தை இல்லாத ஏக்கத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். கைத்தறி தொழிலாளி. இவரது மகள் கவிதா(வயது 29). இவருக்கும், குஞ்சுவெளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சீமானுக்கும்(34) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

    இதனால், சீமான் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். குழந்தை இல்லாத ஏக்கம் ஒரு புறம், கணவருடன் பிரச்சினை என கவிதா தவித்து வந்தார். இதனால், மனவேதனை அடைந்த அவர், ஆறுதலுக்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், ராமலிங்கம் தனது வீட்டிற்கு அருகே வாடகை வீட்டில் மகள் கவிதா, மருமகன் சீமானை குடி வைத்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சீமான் வழக்கம்போல மது குடித்துவிட்டு வந்து, கவிதாவிடம் தகராறு செய்தார். இதனால், மனமுடைந்த கவிதா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடி வந்து சீமான், கவிதாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கணவன்-மனைவி இருவர் மீதும் பற்றி எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கவிதா மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    சீமான் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் படுகாயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்-தேளூர்- செந்துறை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மற்றும் தேளூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர், மணக்குடி, குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளூர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, தாமரைக்குளம், பொய்யாதநல்லூர், கோவிந்தபுரம், ஓ.கூத்தூர், ஒட்டக்கோவில், சீனிவாசபுரம்.

    கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளூர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரிய திருக்கோணம், செட்டித்திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆச்சனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு, மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி.

    மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    இலையூர் மேலவெளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் மேலவெளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சென்ற கல்வியாண்டில் 5 மாணவர்களை மட்டுமே வைத்து பள்ளி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பெற்றோர்கள் மற்றும் அரசு பள்ளி மீட்புக்குழு இயக்கத்தினர் முயற்சியில் கிராமத்தில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி முதல் கட்டமாக 13 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளனர்.



    மேலும் சென்ற ஆண்டு பள்ளியில் இருந்த தலைமை ஆசிரியை சரோஜா என்பவர் ஓய்வு பெற்று விட்டார். இதையடுத்து பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாததால், கோரியம்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளி தலைமையாசிரியை வளர்மதி இலையூர் மேலவெளி கிராமத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியையாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கோரியம்பட்டி பள்ளியில் சென்ற கல்வியாண்டில் இரண்டு 5-ம் வகுப்பு மாணவர்களை மட்டும் வைத்து 2 ஆசிரியர்களுடன் பணி புரிந்து வந்தார். தற்போது இந்த ஆண்டு அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால், இலையூர் மேலவெளி பள்ளிக்கு தலைமை ஆசிரியை பணிக்கு வளர்மதி விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

    இதனை அறிந்த இலையூர் மேலவெளி பொதுமக்கள், பெற்றோர்கள் எங்கள் ஊர் பள்ளிக்கு பெண் தலைமையாசிரியை வளர்மதி வேண்டாம் என கூறி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து வளர்மதி இலையூர் மேலவெளி பள்ளிக்கு செல்வதற்காக அதிகாரிகளை சந்திக்க சென்றதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளியின் கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டு பள்ளி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், பொதுமக்களிடம் உங்களது கோரிக்கையை மனுவாக எழுதி தரும் படி கூறினார். அதன்படி, பொதுமக்கள் மனு எழுதி கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட கிராம நிர்வாக அதிகாரி, இதுகுறித்து கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இருப்பினும் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம், ஆண்டிமடம் உதவி தொடக்க கல்வி அதிகாரி மதியழகன், வருவாய் ஆய்வாளர் திலகவதி ஆகியோர் அரசு பள்ளி மீட்புக் குழு இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையில், எங்களது ஊரில் உள்ள பள்ளிக்கு ஒரு ஆண் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். தற்பொழுது பணியாற்றி கொண்டிருக்கின்ற ஆசிரியை மட்டுமே போதும் எனவும் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் நடைமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் பாதசாரிகளுக்காக நடைமேடை அமைக்க வேண்டும். அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சாலைகளிலும் நடைமேடை அமைக்க வேண்டும்.

    மேலும் நடைமேடைகளில் தடுப்பு கம்பிகளும் அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்து அரியலூர் நகரை அழகு படுத்த நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். துக்க வீட்டிற்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரகுபதி (வயது 22). அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கத்தின் மகன் இளவரசன்(27). இவரும், ரகுபதியும் உறவினர்கள் ஆவர். இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். நேற்று மதியம் அஸ்தினாபுரம் அருகே காட்டுபிரியங்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிப்பதற்காக ரகுபதியும், இளவரசனும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    ரகுபதி மோட்டார் சைக்கிளை ஓட்ட, பின்னால் இளவரசன் அமர்ந்திருந்தார். அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் மாதிரி பள்ளி அருகே வந்த போது, முன்னால் சென்ற டிப்பர் லாரியை ரகுபதி முந்தி சென்றார். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி ரகுபதியும், இளவரசனும் சாலையில் விழுந்தனர்.

    இதற்கிடையில் பின்னால் வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது ஏறி சென்றது. இதில் ரகுபதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளவரசனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளவரசனும் உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்த ரகுபதி, இளவரசனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரகுபதியின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. மேலும் சம்பவ இடத்திற்கு கயர்லாபாத் போலீசாரும் வந்தனர். அவர்கள் ரகுபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக தூக்கினர்.

    அப்போது அங்கிருந்த உறவினர்கள் ரகுபதியின் உடலை போலீசார் எடுக்கவிடாமல் தடுத்து, இந்த வழியாக லாரிகள் செல்ல அனுமதிக்கப்படுவதால் விபத்து அதிகளவில் நடக்கிறது. எனவே லாரி போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாலையை அகலப்படுத்த கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பின்னர் ரகுபதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். விபத்தில் இறந்த 2 பேருக்கும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    குழந்தைகளை தனிமைப்படுத்தாமல், அவர்களிடம் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி தெரிவித்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம செவிலியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ச்சி பயிற்சி முகாம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி கலந்து கொண்டு பேசியதாவது:-

    18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன. 18 வயதிற்குட்பட்ட குழந்தை பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு முதன்மை தேவையான மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும். இதற்கு முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) தேவையில்லை. சிகிச்சைக்கு பின்பு குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ அலுவலரால் உளவியல் ரீதியான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

    பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் நிவாரண உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும். குழந்தைகளை தனிமைப்படுத்தாமல், அவர்களிடம் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தலைமை நீதித்துறை குற்றவியல் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், குற்றவியல் நீதிபதியும், முதன்மை நீதிபதியுமான மகாலெட்சுமி, துணை இயக்குனர் (சுகா தாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி முகமது யூனுஸ்கான், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாதென அரசுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்த இருக்கிறோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
    திருமானூர்:

    அரியலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் திருமானூர் கொள்ளிடம் பாலத்தில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினரை சந்தித்தார். 

    அப்போது, திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் செய்து வரும் போராட்டங்களை கேட்டறிந்த அவர், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாதென காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து, 

    கொள்ளிடம் நீராதாரக்குழு மற்றும் காங்கிரஸ் சார்பில் திருமானூர் பஸ் நிலையம் அருகே திருநாவுகரசருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    செந்துறை அருகே கல்லூரி செல்ல விரும்பாத மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மகள் வனஜா (வயது 18). இவர் சமீபத்தில் பிளஸ்-2 முடித்தார். இதனையடுத்து மகள் வனஜாவை முனியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சி செய்தார்.

    ஆனால் வனஜா தனக்கு கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை என்று தந்தையிடம் கூறியுள்ளார். இதனை முனியன் கண்டித்ததால் மனமுடைந்த வனஜா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வனஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குறித்து வாட்ஸ்அப்பில் இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.#ThoothukudiShooting #SterliteProtest
    அரியலூர்:

    அரியலூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் பால்பாண்டி. இவர் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குறித்து இழிவான தகவல்களை பரப்பியுள்ளார்.

    மேலும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் செயல்பாட்டை நியாயப்படுத்தியும் கருத்து வெளியிட்டு உள்ளார். வாட்ஸ்அப் மூலம் பரப்பிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளது.

    இதுகுறித்து அறிந்த அரியலூர் நகர வக்கீல் சங்க தலைவர் மாரிமுத்து, துப்பாக்கி சூடு குறித்து இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் பால்பாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அரியலூர் போலீசில் புகார் மனு அளித்தார்.

    ஆனால் இதில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரியலூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி, வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பிய ஆயுதப்படை போலீஸ்காரர் பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ் பெக்டர் சுபா ஆகியோர், பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThoothukudiShooting #SterliteProtest
    திருமண வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் பட்டு சேலை ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவரது இரண்டாவது மகன் செந்தில்குமாருக்கு நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் அனை வரும் நலுங்கு வைப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மண்டபத்திற்கு சென்றனர். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் பட்டு சேலை ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.

    பின்னர் மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு பணம், பட்டு சேலையை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இதையறிந்த மலேசியாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை உறவினர் ஒருவர் அரியலூர் கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு செந்துறையில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடை பெறுகிறது என்று கூறியுள்ளார். மேலும் போலீசார் நட வடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறினார். இதுகுறித்து உரிய விவரங்களை அனுப்பி வையுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார். கலெக்டரிடம் புகார் தெரிவிக்கும் ஆடியோ சமூக வலைதளங் களில் பரவி வருகிறது. 
    ×