என் மலர்
அரியலூர்
உச்சநீதிமன்ற தீர்ப்பானது ஆதிதிராவிடர்- பழங்குடியினர் வன்கொடுமைகள் (எஸ்.சி, எஸ்.டி.) தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளது. எனவே வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தி அவசர சட்டம் இயற்ற வேண்டும். இதனை அரசியல் சாசனம் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் ஆதிதிராவிட- பழங்குடியின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உண்மை நிலையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ரெயிலை மறிப்பதற்காக அரியலூர் கல்லூரி சாலையில் இருந்து அரியலூர் ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது அங்கு ரெயில் நிலைய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில், அரியலூர் போலீசார் இரும்பு தடுப்புவேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் ரெயிலை மறிப்பதற்காக மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதில் 12 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 110 பேரையும் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கோக்குடி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தில் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 550-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் சமயபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் (வயது 31), மலையப்பநகரை சேர்ந்த ராமு (26), திருவெறும்பூரை சேர்ந்த தமிழ்(24), கோக்குடியை சேர்ந்த ரோஸ் (53), செல்வகுமார் (33) உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த செல்வகுமார் மட்டும் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் கட்டில், நாற்காலிகள், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை காண திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோக்குடி பொதுமக்கள் செய்திருந்தனர்.
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் தத்தனூர் மாந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், அதே பகுதியில் உள்ள ஓடையில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த டிரைவர் அன்பழகனை (வயது 40) கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் கீழப்பளூர் அருகே வாரணவாசி திருச்சி சாலையில் பஸ் நிழற்குடை உள்ளது. இன்று காலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக நிழற்குடையின் கீழ் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி நிழற்குடைக்குள் புகுந்தது. இதில் அங்கு நின்றிருந்த அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி மருதமுத்து (வயது 70), இளங்கோவன் (55) ஆகியோர் மீது மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பயணிகள் திருநாவுக்கரசு, சாமிநாதன், கொளஞ்சி, பள்ளி மாணவன் விக்கிரமதி (15) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அரியலூர் டி.எஸ்.பி. மோகன்தாஸ் மற்றும்கீழப்பளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் , சம்பவம் நடந்ததும் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். காரில் கட்சி கொடி கட்டப்பட்டுள்ளது. இதனால் விபத்தை ஏற்படுத்திய நபர் அரசியல் கட்சி பிரமுகராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
விபத்தில் பலியான இளங்கோவனின் பேரன் விக்கிரமதி. இவன் கீழப்பளூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறான். அவனை பஸ் ஏற்றி விடுவதற்காக இளங்கோவன் பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தார். இந்தநிலையில் பேரன் கண் முன்பே இளங்கோவன் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், வாரணவாசி பயணிகள் நிழற்குடை அருகே வேகத்தடை அமைக்க கோரியும் அப்பகுதி பொதுமக்கள் திடீரென அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தூய்மை இந்தியா திட்டத்தில் ஆண்டுதோறும் தூய்மையான நகரங்களை அவற்றின் சுகாதார செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் ஆய்வு செய்து தரநிலை அறிவிக்கப்படுவதோடு, சிறந்த நகரங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் “சுவச்சர் வக்சான் 2018’’ தூய்மை நகரங்கள் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு, நாடு முழுவதும் 4,203 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு தரநிலை வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தில் தெற்கு மண்டலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு குறைவான மக்கள் தொகை கொண்டுள்ள நகரங்களில் 1,113 நகரங்களுக்கு தரவரிசை வெளியிடப்பட்டது. தமிழக அளவில் 637 பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் இந்த போட்டியில் பங்கேற்றன. இதில் அரியலூர் நகராட்சி 2,194 புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 2-ம் இடத்தை பெற்றுள்ளது.
இதேபோல் தென்னிந்திய அளவில் அரியலூர் நகராட்சி 36-வது இடத்தை பெற்றுள்ளது. நடப்பாண்டில் அரியலூர் நகராட்சி திறந்தவெளி கழிப்பிடமில்லா நகராட்சியாகவும் தரச்சான்றை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது.
அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 28 ஆயிரத்து 902 பேர் வசித்து வருகின்றனர்.
தூய்மை இந்தியா திட்டத்தில் மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்த நகராட்சிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் அருகில் உள்ள வாலாஜாநகரம் மற்றும் எருத்துகாரன்பட்டி ஊராட்சிகளையும் இணைத்து அரியலூர் நகராட்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று நகர மேம்பாட்டு குழுவினர் விரும்புகின்றனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழப்பளூர் வாளகுடியை சேர்ந்தவர் தனபால் (வயது 61). இவரது மனைவி பானுமதி. இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை ஏலாக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். சத்திரத்து ஏரி - ஆண்டவர் கோவில் இடையே செல்லும் போது ஏலாக்குறிச்சி தனியார் மருத்துவமனை ஊழியர் ஞானபிரகாசம் (55) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், தனபால் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் தனபால், ஞானபிரகாசம் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திருமானூர் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பானுமதி சிகிச்சைக்காக தஞ்சைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருமானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
பாளையபாடி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாளை.திருநாவுக்கரசு கலெக் டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில், அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதித்தம் கிராமத்தில் கண்டராதித்த சோழ மன்னரால் 416 ஏக்கர் பரப்பளவில் வெட்டப்பட்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்றது. ஆனால் தற்போது இந்த ஏரி முழுவதும் தூர்ந்து போய் உள்ளது. இதனால் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை உள்ளது. மன்னரால் வெட்டப்பட்டதற்கு பின்னர் இதுவரை இந்த ஏரி தூர்வாரப்படவில்லை. எனவே, இந்த ஏரியை, தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, கரைகளில் பூங்கா அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரியலூரில் உள்ள பொதுநல சங்கத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், அரியலூரில் உள்ள செட்டி ஏரி வரத்து வாய்க்கால் மற்றும் 100 அடி சாலையை ஆக்கிரமித்து குடியிருப்பு வீடுகளை கட்டியுள்ளது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். இங்குள்ள 48 ஏக்கரில் மனைப்பிரிவு அமைத்து வீடுகளை கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செட்டி ஏரிக்கு நீர் வரத்துக்கு ஆதரமாக இருந்த குரும்பன்சாவடி வரத்து வாய்க்கால் முற்றிலும் ஆக்கிரமித்துள்ளதால், ஏரிக்கு வரவேண்டிய நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அருகிலுள்ள குடியிருப்புவாசிகள், தங்களது இடம் சாலை வரை உள்ளது என்று கூறி குத்துக்கல்லை நட்டு வைத்துள்ளனர். இதனால் சாலை குறுகியுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்திடமும், அரியலூர் நகர வளர்ச்சி சங்கத்தினர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 961 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்லில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அண்ணாசிலையில் இருந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், கட்சியினர் ஊர்வலமாக அரியலூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் பஸ்நிலைய வாசலில் அமர்ந்து தமிழக கவர்னரை கண்டித்தும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 61 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனை வரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர். மறியல் போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ், இளைஞர் அணி தலைவர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, சவுந்தர், நகர செயலாளர் முருகேசன், கதிரவன், ராஜேந்திரன், விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






