search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 13 பேர் காயம்
    X

    திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 13 பேர் காயம்

    திருமானூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 காளைகள் பங்கேற்றன. 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். முதலில் தூய மங்கள அன்னை ஆலயத்தின் காளை அவிழ்த்து விடப்பட்டது.

    இதையடுத்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிவந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களை மிரட்டி சென்றன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன.

    அடக்க முயன்றபோது காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். இதில் கல்லணை தோகூரை சேர்ந்த பாஸ்கர்(வயது 38), புள்ளம்பாடியை சேர்ந்த ஆல்வின்(23), வரகூரை சேர்ந்த ரஞ்சித்(21), திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்(35) உள்பட 5 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், நாற்காலி, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை திருமானூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர். 
    Next Story
    ×