என் மலர்
உத்தரப் பிரதேசம்
- பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் மாரடைப்பால் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
- இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் நெய்டா செக்டார் 21ஏவில் உள்ள ஸ்டேடியத்தில் 52 வயதான நபர் ஒருவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக விளையாட்டு வீரர்கள் உடனடியாக ஸ்டடியம் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழு நபரின் உயிரை காப்பாற்ற முதலுதவி செய்தனர். அதற்குள், ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் மாரடைப்பால் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து, நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து செக்டார் 24 காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி அமித் குமார் கூறுகையில், "இறந்தவர் நொய்டா, செக்டார் 11ல் வசிக்கும் மகேந்திர ஷர்மா என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடுவதற்காக மைதானத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
- ராஜ்கேசரின் உடலை அப்பகுதியில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டு தொட்டியில் மறைத்ததையும் அரவிந்த் ஒப்புக்கொண்டார்.
- அரவிந்த் காதலியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மகேவா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண் ராஜ்கேசர் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தருமாறு ராஜ்கேசரின் குடும்பத்தினர் யமுனாபர் கர்ச்சனா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளின் பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தினர். இதில் ராஜ்கேசர் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபருடன் போனில் பேசியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அரவிந்த், ராஜ்கேசரை தீவிரமாக காதலித்து வந்ததும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
மேலும் ராஜ்கேசரின் உடலை அப்பகுதியில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டு தொட்டியில் மறைத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அரவிந்தை கைது செய்தனர்.
பின்னர் அவரது வீட்டு தொட்டியில் இருந்து ராஜ்கேசர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரவிந்த் காதலியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரபல தாதா முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளர் சஞ்சீவ் லக்னோ.
- இவர் லக்னோ கோர்ட்டு வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
லக்னோ:
காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வாரணாசியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கான கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
கடந்த மே 19-ம் தேதி விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் பிரபல தாதா முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
நில அபகரிப்பு, மிரட்டல் மற்றும் கொலை உள்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா முக்தார் அன்சாரி, கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளரான சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா லக்னோ கோர்ட் வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கறிஞர்கள் போல் வேடமணிந்து வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்படும் ஜீவா, பா.ஜ.க. தலைவர் பிரம்மதத்தா திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். ஜீவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- அடுத்த நாள் காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் புதிய ஜோடி வெளியே வரவில்லை.
- உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.
லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது மகன் பிரதாப் யாதவுக்கும் (22), அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி (20), என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த மே 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
மறுநாளான மே 31-ம் தேதி புதுமண தம்பதி வீட்டிற்கு வந்தனர். அன்றிரவு தம்பதியரை மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்த நாள் காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் புதிய ஜோடி வெளியே வரவில்லை. உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.
உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் சடலமாகக் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில், இருவரும் உயிரிழந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
தம்பதியின் உடலில் எந்தக் காயமும் இல்லாத நிலையில் பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில் புதிய தம்பதி மாரடைப்பால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை என்பதால் மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய ஜோடிக்கு இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், புதிய தம்பதி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நாளில் புதிய தம்பதியினர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- ராகுல் காந்தி, இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
லக்னோ :
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, கோடிக்கணக்கான தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலை, அவரது வாழ்க்கைக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் கூறி இருப்பது கசப்பான உண்மை ஆகும். இதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் பிற கட்சிகள்தான் பொறுப்பு ஆவார்கள்" என கூறி உள்ளார்.
- 1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
- நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
90 வயது முதியவருக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 1981-ம் ஆண்டு பத்து பேரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர குற்றவாளிக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொலை சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக மெயின்பூரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு ஃபிரோசாபாத் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
பத்து பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், சிறை தண்டனை மேலும் 13 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாக பிரிஜ் பூஷன் சிங் கூறினார்.
- போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கைகளை மாற்றி வருகிறார்கள்.
கோண்டா:
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இப்போராட்டத்தின் உச்சகட்டமாக மல்யுத்த வீராங்கனைகள் தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக அறிவித்து ஹரித்வார் சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் மனதை மாற்றிய அவர்கள், பதக்கங்களை கங்கையில் வீசாமல் திரும்பினர். தங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து மறுத்துவருகிறார். அத்துடன், தனக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையை முடிக்கட்டும். முடிவு எப்படி இருந்தாலும் அதன்படி நடப்பேன். எனவே, தேவையில்லாத கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
ஜனவரி 18ம் தேதி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது, சில கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் சில நாட்களில் கோரிக்கைகளை மாற்றினர். அதன்பிறகும் கோரிக்கைகளை மாற்றுகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்? எப்போது செய்தேன்? என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் கேட்டேன். ஆனால், அவர்களிடம் இருந்து இதுகுறித்து உறுதியான அறிக்கை எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை நிறைவடைந்ததும் அரசு நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.
- மல்யுத்த வீரர், வீராங்கனைகள் என்னை மல்யுத்தத்தின் கடவுள் என்றனர்.
- இரவும் பகலும் மல்யுத்தமே வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நான்.
லக்னோ :
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் கூறி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி நகரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரிஜ் பூஷன் பேசியதாவது:-
'எனக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்கூட, நானே தூக்கில் தொங்குவேன் என்று மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். கடந்த 4 மாதங்களாக, என்னை தூக்கிலிட வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு என்னை தூக்கிலிடவில்லை. எனவே அவர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசச் சென்றார்கள். கங்கையில் பதக்கங்களை வீசுவதால் பிரிஜ் பூஷன் தூக்கிலிடப்பட மாட்டார். உங்களிடம் சான்று இருந்தால் அதை கோர்ட்டிடம் கொடுங்கள். கோர்ட்டு என்னை தூக்கில் போட்டால், அதை ஏற்றுக்கொள்கிறேன்.
அனைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் எனது குழந்தைகள் போன்றவர்கள். நான் அவர்களை குறைசொல்ல மாட்டேன். அவர்களின் வெற்றியில் எனது ரத்தமும், வியர்வையும்கூட இருக்கிறது.
சிறிதுகாலம் முன்புவரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் என்னை மல்யுத்தத்தின் கடவுள் என்றனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றபோது இந்தியா உலகளவில் 20-வது இடத்தில் இருந்தது. இன்று எனது கடின உழைப்பின் காரணமாக, உலகின் 5 சிறந்த மல்யுத்த அணிகளில் ஒன்றாக இந்தியா உருவாகியுள்ளது.
இரவும் பகலும் மல்யுத்தமே வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நான். மல்யுத்தத்தில் இந்தியா வென்ற 7 ஒலிம்பிக் பதக்கங்களில் 5 பதக்கங்கள் எனது பதவி காலத்தில் வந்தவை. எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.
அயோத்தியில் வரும் 5-ந்தேதி நான் நடத்தும் 'ஜன் சேத்னா மகா பேரணி'யில் எல்லோரும் திரளாக பங்கேற்க வேண்டும்.'
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆனந்த் திடீரென, எரிந்துக் கொண்டிருந்த சிதை மீது விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.
- பலத்த காயமடைந்த ஆனந்த் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
உத்தரப் பிரதசேம் மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள நாக்லா கங்கர் காவல் நிலையப் பகுதியை சேர்ந்தவர் அசோக் (42). புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அசோக் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில், அசோக்கின் இறுதிச் சடங்குகள் நேற்று காலை 11 மணியளவில் யமுனைக் கரையில் நடைபெற்றன. இறுதியாக, அசோக்கின் சிதைக்கு தீ மூட்டிவிட்டு அங்கிருந்தவர்கள் சிறுது நேரத்தில் வெளியேறத் தொடங்கினர்.
அப்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த அசோக்கின் நெருங்கிய நண்பரான ஆனந்த் திடீரென, எரிந்துக் கொண்டிருந்த சிதை மீது விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பலத்த காயமடைந்த ஆனந்தை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்னர்.
அங்கு ஆனந்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லும்படி கூறினர். ஆனால் ஆனந்த் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ராம்ஜானகி பாதை, பக்தி பாதை போன்றவற்றுக்கான செயல்திட்டம் தயாராகி விட்டது.
- விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
லக்னோ:
அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் மிக நீண்ட போராட்டங்களுக்குப்பிறகு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி அயோத்தி நகர் முழுவதும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு அயோத்தியில் நடந்து வரும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில் சகாதத்கஞ்சில் இருந்து நயா காட் செல்லும் 13 கி.மீ. நீள ராம பாதைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.
ராம்ஜானகி பாதை, பக்தி பாதை போன்றவற்றுக்கான செயல்திட்டம் தயாராகி விட்டது. ராமஜென்ம பூமி பாதை 30 மீட்டரும், பக்தி பாதை 14 மீட்டரும் அகலம் கொண்டவை.
விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
ராமஜென்ம பூமி மற்றும் அனுமன்ஹார்கி கோவில் செல்லும் பக்தர்கள் எளிதில் சென்று வருவதற்கு சாலை வசதிகள் முக்கியமானது என்பதால் அந்த பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.
பிரமாண்டமான கோவில் மற்றும் அதற்கான வசதிகளுக்காக அயோத்தி நகரின் இந்த விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வியாபாரிகள் எத்தகைய தயக்கமும் இன்றி தங்கள் கடைகள் இருக்கும் இடத்தை வழங்கி வருகின்றனர்.
இதற்காக வழங்கப்படும் இழப்பீடு தொகை தொடர்பாக புகார்கள் எதுவும் இல்லை. அயோத்தி நகர விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்படும் வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகங்களில் கடைகள் ஒதுக்கப்படும்.
ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக ஏராளமான கடைகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இந்த மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- திருமண விழாவில் சுமார் 200 பேர் உணவு சாப்பிட்ட நிலையில் 70 பேருக்கு உடல் நலம் பாதிப்பு.
- சிலரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்னோஜ் கிராமத்தில் நடைபெற்ற திருமண விருந்து ஒன்றில் சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 70 பேருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமண விழாவில் சுமார் 200 பேர் உணவு சாப்பிட்ட நிலையில் அங்கு பரிமாறப்பட்ட ரசகுல்லா இனிப்பை சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இதில், அர்சூ (1), யூசுப் (2), ஷிஃபா (4), அஸ்ரா (5), சாசியா (7), இர்பான் கான் (48), சுல்தான் (52), மற்றும் ரியாசுதீன் (55) ஆகியோரின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் சக்தி பாசு கூறுகையில், "மாவட்ட மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளின் உடல் நிலை சீராக இருக்கிறது. சிலர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.
- மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்லும் என தெரிவித்துள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா வந்தனர்.
அப்போது அங்குள்ள அஸ்ஸி காட் என்ற தெரு ஒன்றில் நடந்து சென்ற போது தெரு நாய்கள் சில ஒன்று சேர்ந்து பெண் நாய் ஒன்றை விரட்டி துன்புறுத்தியதை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி வேரா லாசரெட்டி பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தெரு நாய்களை விரட்டி அதன் பிடியில் சிக்கிய பெண் நாயை மீட்டார்.
இதே போல வாரணாசியில் உள்ள முன்சிகாட் பகுதியில் நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டெல்பால் என்ற பயணி சென்ற போது அங்கும் ஒரு பெண் நாயை தெரு நாய்கள் கடித்து தாக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தெரு நாய்களை விரட்டி, பெண் நாயை மீட்டுள்ளார். பின்னர் வாரணாசி தளமாக கொண்டு இயங்கும் அனிமோடெல் கேர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நாடியுள்ளனர். இந்த நிறுவனம் நோய் வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற தெரு நாய்களை மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக இயங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தினர் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளால் மீட்கப்பட்ட 2 பெண் நாய்களுக்கும் மோதி, ஜெயா என பெயரிட்டு வளர்த்தனர். மேலும் அந்த 2 நாய்களுக்கும் தேவையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டது.
இதன் பயனாக பூரண குணமடைந்த மோடி என பெயரிடப்பட்ட நாயை இத்தாலியை சேர்ந்த வேரா லாசரெட்டி தத்தெடுத்தார். இதேபோல ஜெயா என பெயரிடப்பட்ட நாயை நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டேல்பால் தத்தெடுத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த 2 நாய்களையும் அவற்றை தத்தெடுத்தவர்களுடன் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை அனிமோடெல் கேர் டிரஸ்ட் மேற்கொண்டது. அதன்படி 2 நாய்களுக்கும் பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டது. அவற்றை இத்தாலி மற்றும் போர்ச்சுகல்லுக்கு அனுப்பி உள்ளனர்.
6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.
இதேபோல மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்ல உள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுண்டிலிப் சென்குப்தா தெரிவித்துள்ளார்.






