search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போலீசார் விசாரணையை முடிக்கட்டும்.. தயவுசெய்து தேவையற்ற கேள்விகளை கேட்காதீர்கள்: பிரிஜ் பூஷன் சிங்
    X

    போலீசார் விசாரணையை முடிக்கட்டும்.. தயவுசெய்து தேவையற்ற கேள்விகளை கேட்காதீர்கள்: பிரிஜ் பூஷன் சிங்

    • குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாக பிரிஜ் பூஷன் சிங் கூறினார்.
    • போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கைகளை மாற்றி வருகிறார்கள்.

    கோண்டா:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இப்போராட்டத்தின் உச்சகட்டமாக மல்யுத்த வீராங்கனைகள் தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக அறிவித்து ஹரித்வார் சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் மனதை மாற்றிய அவர்கள், பதக்கங்களை கங்கையில் வீசாமல் திரும்பினர். தங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.

    இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து மறுத்துவருகிறார். அத்துடன், தனக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையை முடிக்கட்டும். முடிவு எப்படி இருந்தாலும் அதன்படி நடப்பேன். எனவே, தேவையில்லாத கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

    ஜனவரி 18ம் தேதி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது, சில கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் சில நாட்களில் கோரிக்கைகளை மாற்றினர். அதன்பிறகும் கோரிக்கைகளை மாற்றுகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்? எப்போது செய்தேன்? என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் கேட்டேன். ஆனால், அவர்களிடம் இருந்து இதுகுறித்து உறுதியான அறிக்கை எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விசாரணை நிறைவடைந்ததும் அரசு நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×