என் மலர்
உத்தரப் பிரதேசம்
- இந்த சமோசா 12 கிலோ எடையுள்ளது.
- ஒரு ‘பாகுபலி’ சமோசாவை தயாரிப்பதற்கு 6 மணி நேரம் பிடிக்கிறது.
மீரட்
நீங்கள் பல பிரமாண்ட வடிவங்களை பார்த்திருக்கலாம். ஆனால் 12 கிலோ எடையுள்ள பிரமாண்ட சமோசாவை பார்த்ததுண்டா?
அதை பார்க்கவும், ருசிக்கவும் வேண்டும் என்றால், உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள 'கவுஷல் சுவீட்ஸ்' கடைக்குத்தான் போக வேண்டும்.
இங்குதான், 12 கிலோ எடை கொண்ட 'பாகுபலி' சமோசா தயாரிக்கப்படுகிறது, விற்கப்படுகிறது.
கவுஷல் சுவீட்ஸ் கடையை 3-வது தலைமுறையாக நடத்தி வருபவர் சுபம் கவுஷல். இவருக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து வாடிக்கையாளர்களை கவர ஆசை.
அப்போதுதான், பிரமாண்ட 'பாகுபலி' சமோசாவை தயாரிக்கும் யோசனை பிறந்திருக்கிறது.
முதலில் 4 கிலோ சமோசாக்களையும், அடுத்து 8 கிலோ சமோசாக்களையும் தயாரித்தவர், தற்போது 12 கிலோ சமோசாவில் வந்து நிற்கிறார். இதன் உள்ளே இடப்படும், உருளைக்கிழங்கு, பட்டாணி, வாசனைப்பொருட்கள், பன்னீர் மற்றும் உலர்பழங்கள் அடங்கிய மசாலாவின் எடை மட்டும் 7 கிலோ.
ஒரு 'பாகுபலி' சமோசாவை தயாரிப்பதற்கு சமையல் கலைஞர்களுக்கு 6 மணி நேரம் பிடிக்கிறது. அதில், இந்த பிரமாண்ட முக்கோண வடிவத்தை எண்ணெயில் பொரிப்பதற்கு மட்டும் ஆகும் ஒன்றரை மணி நேரமும் அடக்கம்.
இந்த பாகுபலி சமோசா அறிமுகம் செய்யப்பட்டதுமே 'ஹிட்' ஆகிவிட்டது. பலரும் தங்கள் பிறந்தநாளின்போது 'கேக்'குக்கு பதில் இந்த சமோசாவை வாங்கி வெட்டி பகிர்ந்து உண்டு மகிழ்கிறார்களாம்.
இதுவரை சுமார் 50 'பாகுபலி' சமோசாக்கள் ஆர்டரின் பேரில் தயாரித்து வழங்கப்பட்டிருக்கின்றனவாம். வெளிமாநிலங்களில் இருந்துகூட, இதை தயாரித்து கொடுக்க முடியுமா என்று விசாரிக்கிறார்களாம். சமூக வலைதளங்களிலும் இது சரமாரியாய் 'லைக்'குகளை அள்ளுகிறது.
இப்படி 'பாகுபலி'யின் பலே பிரபலத்தால் உற்சாகம் அடைந்திருக்கும் கடைக்காரர் கவுஷல், ஒரு அதிரடி போட்டியையும் அறிவித்திருக்கிறார். அதாவது, தனிநபராய் அரை மணி நேரத்தில் இந்த சமோசாவை சாப்பிட்டு முடித்து ஏப்பம் விடுபவர்களுக்கு ரூ.71 ஆயிரம் பரிசு.
கவுஷலின் கடையில் கம்பீரமாய் 'அமர்ந்திருக்கும்' பாகுபலி சமோசா, 'என்னை சாப்பிட்டு பார்' என்று மீரட் நகர மக்களை செல்லமாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
எல்லாம் சரி, ஒரு பாகுபலி சமோசாவின் விலை என்ன என்று கேட்கிறீர்களா? ரூ.1500.
ஆனால் சமோசா பிரியர்களுக்கு இந்த விலை ஒரு விஷயமே இல்லை என்பதற்கு, 'பாகுபலி'க்கு வந்துகொண்டே இருக்கும் ஆர்டர்களே சாட்சி.
- வெயில் சுட்டெரிப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
- தண்ணீர் தொடர்பான நோயால் உயிரிழந்திருக்கலாம் என விசாரணைக்குழு தகவல்
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் திடீரென அங்குள்ள மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.
மருத்துவமனையில சிகிச்சை பலனளிக்காமல் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15-ந்தேதி 23 பேரும், 16-ந்தேதி 20 பேரும், நேற்று முன்தினம் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பநிலை 100 டிகிரியை தாண்டிய வண்ணம் உள்ளது. இதுதான் உயிரிழப்பிற்கு காரணம் என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆனால், இதுகுறித்து விசாரணை நடத்த லக்னோவில் இருந்து சீனியர் டாக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கடும் வெயில் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் முதலில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அதிக வெயில் தாக்கத்திற்கான முதல் அறிகுறி இல்லை. தண்ணீர் தொடர்பான நோய் பாதிப்பாக இருக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளது.
லக்னோ குழுவில் இடம் பிடித்துள்ள சீனியர் டாக்டர் ஏ.கே. சிங் கூறுகையில் ''உயிரிழப்புகள் தண்ணீர் தொடர்பான நோயால் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக ஏற்பட்டதா? என விசாரணை நடத்தப்படும். மேலும், அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை பரிசோதனை செய்ய வர இருக்கிறார்கள்'' என்றார்.
பொதுமக்கள் உயிரிழப்புக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதியநாத் ஆட்சியை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ''அரசின் கவனக்குறைவால் உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிக வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கனும். கடந்த 6 வருடங்களில் ஒரு மாவட்ட மருத்துவமனை கூட கட்டப்படவில்லை. உயிரிழந்தவர்கள் மிகவும் ஏழை விவசாயிகள். அவர்கள் சரியான நேரத்தில் உணவு, மருந்துகள், சிகிச்சை பெற முடியாததுதான் அதற்கு காரணம்'' எனத் தெரிவித்துள்ளார்.
- உத்தர பிரதேசத்தில் வெப்ப அலையால் ரெயில் தண்டவாளம் வளைந்து நெளிந்து போனது.
- இதைக்கண்ட ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.
லக்னோ:
வட இந்தியாவின் சில மாநிலங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பக் காற்று வீசுகிறது. வெப்ப அலையின் தாக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் - பிரதாப்கர் வழித்தடத்தில் உள்ள நிகோஹான் ரெயில் நிலையத்தை நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை நெருங்கியது. இந்த வேளையில் வழக்கமாக செல்லும் தண்டவாளத்தில் ஒரு ரெயில் நின்றது. இதனால் நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் லைன் தண்டவாளத்தில் மாற்றி விடப்பட்டது.
இதனால் அந்த ரெயில் லூப்லைனில் செல்ல வேண்டி இருந்தது. அப்போது தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது வரும் அதிர்வில் மாற்றம் உருவானது. இதனால் சந்தேகத்தில் பைலட் ரெயிலை இயக்காமல் நிறுத்தினார். உடனே அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
அப்போது தண்டவாளங்கள் சீர்குலைந்து இருப்பது தெரியவந்தது. கடும் வெப்பத்தின் காரணமாக தண்டவாளங்கள் உருகி வளைந்து நெளிந்து இருந்தது. இதையடுத்து ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்த ரெயில் மாற்று தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அதோடு லூப் லைனில் பிற ரெயில்கள் இயங்காமல் உடனடியாக தடை செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த லக்னோ கோட்ட ரெயில்வே மேலாளர் (டிஆர்எம்) சுரேஷ் சப்ரா உத்தரவிட்டுள்ளார்.
பைலட்டின் சாமர்த்தியத்தால் ரெயில் விபத்து தடுக்கப்பட்டதால், அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- 23ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
- ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ராஷ்டிரிய லோக் தளம் ஆதரவு அளிக்கும்.
லக்னோ:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்றால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கணித்துள்ளனர். இதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளை அணிதிரட்டும் முயற்சிகள் அகில இந்திய அளவில் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 23ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்தும் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த கூட்டணிக்கு தலைமை மற்றும் பிரதமர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இக்கூட்டம் குறித்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் ராமாஷிஸ் ராய் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ராஷ்டிரிய லோக் தளம் ஆதரவு அளிக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை எங்கள் கட்சி அங்ககீரிக்கும். அதேசமயம், காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த ஒரு கூட்டணியும் பாஜகவுக்கு எதிராக திறம்பட செயல்பட முடியாது என்பது எங்கள் கருத்து.
உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். சமாஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் இணைந்து பணியாற்றியிருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். எனினும், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருப்பதால், சமாஜ்வாடி, காங்கிரஸ் மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து மாற்றத்தை கொண்டு வர ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் விருப்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனிக்பாலுக்கும், சுமன் பாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- மனைவியை கொல்வதற்காக அனிக்பால் துப்பாக்கி வாங்கி வந்து ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது.
அலகாபாத்:
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிக்பால் (வயது 40). இவரது மனைவி சுமன் பால் (வயது 38). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனிக்பால் விவசாய தொழில் மேற்கொண்டு வந்தார்.
அனிக்பாலுக்கும், சுமன் பாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் சுமன் பாலின் செல்போன் காணாமல் போய்விட்டது. கணவர்தான் செல்போனை எடுத்து மறைத்து வைத்திருப்பதாக சுமன் பால் சந்தேகப்பட்டார்.
இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதனால் மனைவியை கொலை செய்ய அனிக்பால் திட்ட மிட்டார். இதற்காக அவர் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வாங்கி ரகசியமாக வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் சாமி கும்பிட்டுவிட்டு மனைவி சுமன் பாலிடம் வந்த அனிக்பால் சமரசம் பேசுவது போல நடித்தார். பிறகு மனைவியை கட்டிப்பிடித்து கொண்டு திடீரென அவரது முதுகில் துப்பாக்கியால் சுட்டார்.
சுமன்பாலின் முதுகை துளைத்த குண்டு அவரது உடலை துளைத்தபடி வெளியே வந்தது. அது அனிக்பாலின் வயிற்றுக்குள் பாய்ந்தது. மிக மிக அருகில் இருந்து சுடப்பட்டதால் அந்த ஒரு குண்டு கடுமையான வேகத்தில் கணவன், மனைவி இரண்டு பேரின் உடலையும் துளைத்து ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தது.
துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிக்பால், சுமன் பால் இருவரையும் மருத்துவ மனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.
மனைவியை கொல்வதற்காக அனிக்பால் துப்பாக்கி வாங்கி வந்து ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆஷியாவுக்கும் கள்ளக்காதலன் சுஹைலுக்கும் இடையேயான தகாத உறவு குறித்து சாகருக்கு தெரியவந்துள்ளது.
- சாகரை கள்ளக்காதலனின் உதவியுடன் கொலை செய்ததாக ஆஷியா போலீசிடம் வாக்குமூலம்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாகர். இவரது மனைவி ஆஷியா. இந்நிலையில், சாகர் கடந்த 6ம் தேதி முதல் காணாமல் போயுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் சாகரை தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் சாகரை செப்டிக் டேங்கில் இருந்து சடலமாக மீட்டனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், மனைவி ஆஷியாவே சாகரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சாகரை கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசியது தெரியவந்துள்ளது. ஆஷியாவுக்கும் கள்ளக்காதலன் சுஹைலுக்கும் இடையேயான தகாத உறவு குறித்து சாகருக்கு தெரியவந்துள்ளது. இதனால், சாகரை கள்ளக்காதலனின் உதவியுடன் கொலை செய்ததாக ஆஷியா போலீசிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் ஆஷியா மற்றும் கள்ளக்காதலன் சுஹைல் ஆகியோரை கைது செய்தனர்.
- நகர் முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அயோத்தி, புதிய அயோத்தியாக மாறிவிட்டது.
அயோத்தி :
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உலகிலேயே மிக அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி மாறும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், '500 ஆண்டு காத்திருப்புக்குப்பின் ராம பிரானின் சொந்த கோவிலில் அவரது சிலையை நிறுவுவது முக்கிய மைல்கல்களில் ஒன்றாக இருக்கும். உலக அளவில் அயோத்தியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வானது ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்' என தெரிவித்தார்.
மேலும் அவர், 'அயோத்தியின் பிரதான ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பெரிய நகரமும் அயோத்தியுடன் இணைக்கப்படும். அயோத்தி, புதிய அயோத்தியாக மாறிவிட்டது. நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் முடிவடையும்போது, உலகிலேயே மிகவும் அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி அங்கீகரிக்கப்படும்' என்றும் கூறினார்.
- சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து சடலங்களை மீட்டனர்.
- முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சங்கீதா (38). இவருக்கு 10 வயது முதல் ஒரு வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு சங்கீதாவும் அவரது 5 குழந்தைகளும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். சங்கீதாவின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் வீட்டின் வெளியே படுத்துள்ளனர்.
அப்போது, திடீரென வீட்டின் தகர கொட்டகை மீது தீ பரவியுள்ளது. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிந்துள்ளது. இதை கண்டு அதிர்ந்த சங்கீதாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்கு சிலிண்டர் வெடித்து வீட்டிற்குள் இருந்த சங்கீதா உள்பட 6 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து சடலங்களை மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசரணையில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ பிடித்துள்ளது என்றும் பின்னர் தீ பரவியதில் சிலிண்டர் வெடித்து சிதறியதும் தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து, தீ விபத்தில் உயிரிழந்த சங்கீதா மற்றும் அவரது குழந்தைகளின் மறைவுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
- காரை ஓட்டிய அம்ஜத் மிக கடுமையான வார்த்தைகளால் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் தாக்கியுள்ளார்.
- தகவல் அறிந்து கொந்தளித்த அப்பகுதி கிராம மக்கள், மிர்சாப்பூர்-பிரயாக்ராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் நகரத்தில், அரசியல் தொடர்பான வாக்குவாதத்தின்போது கார் டிரைவர் ஒருவர், பயணியை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வாடகை சொகுசு காரில் பயணித்த ராஜேஷ் துபே (52) எனும் பயணி ஒருவருக்கும், அந்த கார் டிரைவர் அம்ஜத் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து இருவரும் காரசாரமாக பேசி விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அம்ஜத் விமர்சித்துள்ளார். இதற்கு ராஜேஷ் துபே ஆட்சேபம் தெரிவித்ததுடன், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக பேசி உள்ளார். வாக்குவாதம் கடுமையானதை தொடர்ந்து, ராஜேஷை அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்ட ஓட்டுனர் அம்ஜத், திடீரென அவர் மீது காரை ஏற்றினார். இதில் தலை நசுங்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மிர்சாபூர் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் மிஷ்ரா தெரிவித்ததாவது:
ராஜேஷ் துபே, மிர்சாபூரில் நடைபெற்ற தனது சகோதரர் ராகேஷ் துபேயின் மகனின் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் திரும்பியுள்ளார். இவரோடு உடன் பயணித்த உறவினரின் தகவல்படி, ராஜேஷிற்கும் சக பயணிகளுக்கும் இடையே அரசியல் விவாதம் எழுந்துள்ளது. அப்போது காரை ஓட்டிய அம்ஜத் மிக கடுமையான வார்த்தைகளால் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் தாக்கி பேசியுள்ளார். மோடியையும், யோகியையும் அவமானப்படுத்தும் விதமாக பேசிய அம்ஜத்திற்கு ராஜேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காரில் உள்ள மற்ற பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் அவரவர் இடம் வந்ததும் ஒவ்வொருவராக இறங்கியுள்ளனர்.
அம்ஜத் காரை பாதி வழியிலேயே நிறுத்தி ராஜேஷை இறங்கச் சொன்னதாக தெரிகிறது. ராஜேஷ் துபே இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் தனது சொகுசு காரை வேகமாக அவர் மேல் மோதி, நசுக்கி கொன்றதாக தெரிகிறது.
தகவல் அறிந்து கொந்தளித்த அப்பகுதி கிராம மக்கள், மிர்சாபூர்-பிரயாக்ராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட குற்றவியல் நடுவரும், கண்காணிப்பாளரும் அங்கு வந்து உடனே குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பல அதிகாரிகள் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அரசியல் தொடர்பான விவாதம் கொலையில் முடிந்தது மிர்சாபூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டும்போது பாண்டே குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
- காரை விட்டுவிட்டு தப்பி ஓடிய குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி பொதுப்பணித்துறையின் ஜூனியர் இன்ஜினியர் ஒருவருக்கு சொந்தமான கார் மோதி 3 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த காரை ஓட்டுனராக பணிப்புரிந்து வந்த அஜீத் குமார் பாண்டே ஓட்டி வந்துள்ளார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டும்போது பாண்டே குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
கான்பூர் தேஹாட்டில் உள்ள சிக்கந்தராவில் ஜூனியர் இன்ஜினியரின் குடும்பத்தை இறக்கிவிட்டு அயோத்திக்கு பாண்டே சென்று கொண்டிருந்தபோது, லக்னோ-எட்டாவா சாலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுரேந்திர சிங் (62), அஹிபரன் சிங் (63), கசீதே யாதவ் (65) ஆகியோர் மீது மோதியதாக, போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்து காரை விட்டுவிட்டு தப்பி ஓடிய குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
- பூஜாவின் தாய் ஷீலா தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரேலி:
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பதே கஞ்ச் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சந்தை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபால் லோதி (வயது 40). இவர் கடந்த 2012-ல் பூஜா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணா பால் கடந்த மாதம் ஒரு கொலை முயற்சி வழக்கில் சிக்கினார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
தனது வீட்டுக்கு சென்ற அவரிடம், அவரது மனைவி முன்பு போல பாசம் காட்டவில்லை. இதனால் மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அவரின் மைனர் குழந்தைகள் முன்னிலையில் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்தார்.
இதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா பால் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு மனைவியை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜா வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனால் விடாமல் துரத்தி சென்று பூஜாவை ஓட, ஓட சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.
இதனை தடுக்க வந்த மனைவியின் தோழி முன்னா (30) என்பவர் மீதும் தோட்டா பாய்ந்தது. அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
போலீசார் கிருஷ்ண பாலை கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனது மனைவி தன்னை ஏமாற்றி விட்டார். அதனால் அவரை சுட்டுக்கொலை செய்தேன் அவள் இறக்க தகுதியானவள். அவளைக் கொன்றதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இது குறித்து பூஜாவின் தாய் ஷீலா தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு நாட்டு துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப்பட நகர் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று பேஷன்ஷோ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் ஏராளமான மாடல் அழகிகள் விதவிதமான ஆடை அணிந்து 'ரேம்ப்வாக்' வந்தனர்.
24 வயதான வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ரேம்ப்வாக் சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இரும்பு தூண் ஒன்று மேலிருந்து சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் வன்சிகா சோப்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
மின் விளக்குகளுக்காக அந்த இரும்புதூண் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், எதிர்பாராத விதமாக அந்த தூண் மேலிருந்து சரிந்து விழுந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் பாபிராஜ் என்ற வாலிபர் காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பேஷன்ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.






